search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிதுரை மகன் கிருபா பொன் பாண்டியன் (வயது 34).

    இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை அடுத்த வல்லம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுத்திட்டு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதனால் பலத்த காயமடைந்த கிருபா பொன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மினி லாரி டிரைவரான காரைக்கால் திருநகரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாச முத்திரம் ஏரி பகுதியைச் சேர்ந்த மேத்யூ (26) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் உயிரிழந்தார். மேத்யூவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் சேதமடைந்த கார், லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழித்துறை:

    நித்திரவிளை எஸ்.டி.மங்காடு செம்மாவிளை பகுதியை சேர்ந்தவர் பெனடிக் ராஜ் (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந்தேதி பளுகல் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். பணி முடிந்து 4-ந்தேதி பெனடிக் ராஜ் வீட்டிற்கு திரும்பினார்.

    அவர் இருசக்கர வாகனத்தில் நடைக்காவு-சூழல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்தார். இதில் பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பெனடிக் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர்
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜா (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மூர்த்தி(23), பேச்சி மகன் ஆனந்த் (23). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள்.

    இந்நிலையில் 3 பேரும் நேற்று மாலையில் சக நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராமர் (23) என்பவரை தங்களது ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவை காண அழைப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் ஊத்துமலைக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மூர்த்தி, ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராமர், ஆனந்த் ஆகிய 4 பேரும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் இரவில் புல்லுக்காட்டு வலசை நோக்கி 4 பேரும் சென்று கொண்டிருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ்(30) என்பவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

    இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அப்போது ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    மற்ற 4 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஊத்துமலையை சேர்ந்த ராமர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய ராஜா, மூர்த்தி, ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக நொறுங்கியது.

    • காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கவின் (வயது 17). இவர் கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவிலில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவ மீனவர்கள் ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24).

    இந்த நிலையில் கவின், ஜஸ்வந்த், காளிதாஸ் ஆகிய 3 பேரும் நேற்று இரவு சின்னங்குடியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். பின்னர் இரவில் அங்கேயே தங்கினர்.

    இன்று காலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாசல் நோக்கி புறப்பட்டனர். அப்போது ராதாநல்லூர் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் உடைந்த நிலையில் மாணவர் கவின், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காளிதாஸ் பலத்த காயமடைந்தார்.

    தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கவின், ஜஸ்வந்த் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காகவும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது.
    • முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சஞ்சய் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று இரவு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ மீது பலமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்தார்.

    இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்செந்தூர் சாலை ஓரமாக சமீப காலமாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக முன் அறிவிப்பு இல்லாமல் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருவழி பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி வருகின்றனர்.

    இதன் காரணமாக தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது21). செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு அவர் உடன் படிக்கும்

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், கோகுல கண்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். செங்கல்பட்டு, ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து மேலமையூர் நோக்கி அண்ணா நகர் பிரதான சாலையில் சென்று கொண்டு இருந்தபோது திருமணி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான நந்தகோபால் என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார்.

    திடீரென சதீஷ் மற்றும் நந்தகோபால் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் அதிவேகமாக மோதியது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் விபத்து நடந்த இடம் அருகே சாலையில் நடந்து சென்ற திருமணியை சேர்ந்த மேஸ்திரி தணிகாசலத்தின் (46) மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ், மேஸ்திரி தணிகாசலம், ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாய் கிருஷ்ணன், கோகுல், பெயிண்டர் நந்தகோபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கூத்தனப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் 3 சிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.35 மணி அளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து ஜல்லிகர்களை ஏற்றிச் செல்வதற்காக கொண்டிருந்த டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது இரவு வேலை முடிந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ்சும் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அனுசோனை கிராமம் அருகே இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பிகார் மாநிலத்தை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் லாலுகுமார் (வயது 36) பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர்களை மீட்டு ஒசூரில் உள்ள தனியார் மருந்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கெலமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    • மணி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த வடமதுரை கொல்லம்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரது மகன் மணி (வயது23). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான மணி நேற்று இரவு கொல்லம்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    அதேபோல் திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரது மகன் மணிமாறன் (33). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தனிப்படை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.
    • விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேரடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). தேவகோட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது மனைவி சுஷ்மிதா(26). இவர்களுக்கு 3 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று சுப்பிரமணியன் குடும்பத்துடன் திருவப்பூர் கோவில் விழாவுக்கு சென்றிருந்தார்.

    பின்பு அவர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணியன் ஓட்டினார். முன்னால் குழந்தை ஹரிணியும், பின்னால் சுஷ்மிதாவும் அமர்ந்திருந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது.

    அந்த பஸ்சை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் (34) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக பஸ் சுப்பிரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணியன், குழந்தை ஹரிணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    சுஷ்மிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்மிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பஸ் கண்ணாடியை மக்கள் அடித்து நொறுக்கினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான சுப்பிரமணியன், ஹரிணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் புதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
    • இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    ஜீயபுரம்:

    காரைக்காலில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு தாது மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி புறப்பட்டது. இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த வெள்ளி ராஜா (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் பட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வந்த போது அதன் பேரிங் பழுதானது.

    இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தாறுமாறாக ஓடி வலது புறம் எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி அங்குள்ள அய்யன் வாய்க்கால் ஓரம் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்த திருச்சி திருப்பராய்த்துறை அணலை கீழத் தெருவை சேர்ந்த சுசீலா (60 ), அவரது மகன் சரவணன் (38), ஆட்டோ டிரைவர் அரவிந்த் (34) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயர் தப்பினார். விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து தான் லாரியின் அடியில் ஆட்டோ சிக்கி இருப்பது தெரியவந்தது.

    லாரியின் ஓரம் ஆட்டோவின் ஒரு சக்கரம் மட்டும் வெளியே தெரிந்தது. அதை வைத்துத்தான் லாரிக்கு அடியில் ஆட்டோ சிக்கியது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியை தூக்கினர். பலியான 3 பேர் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    ஆனாலும் உடல்களை முழுமையாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    இறந்த சுசீலாவுக்கு நேற்று இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது மகன் சரவணன் தாயே திருப்பராய்த்துறையில் இருந்து ஒரு ஆட்டோவில் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் அதே ஆட்டோவில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    பவானி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபட வீடு அருகே உள்ள செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமாதீன் (வயது 65). இவரது மனைவி சுபைதா (62), பேரன் அபுதாகிர் (9), பேத்தி ஆஷிகா (13) ஆகிய 4 பேரும் ஊட்டி செல்வதற்காக நேற்று இரவு காரில் கிளம்பி உள்ளனர்.

    காரை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் (34) என்பவர் ஒட்டி வந்தார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் பவிஸ் பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அதிகாலை என்பதால் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்தப் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது கார் கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. காரில் இருந்த அனைவரும் அலறினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கமாதீன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் சுபைதா, ஆஷிகா, அபுதாகிர், டிரைவர் நவாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுதாகீர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    ×