search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிவிபத்து"

    • ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது.
    • வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் கோவிலூரை சேர்ந்த வைரமணி (வயது 44) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைக்கு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று 7 பேர் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த கட்டிடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றிய 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் தீக்காயத்தில் அலறி துடித்தனர். இதற்கிடையே வெடி விபத்தில் வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர சத்தம் அக்கம் பக்கம் கிராமங்கள் வரை கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தீக்காயமடைந்து கிடந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வெடிகளாக வெடித்தபடி இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்தின் அருகே செல்ல முடியவில்லை. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே தைல மரக்காடுகள் உள்ளன. இதிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். வெடி விபத்து நடந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இந்த விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. மேலும் கட்டிடத்தில் இருந்த வெடி பொருட்கள் சிதறின. தீயணைப்பு கருவிகள் தூக்கி வீசப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் கிடந்தன. தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்கள் சிதறி கிடந்தன.

    தீக்காயமடைந்தவர்களுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வெடி விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்திற்கான காரணம் என்ன? முதலில் தீ எங்கு பிடித்தது, வெடி விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு.
    • இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அமித் ஷா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து  ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • வெடி விபத்தில் காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்தது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • பட்டாசு குடோனில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.
    • வெடி விபத்தால் குடோன் அருகே இருந்த ஒரு ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்தது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கிருஷ்ணகிரி பழையப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் உள்ள காட்டிநாயனப்பள்ளி சாலையில் பட்டாசு குடோன் அமைத்து பட்டாசுகளை மொத்த விற்பனை செய்து வருகிறார்.

    அந்த பட்டாசு குடோனில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பட்டாசு குடோனுக்கு வழக்கம்போல் தொழிலாளிகள் வேலைக்கு வந்தனர். அப்போது திடீரென்று பயங்கர வெடித்து சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதில் குடோனில் பணிபுரிந்த 4 தொழிலாளிகள் தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

    வெடிவிபத்தில் சிக்கிய மீதமுள்ள 6 தொழிலாளிகள் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த வெடி விபத்தால் குடோன் அருகே இருந்த ஒரு ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் 10 பேருக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பட்டாசு குடோன் அருகே இருந்த ஓட்டல் இடிந்து விழுந்ததால், அதில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டுள்ளனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வெடி விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது வரும் வழியிலேயே மேலும் 4 பேர் உயிரிழந்தார். காயமடைந்த 6 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெடிவிபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன், மாவட்ட கலெக்டர் சரயு, மற்றும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடிவிபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

    கிருஷ்ணகிரி:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி, பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடிவிபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

    காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பட்டாசு குடோனில் பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் ரகு (வயது40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலை உரிமையாளர் ரகு மற்றும் அவரது உறவினர் முகேஷ்(20) ஆகியோர் கடந்த 6-ந்தேதி இரவு விதிகளை மீறி பட்டாசு ஆலை வெளியே பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இந்த வெடி விபத்தில் ரகு, முகேஷ் ஆகியோர் உடல் கருகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ரகு, முகேஷ் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    • சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி கந்தசாமி மகன் சதீஷ்குமார் தொழிலாளர்கள் நடேசன், பானுமதி ஆகியோர் பலியானார்கள்.

    பலத்த காயம் அடைந்த 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மகேஸ்வரி (32) என்பவர் இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் கந்தசாமி (வயது 63), வீரமணி (54), சடையாண்டி ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி (40). இவர்கள் பங்குதாரராக சேர்ந்து பூத நாச்சியார் கோவில் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் சதீஷ்குமார் (41), நடேசன் (50), பானுமதி (60) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் காயமடைந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை நேற்று சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் இறந்து போன 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் காசோலையையும் வழங்கினார்.

    இந்த நிலையில் பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மகேஸ்வரிக்கு காயம் அதிக அளவில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கந்தசாமி மற்றும் வீரமணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்.

    இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் மகேஸ்வரி நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. இதில் 2 அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து பட்டாசு விபத்தில் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில்குமார் என்பவர் பலியானது குறிப்பிடத்தக்கது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து பட்டாசு வெடி விபத்துக்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வைரமுத்து கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
    • விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து(வயது40). இவர் கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை.

    இந்த விபத்தில் கடையில் இருந்த தொழிலாளி கோட்டைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, வட்டாட்சியர் ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்தனர்.

    • மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
    • 80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கோட்டைப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று காலை ஊழியர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெடி மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது. இதில் அறையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கரமாக வெடித்தது.

    இந்த விபத்தில் தொழிலாளர்கள் கட்ட நாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (40) ஆகியோர் உடல் கருகினர். 80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி, முத்துப்பாண்டி ஆகிய இருவரும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். வெடி விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.
    • விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் கோட்டநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் லைசென்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(வயது60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(40) உள்பட 4 தொழிலாளர்கள் திரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதனைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத்தொடங்கின.

    இந்த விபத்தில் அறையில் இருந்த கருப்பசாமி, முத்துசாமி ஆகிய 2 பேர் சிக்கி வெடி விபத்தில் உடல் கருகினர். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், வச்சக்காரபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×