search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டுவீச்சு"

    • வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.
    • போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இறைச்சி கடை நடத்தி வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், டி.எஸ்.பி. ஆர்லிஸ் ரெபோனி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.

    சம்பவம் நடப்பதற்கு முன்தினம் மாலை ராஜா முகமது தனது மனைவியுடன் பள்ளிவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூரை சேர்ந்த சுந்தரபாண்டி (25), ஆனந்தன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ராஜா முகமது மீது மோதியுள்ளனர். இதில் அவர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ததின்பேரில் 3 பேரும் சென்றனர்.

    ஆனால் ஆத்திரம் அடங்காத சுந்தரபாண்டி, ஆனந்தன் உள்பட 3 பேர் ராஜா முகமதுவை பழி தீர்க்க முயன்றதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
    • தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள சாரோன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவரது வீட்டு மாடியில் நேற்று சங்கர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தீ பிடித்து எரிந்தது.

    சத்தம் கேட்டு சங்கர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். காரின் இருக்கைகள், கதவு பகுதிகள் எரிந்து கருகியது.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் சங்கர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
    • இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவையில் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

    தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்கள் எஸ்டிபிஐ மற்றும் பி எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் நிர்வாகிகள் வீடுகள், கார் போன்றவை தீ வைத்து வருகின்றன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க. அலுவலகம், பா.ஜ.க. நிர்வாகி வீடு, இந்து முன்னணி அலுவலகம், இந்து முன்னணி நிர்வாகி வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலை வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயிலில் இருக்கும் பெட்டிகள், பைகளை தொட வேண்டாம் என்றும், இது குறித்து ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று காலையும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து 10 இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நகரில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் கடந்த 2 தினங்களாக கோவையில் முகாமிட்டு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.தாமரை கண்ணன் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

    தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும், கோவை மாவட்ட கலெக்டர், ஐ.ஜி., கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

    கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார், தமிழ்நாடு கமாண்டே படை போலீசார், 4 அதிவிரைவுப்படை கம்பெனிகள், சிறப்பு காவல்படை, ஊர்காவல் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசர் ரெயில் நிலையம், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    நேற்று 2-வது நாளாக கோவை மாவட்டம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. மாநகர் புறநகரில் ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகளுடன் தற்காலிகமாக 56 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    இன்று காலையும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து கோவை போலீசார் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. ஒவ்வொரு சம்பவத்தையும் விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
    • கோவையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் உள்பட சில இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதனால் கோவையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் கோவையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஐ.ஜி.சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் அமைதியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

    • மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் பதட்டம் நிலவியது.
    • பரத் தூங்கச் சென்றதும் மர்ம நபர்கள் அங்கு வந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் தான் கார் எரிந்தது தெரியவந்தது.

    கோவை:

    கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் மீது நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

    அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன.

    அவர்களின் வாகனங்களும் சேதம் அடைந்தன. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் பதட்டம் நிலவியது.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மேலும் ஒரு பாரதிய ஜனதா நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.

    நள்ளிரவு 11.30 மணிக்கு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. உடனே பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால் கார் தப்பியது. காரின் மேல் உறை போர்த்தப்பட்டு இருந்ததால் உறை மட்டும் எரிந்து இருந்தது, கார் தப்பியது.

    பரத் தூங்கச் சென்றதும் மர்ம நபர்கள் அங்கு வந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் தான் கார் எரிந்தது தெரியவந்தது. இதுபற்றி பரத் போலீசில் புகார் செய்தார். போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • குண்டு வீசிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.கே.ஜி.சென்டரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.நள்ளிரவு நேரத்தில் அலுவலக வாசல் முன்பு பயங்கர சத்தம் கேட்டது.

    அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதை கண்டனர். குண்டு வீச்சில் கட்டிடத்தின் வெளிப்புற பகுதியும், கண்ணாடி ஜன்னலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    குண்டு வீசிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதனால் அவர்களை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே தகவல் அறிந்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை நடத்தினர். இதில் அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வெடிக்காத ஒரு நாட்டு வெடிகுண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை அப்புறப்படுத்திய நிபுணர்கள், வெடிகுண்டு வீசிய நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்திற்கு காங்கிரசாரே காரணம் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம்சாட்டினர். அவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஆலப்புழாவில் உள்ள இந்திரா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பினரே காரணம் என்று காங்கிரசார் கூறினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கேரளா முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    • தொழில் போட்டி காரணமாக எதிராளிகள் சுபாசை ஏவி பெட்ரோல் குண்டை வீச செய்தது தெரியவந்தது.
    • வாலிபர் ஒருவர் கடை முன்பு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விட்டு சென்றது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). இவர் திருமுருகன்பூண்டி மெயின் ரோட்டில் தரகு மற்றும் பல்பொருள் முகமை கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு கடையிலேயே நாகராஜ் தூங்கினார்.

    இன்று காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது கடையின் முன்பு பாட்டில் உடைந்த நிலையில் கிடந்ததுடன், கதவு தீப்பிடித்து எரிந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது நள்ளிரவு அங்கு வந்த வாலிபர் ஒருவர் கடை முன்பு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விட்டு சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.

    இது குறித்து நாகராஜ் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையில் பெட்ரோல் குண்டை வீசியது அப்பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது.

    கூலிப்படையை சேர்ந்த சுபாசுக்கும், நாகராஜ்க்கும் எந்தவித முன்விரோதமும் இல்லாத நிலையில் , நாகராஜூடன் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக எதிராளிகள் சுபாசை ஏவி பெட்ரோல் குண்டை வீச செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சுபாசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×