search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புத்துறை"

    • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் சங்கரன் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.

    இதில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய வட்டங்களில் பணி புரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.எஸ்.பி. பால்சுதர் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வருவாய்த் துறை, நில அளவை துறை, மின்வாரியத்துறை ஆகிய துறைகளின் மீது லஞ்ச புகார் தெரிவித்து அதிகமான போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளது.

    என்னுடைய தனிப்பட்ட என்னை கண்டுபிடித்து புகார் கூறுகின்றனர்.அதனால் தான் சங்கரன் கோவிலில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் 100 பேரில் 5 பேராவது மாறுவார்கள் என்கிற நோக்கம் மட்டும்தான் காரணம்.

    நீங்கள் பார்க்கிற துறையில் பல பிரச்சினைகள் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு நாம் சரியாக இருந்தால் போதும். முடியாது என்று சொன்னால் இடமாற்றம் செய்வார்கள். வேறு இடத்தில் போய் பணி செய்யுங்கள் அவ்வளவு தான்.

    அதற்காக வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஏறி அலைய வேண்டுமா? உங்கள் குடும்பத்தை எண்ணி பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பால் சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ் பெக்டர் ரவி, தலைமை காவலர்கள் வேணுகோபால், கணேசன் ஆகியோர் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் டிரை வர்களிடம் 'லஞ்சம் கொடுப் பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    விருதுநகர்:

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசுவரன் (வயது59). விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக உள்ளார். இவர் நேற்று பணி முடிந்து அங்கு கேமரா ஆபரேட்டராக வேலை பார்க்கும் தனது உதவியாளர் முத்துகாசியுடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார்.

    சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தரேசுவரனின் காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 நாட்கள் வசூலித்த பணம் என கூறி உள்ளார். ஆனால் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனையிட முடிவு செய்தனர். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோரின் தலைமையில் விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுந்தேரசுவரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பணம் வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.11 லட்சம் பணம் சிக்கியது.

    இதுகுறித்து விசாரித்தபோது பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்ததும், தினமும் ரூ.1,200 வாடகை கொடுத்து காரில் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரேசுவரன், முத்துகாசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த வாரம் ராமநாதபுரம் சார்பதிவாளர் பெத்துலட்சுமி பஸ் நிலையத்தில் லஞ்ச பணம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கினார். அவர் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் விருதுநகர் இணைப்பதிவாளர் கார், வீட்டில் இருந்து ரூ.12¼ லட்சம் சிக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ளும்போது கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    லஞ்சம் பெறும் அதிகாரிகளும் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் லஞ்சம் பெறுவதும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் முறைகேடாக பணம் புழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பத்திரப்பதிவு அலுவலங்களில் முறைகேடாக பண பரிமாற்றம் நடப்பதை முழுமையாக தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறி பத்திரப்பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, ஜான் பெஞ்சமின் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சார்பதிவாளர் பொறுப்பு ஆண்ட்ரோ மெஸ் மாலின் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. சார்பதிவாளர் அலுவலரின் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு லட்சத்து 21 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11.50 மணி வரை நடந்தது.

    சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பணம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக சார்பதிவாளர் பொறுப்பு ஆன்றோ மெஸ் மாலின் கேமரா ஆபரேட்டர் ரெஜினா, இளநிலை உதவியாளர் ரேஷ்மா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில் பெண் துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • சோதனை முடிவிலேயே முறைகேடாக பணம் பெறப்பட்டதா என்பது தெரியவரும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தினமும் செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனை சாவடி வழியாக சென்று வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை முதல் இந்த சோதனை சாவடியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை தொடங்கிய இந்த சோதனை காலை 11 மணியை தாண்டி நடைபெற்று வருகிறது.

    சோதனை முடிவிலேயே முறைகேடாக பணம் பெறப்பட்டதா என்பது தெரியவரும். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை
    • தண்டையார்பேட்டையில் உள்ள ராஜேஷ் வீட்டில் சோதனை

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன் அதிமுக-வினர் குவிந்துள்ளனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னையில் 16 இடங்களில் அதிகாரிகள் சோதனை
    • திருவள்ளூர் மற்றும் கோவையில் தலா ஒரு இடங்களில் சோதனை

    அ.தி.மு.க. ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனையும் நடத்தினார்கள். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தி.நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான சத்யா என்கிற சத்ய நாராயணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் எம்.எல்.ஏ.வாக இருந்த கால கட்டத்தில் தி.நகர் சத்யா ரூ.2.64 கோடி அளவு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வடசென்னை பகுதியை சேர்ந்த அரவிந்தக்சன் என்பவர் கடந்த ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டில் தி.நகர் சத்யா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சத்யா 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 78 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது சத்யாவின் சொத்து மதிப்பு ரூ.13 கோடியே 2 லட்சம் என்பது தெரிய வந்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்து கணக்கை மறைத்துள்ளார்.

    இப்படி சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆரம்ப கட்ட விசாரணையை முடித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தி.நகர் சத்யா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி அளவுக்கு சொத்து குவித்திருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் தி.நகர் சத்யாவின் வீடு உள்பட 16 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், கோவை ஆகிய இடங்களில் என மொத்தம் 18 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    வடபழனி நெற்குன்றம் காலனியில் உள்ள சத்யாவின் வீட்டுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் திலீப்குமார் என்ற தொழில் அதிபரின் அலுவலகத்தில் இன்று காலை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவின் நெருங்கிய நண்பர் ஆவார். யாமினி லேண்ட் புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் நிலம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரது அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கோவை அருகே உள்ள பொன்னேகவுண்டன் புதூரில் தி.நகர் சத்யாவின் மகளான கவிதா வசித்து வந்துள்ளார். அங்கு போலீசார் சென்றபோது அவர் வசித்து வந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விசாரணை நடத்தி கவிதா தற்போது எங்கிருக்கிறார் என்கிற தகவல்களை திரட்டிக் கொண்டு சென்றனர்.

    தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 பக்கங்களை கொண்ட முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

    தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான சத்திய நாராயணன் 2016-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதியில் இருந்து 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி வரை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த கால கட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி அளவுக்கு சொத்து குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    பி.காம் முடித்துள்ள சத்யாவுக்கு ஜெயசித்ரா என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் வடபழனி பகுதியில் சைக்கிள் கடை, பால் விற்பனை நிலையம், டி.வி., சி.டி.க்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பொது பணித்துறை காண்ட்ராக்ட் தொழில், டாஸ்மாக் மதுக்கடை ஆகியவற்றையும் நடத்தி வந்துள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆகும் முன்னர் தி.நகர் சத்யாவின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 36 ஆக இருந்துள்ளது.

    2016-ம் ஆண்டு முதல், 2021-ம் ஆண்டு வரை தி.நகர் சத்யா எம்.எல்.ஏ.வாக இருந்த கால கட்டத்தில் தனது பெயரிலும், மனைவி மற்றும் மகள்கள் பெயரிலும் விவசாய நிலங்கள், மற்றும் காலி மனைகளை வாங்கி குவித்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மும்முடிப்பாக்கம் கிராமத்தில் 24.79 சென்ட் நிலத்தை தனது மனைவி ஜெயசித்ரா பெயரில் தி.நகர் சத்யா வாங்கியுள்ளார். ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் இந்த இடம் வாங்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி பத்திர பதிவு அலுவலகத்துக்குட்பட்ட சாந்தி நகரில் பத்மாவதி டவர்ஸ் என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் 1250 சதுர அடி கொண்ட வீட்டை 4-வது மாடியில் சத்யா வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.

    வடபழனி நெற்குன்றம் பாதையில் உள்ள வீட்டை தனது மகள் கவிதாவின் பெயரில் சத்யா செட்டில் மெண்டாக எழுதி கொடுத்து உள்ளார். கோடம்பாக்கம் பரமேஸ்வரி காலனியில் வேலை முடிவுறாத 1,190 சதுர அடி கொண்ட வீட்டை தனது மனைவி பெயரில் செட்டில் மெண்ட் செய்து கொடுத்து உள்ளார். வடபழனி அழகிரி நகர், திருநகர் முதல் தெரு ஆகிய இடங்களிலும் கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் அருகே மும்முடிப்பாக்கத்தில் 1.97 சென்டில் பண்ணை வீடு, சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 2,400 சதுர அடி நிலம் ஆகியவையும் வாங்கப்பட்டுள்ளன.

    கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் 0.98 சென்ட் விவசாய நிலத்துக்கான பவர் பத்திரமும் தி.நகர் சத்யாவால் வாங்கப்பட்டுள்ளன. தடா அருகில் உள்ள கருகு கிராமத்தில் ஒரு ஏக்கர் 8.5 சென்ட் அளவிலான காலி இடமும் வாங்கப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் பகுதியில் 2.12 ஏக்கர் விவசாய நிலத்துக்கான பொது பவர் பத்திரம் மற்றும் 0.99 சென்ட் விவசாய நிலத்துக்கான பவர் பத்திரம் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு மாருதி ஸ்விப்ட் காரை ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 445-க்கு வாங்கியுள்ள சத்யா, 2010-ம் ஆண்டு 21 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பார்ச்சுனர் காரையும் வாங்கி இருக்கிறார்.

    இதன் பின்னர் 2012-ம் ஆண்டு 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் ரெனால்ட் டஸ்டர் காரையும் சத்யா வாங்கி பயன்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதிகளில் அசையா சொத்துக்களை அதிக அளவில் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பு அவரது சொத்து மதிப்பு 2016-ம் ஆண்டு 3 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரமாக இருந்த நிலையில் எம்.எல்.ஏ. ஆன பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.16 கோடியே 44 லட்சத்து 74 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்ந்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
    • ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை கடந்த ஜூலை 18-ந்தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து அந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் நடைபெற்றது. விசாரணை முடிவில் 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை கடந்த ஜூலை 18-ந்தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கொடுத்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்தும், வழக்கை முழுமையாக முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறை கோரிக்கை வைத்து உள்ளது.

    • லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி வந்தனர்.

    மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் புரோகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் பால மணிகண்டன் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. சோதனைக்கு பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.

    தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    காமராஜர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ.ஆர்ச் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனையை கட்டியதும் தெரிய வந்தது.

    இந்த வகைகளில் ரூ.127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்.

    இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர சபாநாயகரிடம் அனுமதி பெற்று இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, இது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
    • வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

    அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக கடந்த 2014ம் ஆண்டு விருது பெற்றார்.

    அதன் பின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

    2019-ம் ஆண்டில் தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காகவும் விருது வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்லில் மாநகராட்சி ஆணையராக பதவியேற்ற மகேஸ்வரி ஆர்.எம்.காலனி 1-வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் மருந்துகள் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வீட்டுக்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர். அவர்கள் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வேறு யாரும் அந்த குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கொரோனா காலக்கட்டத்தில் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் உள்பட மகேஸ்வரியின் உறவினர் 5 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி.
    • சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மலர்விழியின் பெற்றோர் விழுப்புரம் 36-வது வார்டு சாலமேடு புகாரி நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களது வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னரே ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும்.

    பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
    • சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

    சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×