search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் மோசடி"

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

    அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

    மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

    அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

    அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

    ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
    • பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம்.

    திருச்சி:

    ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை முதலில் தூண்ட வேண்டும்...

    இங்கு சிலர் கனகச்சிதமாக அந்த வேலையை செய்து முடிக்கிறார்கள்.

    வங்கிகள், பொது காப்பீ ட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால் மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொண்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும். நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்தால் உடனடியாக குபேரன் ஆகிவிடலாம் என்றெல்லாம் தூண்டில் போடுகிறார்கள்.

    இந்த மோசடி பேர்வழிகள் நேரடி பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட, ஏதோ ஒருவகையில் உறவினராகவோ, நண்பர்களாகவோ இருப்பவர்களை தங்களுடன் சேர்த்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் மூலம் அப்பாவிகளுக்கு வலைவிரிக்கிறார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் சிக்கி தங்கள் கையில் இருக்கும் பொருளாதாரத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்கி சென்னை, திருச்சி, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் நாளும் பணத்தை இழந்து காவல் நிலையங்களில் காத்து நிற்கிறார்கள்.

    திருச்சியில் நடப்பு ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 49 லட்சம் தொகையை இழந்து சைபர் கிரைம் போலீசிடம் சரணடைந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

    திருச்சி தில்லை நகரில் சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் தாய் வெளிநாட்டு கார் பரிசு விழுந்ததாக தனது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை வைத்து சம்பந்தப்பட்ட மோசடி பேர் வழியை தொ டர்பு கொண்டார். அதன் விளைவாக அந்த பெண்மணியின் கணவர் அயல்நாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பிய ரூ.12 லட்சம் பணத்தை மோசடி பேர்வழி கூறிய வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக செலுத்தி ஏமாந்து நிற்கிறார்.

    இந்த மோசடி ஆசாமி முதலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுக் கார் பரிசு விழுந்ததாக கூறி ஜிஎஸ்டி, ரிசர்வ் பேங்க் அனுமதி, சர்வீஸ் டாக்ஸ் என பல யுக்திகளை கையில் எடுத்து சில லட்சங்களை கறந்திருக்கிறான்.

    கேட்க... கேட்க பணம் வரவும் சுதாகரித்துக்கொண்ட அந்த ஆசாமி நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதால் மேலும் ரூ. 8 லட்சம் பரிசு விழுந்ததாக புரூடா விட்டு மொத்தமாக ரூ. 12 லட்சம் வரை விழுங்கி விட்டான்.

    நேற்றைய தினம் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரவீன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கூடுதல் வட்டித்தொகைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் கும்பலிடம் ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்தை இழந்துவிட்டார்.

    இது போன்ற மோசடிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மோசடி பேர்வழிகள் யுக்திகளை மாற்றி மிரட்டும் வேலைகளையும் செய்ய தொடங்கியிருக்கும் தகவல் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    அதற்கு இப்போது கடன் செயலி (லோன் ஆப்) என்ற ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன்களில் ப்ளே ஸ்டோரில் இவ்வாறான கடன் செயலிகள் நிரம்ப இருக்கிறது.

    இதனை நாம் டவுன்லோட் செய்து அப்டேட் கொடுத்தால் வாடிக்கையாளரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை பதிவிட சொல்கிறார்கள்.

    பின்னர் நம்முடன் நட்பாக பழகி நமது காண்டாக்ட் லிஸ்ட் அத்தனையும் எடுத்து விடுகிறார்கள்.

    பின்னர் நாம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டு அப்ளை செய்தால் அடுத்த சில நிமிடங்களில் பிடித்தம் போக ரூ.3000 ரூ.4000 நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறார்கள்.

    அதன்பின்னர் அந்த கும்பல் ஒரு வாரத்தில் இந்த தொகைக்கான வட்டியுடன் ரூ. 5500, 6000 செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார்கள்.

    இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்தால் அந்த மோசடி பேர்வழிகள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் இப்போது பாதிக்கப்பட்டவர்களை நிலைகுலைய செய்து வருகிறது.

