search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் சரிவு"

    • திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
    • கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல்-பழனி ரோட்டில் சவரிக்காடு பகுதியில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த கனமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாலையில் சீரமைப்பு பணிக்கு பிறகு இலகுரக வாகனங்கள், பஸ், லாரிகள் இயக்கப்பட்டன. தற்போது கடந்த 2 நாட்களாக பழனி மற்றும் கொடைக்கானலில் பெய்த கன மழை காரணமாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மீண்டும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி செங்குத்தாக உள்ளது. இதில் மண் மூட்டைகள் சரிந்துள்ளன. இவை 2 நாட்களுக்குள் சரிசெய்யப்படும். பணிகள் எச்சரிக்கையாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் சுவர் அமைத்தால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டாது. இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருச்சி ரோடு, மெயின்ரோடு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தீபாவளி பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    திண்டுக்கல் 56.2, பழனி 46, சத்திரப்பட்டி 10.4, நத்தம் 30, நிலக்கோட்டை 8, வேடசந்தூர் 44.5, காமாட்சிபுரம் 51, கொடைக்கானல் போட் கிளப் 31.2, ரோஸ்காடன் 28 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 349.8 மி.மீ மழை அளவு பதிவானது.

    • பச்சைமலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
    • வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியான எட்டெருமைபாலி அருவியில் செந்தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமான பச்சைமலையில் தொடர் கனமழை பொழிந்து வருகிறது. உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்திலிருந்து வனத்துறைக்கு சொந்தமான டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலை, சேதமடைந்திருந்த நிலையில், சமீபத்திய தொடர் கன மழையால் மண்சரிவு, சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலை குண்டும், குழியுமாக மாறி சாலை போக்குவரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.

    சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், பேருந்துகள் அடிக்கடி பழுதாவதுடன் டயர் பஞ்சராகி நடுவழியில் நிற்கும் அவலம் தொடர்கிறது. நேற்று மதியம் டாப்செங்காட்டுப்பட்டி சென்ற அரசுப் பேருந்து நடுவழியில் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து, ஒரு மணி நேரம் பாதிப்படைந்ததுடன், மாலைவாழ் பயணிகள் குழந்தைகளுடன், சாலையில் அமர்ந்திருந்தனர்.

    இந்த தொடர் கன மழையால் பச்சைமலையிலுள்ள அருவிகள், காட்டாறுகளில் செந்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியான எட்டெருமைபாலி அருவியில் செந்தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது. எனவே ஆபத்தை உணர்ந்து அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காட்டாற்று வெள்ளத்தால் மலைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையின் நடுவில் விழுந்தது.
    • இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தால் மலைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையின் நடுவில் விழுந்தது.

    இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏற்காட்டிற்கு வரும் வாகனங்கள் குப்பனூர் வழியாக திரும்பி விடப்பட்டது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மண் சரிவு ஏற்பட்ட மலைப் பாதையை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு துணை தலைவர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோகிலா, சின்னவெள்ளை, ஓன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் புஷ்பராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்காடு சேலம் சாலையில் போக்குவரத்து சுமார் 3 நாட்களுக்கு நிறுத்தப்படலாம்.
    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாறைகள் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்காடு சேலம் சாலையில் போக்குவரத்து சுமார் 3 நாட்களுக்கு நிறுத்தப்படலாம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், மேலும் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் வாகனத்தில் செல்ல முடியாததால் கலெக்டர் சிறிது தூரம் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    சாய்ந்து கிடந்த மர கிளைகளை அவரே அப்புறப்படுத்தினார், பின்னர் எதிரே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மலைப் பாதையில் எங்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என ஏற்காடு வரை சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்து வருகின்றனர். சீர் செய்யப்பட்டாலும் சாலையில் வழிந்தோடும் மழை நீர் நின்றவுடன் போக்குவரத்து அனுமதிக்கப்படும். மழை காலம் முடியும் வரை எந்த நேரத்திலும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 9 மணிமுதல் காலை 6 மணி வரை ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

    • ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மண் அகற்றப்பட்டது

    ஊட்டி

    . தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்தன. பருவமழை தீவிரம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் படகு இல்லம் செல்லும் சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையம் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரெயில் நிலையம் எதிரே உள்ள வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஜவுளிக்கடையில் இருந்த ஆடைகள் நீரில் மூழ்கி சேதமானது.

    . பணிகள் முடிந்தும், தொங்கும் நிலையில் இருந்த பாறைகள் அகற்றப்படவில்லை. கனமழையால் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பாறைகள் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் மரங்கள் விருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதேபோல் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய பலத்தமழை கொட்டி தீர்த்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை பெய்தது. கனமழையினால் ஏற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகளும் சேதம் அடைந்தன. இதனிடையே ஏற்காட்டுக்கு செல்லும் குப்பனூர் மலைச்சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    ஏற்காட்டில் இருந்து கொட்டசேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் ஆத்துபாலம் என்ற இடத்தில் மன்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண் சரிவை சீரமைக்கும் படியில் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏற்காடு மலைச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    • அகல ரெயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.
    • நாகை ெரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை - வேளாங்கண்ணி இடையே சுமார் 10 கி.மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை, கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண் இறுகும் தன்மையற்றதாக இருந்ததால், இத்தடத்தில் 30 கி.மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால், 10 கி.மீட்டர் தொலைவைக் கடக்க சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியது.

    இந்நிலையில், இந்தப்பாதையின் தரத்தை மேம்படுத்தி, ரெயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பது ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியும், அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைப்பெற்று வந்தது.இந்த நிலையில், இத்தடத்திலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூலம் இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன.

    இதனை தொடர்ந்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான 50 பேர் கொண்ட குழு நாகை ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து அதிவேக ரயிலை இயக்கி வேக சோதனை மேற்கொள்ளும் வகையில் 110 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் வேக சோதனை ரயில் அடுத்த 15 நிமிடங்களில் நாகையை வந்தடைந்தது.

    • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற 3,329 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது. இதுதொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டு உள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல இயற்கை பேரிடர்களினால் மரம் சாலைகளில் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த தேவையான பவர்சா உள்ளிட்ட எந்திரங்களும், ஜே.சி.பி. ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    அபாயகரமான மரங்களை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற 3,329 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×