search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பேராசிரியர்கள்"

    • வேரின் நுனி பாகம் அழுகி புதிய வேர் தோன்றாமல் செய்து விடும்.
    • நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன், வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்

    வெள்ளகோவில்:

    வாழையில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண் உதவி பேராசிரியர்கள் ப.மஞ்சு (தாவர நூற்புழுவியல்) மற்றும் சு.ஹேமலதா (மண்ணியல்) ஆகியோர் விளக்கம் தருகின்றனர். அவர்கள் கூறியதாவது:-

    விவசாயிகள் நேந்திரன், செவ்வாழை, கதலி, பூவன், மொந்தன் போன்ற வாழை ரகங்களை பயிரிட்டுள்ளனர். இவற்றில் நேந்திரன் மற்றும் செவ்வாழை ரகங்களில் நூற்புழு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக வேர் அழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு மற்றும் சுருள் வடிவ நூற்புழு போன்றவை அதிக அளவில் வாழையை தாக்கும். ஆனால் தற்போது வேர் முடிச்சு நூற்புழுக்களின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நூற்புழு தாக்கப்பட்ட மரங்களின் முதல் மற்றும் இரண்டாம் நிலை சல்லி வேர்களில் வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன.

    இதனை தொடர்ந்து பாதித்த வேரின் நுனி பாகம் அழுகி புதிய வேர் தோன்றாமல் செய்து விடும். மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் குலை தள்ளும் நாட்கள் அதிகமாகவும், தாரில் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்தும் மற்றும் காய்களின் நீளம் குறைந்தும் காணப்படும்.

    இந்நூற்புழு அதிகமாவதற்கு காரணம் பயிர் சுழற்சி முறையை கடை பிடிக்காமல் ஒரே வகையான பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க கரும்பு, பருத்தி மற்றும் தானிய பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்ய வேண்டும். இதனால் நூற்புழுவின் இனப்பெருக்கம் குறைக்கப்படுகிறது. வாழை கிழங்குகளை நடுவதற்கு முன் ட்ரை கோடெர்மா விவரிடி, சூடோமோனாஸ் ப்ளூரெஸன்ஸ், பேசில்லோமை சஸ் லிலாசினஸ் கலந்த உயிர் பூசணக் கொல்லிகளை தலா 2 கிலோ எடுத்து 1 டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்குடன் கலந்து 15 நாட்கள் மூடி வைத்து பின் வயலில் இட்டு வாழை நடவு செய்ய வேண்டும்.

    வாழை விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேல்தோலை நீக்கி, பின்பு வேப்பம் கரைசலில் (15 மில்லி/ லிட்டர் தண்ணீர்) அல்லது 50-55 டிகிரி செல்சியஸ் கொதிநீரில் 30 நிமிடம் மூழ்க வைத்து, பின்பு நிழலில் உலர்த்தி, வாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை நடும் போது துலுக்க சாமந்தியை ஊடு பயிர் செய்து 60-ம் நாள் பிடுங்கி வாழையை சுற்றி புதைக்கலாம். வாழை கன்று நட்ட மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில், வேப்பம் புண்ணாக்குடன் (250 கிராம்) எதிர் நுண்ணுயிரிகளான 'பெசி–லோ மைசிஸ் லிலாசினஸ்' மற்றும் 'சூடோமோனாஸ் புளோரசன்ஸ்' ஆகியவற்றை, 30 கிராம் வீதம் கலந்து இடுவதால் மண்ணிலும், வேரிலும் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன், வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றனர். 

    ×