    அது என்னவென்றால், கடன் கேட்டு அந்த மோசடி பேர்வழிகளின் செயலில் நாம் பதிவிடும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றில் இருக்கும் போட்டோக்களை எடுத்து மார்பிங் செய்து பெண்ணாக இருந்தால் ஆணுடனும், ஆணாக இருந்தால் வேறு பெண்ணுடனும் தவறாக சித்தரித்து நமது காண்டாக்ட் லிஸ்டில் அந்த ஆபாச பதிவை வாட்ஸ் அப்பில் பதிவிடுகிறார்கள். முதலில் மிரட்டுகிறார்கள். அதற்கு அடிபணியவில்லை என்றால் வீடியோக்களை அனுப்பி விடுகிறார்கள்.

    இவ்வாறு சைபர் கிரைம் போலீசாரிடம் தினமும் நான்கு முதல் ஐந்து புகார்கள் வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் இளம்பெண்கள், குடும்ப பெண்கள், ஆண்கள் ஆத்திர அவசரத்திற்கு கடன் பெற்று மோசடி கும்பலிடம் சிக்கி கண்ணீர் வடிக்கின்றனர்.

    பொதுவாக இந்த மாதிரியான செயலியை தேடும் போது ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிறுவனம் தானா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே கடனுக்கு அப்ளை செய்ய வேண்டும். மோசடி பேர்வழிகள் ஏதோ ஒரு ரூபத்தில் நமது நெருக்கடிகளை சாதகமாக்கி நெருங்குவார்கள். நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

    இது போன்ற மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து இயங்குகிறது. ஆகவே குற்றவாளிகளை பிடிப்பது கடினமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம். இல்லை என்றால் அதுவும் இயலாமல் போய்விடுகிறது. இவ்வாறு மோசடி கும்பலிடம் சிக்குபவர்கள் உடனடியாக புகார் அளித்தால் நிவாரணம் கிடைக்கும் என்றார்.

    • குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்காக போலீஸ் நிலையம் எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர்.

    இதில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பல்வேறு ஆன்லைன் செயலிகளில் இருந்து லோன் வாங்கியுள்ள அவர், அதை பலமுறை திருப்பி அளித்தும் உள்ளார். ஆனால் தாங்கள் இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து அவருக்கு நிர்பந்தம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் நிர்பந்தம் மிரட்டல் ஆக மாறியதால், குருநாத் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் வாய்விட்டு கெஞ்சியுள்ளார். தன்னால் இதற்கு மேல் முடியாது என்றும், நிறைய பணம் கொடுத்து விட்டேன் என்றும், இதற்கு மேல் என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    ஆனால் அவரது இந்த நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோசடி கும்பல், குருநாத்தின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உள்ளது. உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை கட்டா விட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள் உனது தாய், தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக குருநாத்தின் தந்தை ஸ்ரீதரன், ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனுடைய சாவுக்கு காரணமான மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்துள்ளார்.

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களது செல்போனுக்கு வங்கியில் இருந்து ஓ.டி.பி. எண் வந்திருக்கும்.
    • யார் ஓ.டி.பி. எண்ணை கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    ஆண்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்து வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் தற்போது போலியான ஏ.டி.எம் கார்டுகளை தபாலில் அனுப்பி வங்கியில் உள்ள பணத்தை சுருட்டும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் முதலில் ஆன்லைனில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான தகவல்களை சேகரிப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களது வீட்டு முகவரிக்கு தபாலை அனுப்புவார்கள். அதில் போலியான ஏ.டி.எம். கார்டுகளை அனுப்பி வைப்பார்கள்.

    பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களது செல்போனுக்கு வங்கியில் இருந்து ஓ.டி.பி. எண் வந்திருக்கும். அதனை உடனே சொல்லுங்கள். அப்போதுதான் உங்களது புது ஏ.டி.எம். கார்டு செயல்பட தொடங்கும். பழைய ஏ.டி.எம். கார்டும் செயல்படும் என்று பயமுறுத்தும் வகையில் பேசுவார்கள். இதை நம்பி நீங்கள் ஓ.டி.பி. எண்ணை சொல்லிவிட்டால் போதும் அடுத்த சில நொடிகளிலேயே வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் மோசடி கும்பல் சுருட்டி விடும்.

