என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முககவசம்"

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு இலவச முககவசம் மற்றும் இனிப்புகளும் வழங்கி கொரோனா விழிப்புணர்வு.
    • பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்.

    தஞ்சாவூர்:

    சீனா , அமெரிக்காவில் மீண்டும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    பிரதமரின் வேண்டு கோள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் சாண்டா கிளாஸ் என்ற ழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பொதுமக்களிடம் இலவச முககவசம் மற்றும் இனிப்புகளும் வழங்கி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அந்த வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . ஜோதி அறக்கட்டளையை சேர்ந்த மாணவ தன்னார் வலர்கள் நாசிகா மற்றும் சிவனாசிக்வரன் ஆகியோர் சாண்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்திலும் நேரு வேடத்திலும் பொது மக்களுக்கு முககவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை பின்பற்ற கேட்டுக்கொண்டு இனிப்பு களை வழங்கினார்கள் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
    • சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் முக கவசம் பற்றாகுறையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா வில் உள்ள ஓமலூர் காடையாம்பட்டி கருப்பூர் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் தாரமங்கலம் நகராட்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்களும் மற்றும் அதனை சுற்றியுள்ள 67 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இங்கு பிரசவம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு முக கவசம் இருப்பு இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தனியார் மருந்து கடைகளில் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடித்து வருகிறது.

    இதனால் ஒரு சில பணியாளர்கள் முககவசம் அணியாமலேயே பணி யாற்றி வருகின்றனர். எனவே உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்கள் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு அவ்வப்போது முகக்க வசங்களை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மருத்துவமனை டீன் நோயாளி, உடன் வந்தவர்களுக்கு அறிவுறுத்தல்

    அரியலூர்,

    நாட்டில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் டாக்டர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் உடன் வந்தவர்களில் பலர் முக கவசம் அணிந்து வந்தனர். சிலர் முக கவசம் அணியவில்லை. கட்டாயம் முககவசம் அணிந்தால் மட்டுமே நோய் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனையின் டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது
    • பரப்பப்பட்டது வதந்தி என்பதை உறுதிசெய்த போலீசார் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்

    திருப்பூர் : 

    தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது என எச்சரிக்கை அலர்ட் விடுத்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், அரசு மருத்துவமனையில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிவது மட்டுமே சிறந்த தற்காப்பு என்ற என்ற நிலையில், மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளோம். வார்டுகளில் இதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்களும் எழுதி வைத்துள்ளோம் என்றனர்.இந்தநிலையில் திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களால் தாக்கப்படுகின்றனர் என பரவிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது.அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. பரப்பப்பட்டது வதந்தி என்பதை உறுதிசெய்த போலீசார் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஹோலி கொண்டாட சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் திரும்ப துவங்கினர். தற்போது வருகை அதிகரித்துள்ளது.திருப்பூர் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும், உள்ளூர் மற்றும் உளவுப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரெயிலில் வரும் வட மாநில தொழிலாளர்கள், எந்த ஊரில் இருந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தி கணக்கெடுக்கின்றனர்.போலீசார் கூறுகையில், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர். தினமும் 600 முதல் 1,000 தொழிலாளர்கள் வரை வருகின்றனர் என்றனர்.பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து திருப்பூருக்கு தினமும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களும், பொது மக்களும் வரும் நிலையில்,அவர்களில் 90 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை. ெரயில்வே ஊழியர்களிடம் கேட்ட போது, பயணிகள், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுரையை வழங்க தங்களுக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை என்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின் றனர் என சுகாதாரத் துறையினர் கணக்கு கூறுகின்றனர். தொற்றுப்பரவல் அதிகரிக்கும் முன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு மருத்துவமனை வாசலில் முக கவசம் வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், கொரோனா சமயத்தில் அதிகளவில் வியாபாரம் நடந்தது. தினமும், 500 முதல் 600 ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்போது, அனைத்து கடைகளிலும் முக கவசம் விற்கப்படுவதால், வியாபாரம் மந்தம் தான். தற்போது முக கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறேன் என்றார்.திருப்பூர் சந்திப்பு சாலையில், சாலையோரம் கடை அமைத்து முக கவசம் விற்று வரும் பெண் வியாபாரி கூறுகையில், கொரோனாவுக்கு முன், மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கொரோனா ஊரடங்கில் முக கவசம் விற்பனையில் ஈடுபட்டேன். சிறு குழந்தைகள் துவங்கி மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள், வயது முதிர்ந்தோர் என அனைவருக்குமான முக கவசம் விற்கிறேன். கடந்த சில மாதங்களாக முக கவசம் விற்பனை மந்தமாகவே உள்ளது என்றார்.  

    • தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை.
    • கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம்.

    சென்னை :

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலுக்கு கடிவாளம் போடும்வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக முககவசம் அணிவது மேலும் சில இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம். வெளியே கட்டாயம் செல்லவேண்டும் என்றால் அவசியம் முககவசம் அணிந்து செல்லவேண்டும். மேலும் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும். வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அவர்களை வெளியே அழைத்துச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு முககவசம் அணிந்து அழைத்துச்செல்லவேண்டும். காற்றோட்டத்துடன் திறந்தவெளி அரங்கமாக இல்லாமல் மூடப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும். முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே முககவசம் அணியவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது.
    • கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவை,

    தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினமும் 15 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது. கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாவட்டத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகம், தியேட்டர், பஸ்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனால், கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
    • முககவசம் அணிய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களில் 38 பேர் குணமடைந்தனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:- மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வெள்ளகோவிலில் 82 வயதான முதியவர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இறந்துள்ளார். அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேணடும். வணிக வளாகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தன்சுத்தம் பேணுங்கள் என்றார். திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் கனகராணி கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நோயாளிகளை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் முககவசம் வழங்கி வருகிறோம். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோ னா சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், முழு கவச உடைகள் உள்ளிட்டவை தயாராக உள்ளது. கொரோனா சிறப்பு வார்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள் உள்ளிட்டவை தயார்படுத்தி வைத்துள்ளோம் என்றார்.

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 85 படுக்கை வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முன்னேற்பாடு தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தற்போது ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

    கொரோனா முன்னேற்பாடு நடவடிக்கை யாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 15 படுக்கை வசதிகள் என மொத்தம் 85 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்து வர்கள் ஆலோச னையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் போது எந்த நோயும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.

    இவர் அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செந்தில் குமார், மருத்துவமனை கண்காணிப் பாளர்கள் மலர்வண்ணன், மனோஜ்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
    • உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

    உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.

    உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.

    இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.

    ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.

    இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

    ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.

    இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார். 

    • புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

    இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×