    அதன் பிறகே சம்பந்தப்பட்ட நபர் ஏமாற்றப்பட்டதை உணர்வார். அதற்குள் மோசடி ஆசாமி சுருட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பான். அவன் எங்கு இருக்கிறான் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மோசடி கும்பல் மிகவும் உஷாராக செயல்படுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எனவே பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போனில் யார் ஓ.டி.பி. எண்ணை கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் வங்கியில் உள்ள பணம் பத்திரமாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.
    • மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சியில் சமீபகாலமாக பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயர்களில் ஆன்லைன் மோசடி கும்பல் இளைஞர்களின் பணம் பறிப்பதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு அதிக புகார்கள் வருகின்றன. இதற்கிடையே திருச்சி துவாக்குடி பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இந்த மோசடி கும்பலிடம் ஒரு ரூ. 49 லட்சம் பணத்தை இழந்து தவித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த அதிகாரி மாதம் 2 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுகிறார். மேலும் குடும்பத்திலும் நல்ல வசதி உள்ளது. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சில லிங்குகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய அவர் முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ. 15,000 லாபமாக வந்து சேர்ந்தது. உடனே அந்த பணத்தை அவர் தனது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டார்.

    இதனால் அவருக்கு மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு தவணையாக ஆன்லைன் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ. 49 லட்சம் தொகையை செலுத்தினார். இந்த தொகைகளை அவர் முதலீடு செய்து ஒவ்வொரு முறை டிரேடிங் செய்யும் போதும் இரட்டிப்பு தொகையை திரையில் காண்பித்துள்ளனர்.

    ஆனால் அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அந்த தொகையை மோசடி கும்பல் கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு மாற்றி பெல் அதிகாரியை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பின்னர் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதனால் அதிர்ச்சி அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் இழந்த தொகையை மீட்க முடியவில்லை.

    இதுபோன்ற தினமும் புகார்கள் வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

    ரூ. 30 ஆயிரம், 50 ஆயிரம், ரூ. ஒரு லட்சம் என அவர்கள் இழந்து நிற்கிறார்கள்.

    இந்த மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து அதிகம் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களை பிடிப்பது என்பது போலீசாருக்கு சவால் ஆனதாக உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்பு வைத்துக் கொண்டு மோசடி செய்யும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக எளிதில் மாற்றி விடுகிறார்கள்.

    இந்த மோசடி தொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் கூறும்போது,

    முதலில் நமது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை அல்லது கிரிப்டோ கரன்சி டிரேடிங் என்ற பெயரில் டெலிகிராம் வாயிலாகவோ வாட்ஸப் வாயிலாகவோ லிங்குகளை அனுப்புகிறார்கள். பின்னர் சில யூடியூப் வீடியோக்களை அனுப்பி சப்ஸ்கிரைப் பண்ணுங்க... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... என சொல்கிறார்கள். இதில் ஐந்தாறு டாஸ்க் வந்தவுடன் முதலீட்டு தொகைக்கு ஏற்ப ரூ.300, 600 என முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்புகிறார்கள்.

    ஓரிருமுறை கமிஷன் தொகை கொடுத்து நம்பி க்கையை ஏற்படுத்துகிறார்கள்.

    அதன் பின்னர் கமிஷன் தொகை சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு வராது. திரையில் காண்பிக்கும் தொகையை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு சிலர் பல லட்சங்களை தொடர்ச்சியாக முதலீடு செய்கிறார்கள். பின்னர் ஒருநாள் திடீரென அந்தத் தொகை முழுவதையும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி ஏமாற்றுகிறார்கள்.

    ஓரிரு முறை சொற்பத்தொகை முதலீடு செய்து லாபத்தை எடுத்துக்கொண்டு லிங்கை விட்டு வெளியேறியவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்றார்.

    • ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும் என மெசேஜ் வந்தது.
    • சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். சதீஷின் வாடஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும்.

    இதனை பகுதி நேரமாக அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் இலவச டாஸ்க் என்ற பெயரில் ரூ. 150 கமிஷன் பெற்றார். பின்னர் ரூ.1000 செலுத்தி கமிஷனாக ரூ.1300 ரூபாயும், பின்னர் ரூ 5 ஆயிரம் கட்டி ரூ.6500 பெற்றார்.

    இதை தொடர்ந்து சதீசை தொடர்பு கொண்ட ஒரு நபர் டாஸ்க்கில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டார்.

    பல்வேறு தவணைகளில் சதீஷ் ரூ.14.45 லட்சம் செலுத்தினார். அதற்கு பின்னர் இவர் முதலீடு செய்த தொகையும் கிடைக்கவில்லை. கமிஷனும் வழங்கப்படவில்லை.

    இவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது.
    • கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

    அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

    அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.

    • அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில் ஒரு பழைய குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) இருந்தது. அதனை விற்று விட்டு புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டில் உள்ள அந்த குளிர்பதன பெட்டியை புகைப்படம் எடுத்து, அது விற்பனைக்கு இருப்பதாக கூறி ஆன்லைன் நிறுவனமான 'ஓ.எல்.எக்ஸ்.' என்ற இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், பூர்ண சந்திரராவை தொடர்பு கொண்டு ஒருநபர் பேசினார். அப்போது அவர் தனது பெயரை அமித் சர்மா என்று கூறிக் கொண்டார். மேலும் தான் ஒரு ராணுவ வீரர் என்றும், உங்களது குளிர்பதன பெட்டியை வாங்க தான் முடிவு செய்திருப்பதாகவும் பூர்ண சந்திரராவிடம் அமித் சர்மா கூறினார். இதனை அவரும் நம்பினார்.

    மேலும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அதிக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது, தான் அனுப்பும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உங்களது வங்கி கணக்கு தகவல்களை தெரிவித்தால், அதன் மூலமாகவே பணம் அனுப்புவதாக கூறினார். இதையடுத்து, அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.

    அப்போது அவரது கணக்கில் இருந்த ரூ.99 ஆயிரத்தையும் எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதனால் பூர்ண சந்திரராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மூக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது35). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு டெலிகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் குறுத்தகவல் அனுப்பி இருந்தார்.

    அதில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதில் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால், அதிக கமிஷன் பணம் தருவதாக வந்தது.

    இதனை நம்பிய தமிழரசன் மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 89 ஆயிரம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்டு வேலை தருமாறு கேட்டார்.

    ஆனால், அந்த மர்ம நபரை சமூக வலைத்தளத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தமிழரசன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில் உள்ள கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீக் (22) என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த குறுத்தகவலை நம்பி அதிக கமிஷனுக்கு மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த நபரின் செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

    இதேபோன்று பெத்தமேலுபள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த சவீன் என்பவர் தனது செல்போனில் வந்த மெசேஜை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.14லட்சத்து 24 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    இந்த தொடர் மோசடிகளை குறித்து ஸ்ரீக் மற்றும் சவீன் ஆகியோர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
    • மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று செல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பர் போலவே பேசினார்.

    அப்போது அவர் தனக்கு அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பமுடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய மாணவி ஆண் நண்பர் கூறிய எண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பரை தொடர்பு கொண்டு மாணவி கேட்டபோதுதான் மோசடி நபர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

    போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோசடி நபர் தொழில்நுட்ப ரீதியாக மாணவியின் ஆண் நண்பரின் குரலை தெரிந்து கொண்டு வெளி மாநிலத்தில் இருந்து ஏமாற்றினாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
    • உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது :- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுகள் உங்களுக்கு வந்திருப்பதாக கூறி, அதை திருப்பி அனுப்ப உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, நீங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது. தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏ.டி.எம்.,.மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

    வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.இது போன்ற அழைப்புகள் வந்தால், நேரில் வருவதாக கூறி உடனடியாக போலீஸ் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும். மேலும் அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை சைபர் கிரைம் குற்றவாளிகள், உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் டேட்டாக்களை திருடுகின்றனர்.எனவே தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

    சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் சமூக வலைதள நட்பு வைக்க வேண்டாம்.எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டிஜிட்டல் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×