search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரஸ் காய்ச்சல்"

    • பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சளி மற்றும் வறட்டு இருமலில் தொடங்கும் இந்த வைரஸ் காய்ச்சல் கடுமையான உடல் வலி, கை, கால், மூட்டு வலி, உடல் சோர்வுடன் காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமான பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

    ஒருவருக்கு காய்ச்சல் காணப்படும் நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் பரவி வருகிறது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் 2 வாரத்திற்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல், உடல் சோர்வு காணப்படுகிறது. பொன்னேரி நகராட்சி 15-வது வார்டு, 19-வது வார்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பேருக்கு காய்ச்சல் பரவி உள்ளது.

    இந்த நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர். பொன்னேரி நகராட்சி நிர்வாகம் 15-வது வார்டு, 19-வது வார்டு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • வீட்டில் ஒருவருக்கு வந்தால்... அத்தனை பேரையும் சாய்த்து விடுகிறது.
    • சளி... இருமல் தொல்லை 15 நாட்கள் வரை நீடிப்பதால் கடும் அவதி.

    சென்னை:

    சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே அழைத்து வருகிறது.

    காய்ச்சல் வந்துவிட்டால் எழுந்து உட்கார முடியாத அளவுக்கு தலைவலி, இருமல் ஆகியவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது.

    அதனுடன் கை, கால் மூட்டு வலி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு எப்போதும் படுத்தே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

    இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பனி காலத்தில் கொசு உற்பத்தி சென்னையில் மிக அதிகமாக உள்ளது.

    அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ் என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை காய்ச்சலில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

    சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதிகளிலும் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருவதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் சிறிய கிளினிக்குகள் கூட நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சராசரியாக முப்பது பேர் வரை வந்து செல்வதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்த காய்ச்சல் தொடர்பாக டாக்டர்கள் கூறும் போது வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்து அனைவரையும் முடக்கி போடும் வகையில் இந்த வைரஸ் காய்ச்சல் வீரியமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீடுகளில் இருந்து இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சளி பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வழக்கமாக காய்ச்சல் தலைவலி வந்தால் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல் சரியாவதற்கு 15 நாட்கள் வரை ஆகிறது.

    இந்த 15 நாட்களும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதற்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    இந்த சளித்தொல்லை சிலருக்கு அதிகமாகி நுரையீரலில் போய் சளி கெட்டியாக தேங்கி விடுகிறது. இது இரவு நேரத்தில் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. இது போன்ற நேரங்களில் நெபுலேசர் வழியாக மருந்தை செலுத்தி சளியை கரைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது, சிலருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் திடீரென குறைந்து விடுகிறது. இது போன்ற பாதிப்புக்குள்ளாகும் நபர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

    எனவே லேசான சளி தொல்லை மற்றும் இருமல் ஏற்படும் போதே டாக்டர்களிடம் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

    சளி பிரச்சினை ஏற்பட் டால் மருந்து கடைகளில் சென்று டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது நல்லது அல்ல என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போன்ற நேரங்களில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றவே மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். மருந்து கடைகளில் நாமாகவே வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் சளியை உடலுக்குள்ளேயே தேங்கச் செய்து விடும்.

    இது நாளடைவில் இருமலை அதிகப்படுத்தி மூச்சு விடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். எனவே தற்போதைய சூழலில் காய்ச்சல், சளிக்கு டாக்டர்களிடம் உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

    மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் ரத்த பரிசோதனை கூடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்பு
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை, பனி மூட்டம் என சீதோஷ்ண நிலை மாறி, மாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக காலை நேர பனி மூட்டம் பகல் 12 மணி வரை நீடித்து வருகிறது. இரவிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரம் இருக்கிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கெனவே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகள், பயன்படுத்தி வீசப்பட்ட பொருட்களில் எங்காவது கொசுப்புழு வளர்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றில் வளர்ந்துள்ள கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர்.

    மேலும், தண்ணீர் தேங்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை மருந்தும் அடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் சார்பில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளித்தாலும் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    அதன் பிறகு அடுத்தகட்ட முகாம்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    • குழந்தைகள், முதியோர்களை இந்த காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது.
    • தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பதம் பார்த்து விட்டுதான் செல்கிறது.

    சென்னை:

    பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று தான். தற்போதும் மழை, வெயில் என பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் இந்த காய்ச்சல் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக குழந்தைகள், முதியோர்களை இந்த காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது. சாதாரண காய்ச்சல் என்றால் 3 நாட்களில் சரியாகிவிடும்.

    தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பதம் பார்த்து விட்டுதான் செல்கிறது. அவ்வாறு 7 நாட்களில் இந்த காய்ச்சல் குணமான போதிலும் அதன்பின்பு 3 முதல் 7 நாட்கள் வரை உடல்வலி இருக்கிறது.

    தற்போது பரவி வரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்கள் ஆகியும் கடுமையான காய்ச்சல் குறையாதபட்சத்தில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த காய்ச்சல் டெங்கு காய்ச்சலா அல்லது ப்ளூ காய்ச்சலா என கண்டறிந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிப்பதால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் காய்ச்சலுக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஒன்றிரண்டு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
    • காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை.

    சென்னை:

    பள்ளிகள் திறந்து 2 வாரம் ஆகிவிட்டது. ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் பலர் காய்ச்சல், சளி, தொண்டை வலியால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெற்றோர்களும் பயத்தின் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்கிறார்கள். பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்தார்கள். கொரோனாவுக்கும் காய்ச்சல்தான் அறிகுறி என்று கூறப்பட்டது. எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதும் பெற்றோர்கள் பீதி அடைகிறார்கள். பலர் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

    குழந்தைகள் நல மருத்துவர்கள் இதுபற்றி கூறும்போது, 'பீதி அடைய தேவையில்லை. இது சாதாரணமான வைரஸ் காய்ச்சல் தான். தொண்டை வலி, இருமல், சளி எல்லாம் இதனால் ஏற்படுவது தான்.

    சிலருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தியும் இருக்கிறது. இது சீசன் காய்ச்சல். செப்டம்பர் முதல் ஜனவரி மாதங்களுக்கு இடையிலான காலகட்டங்களில் அதிகமாக இருக்கும். இப்போது முன்கூட்டியே வந்துள்ளது. அவ்வப்போது லேசான மழை, அதிகமான வெயில் போன்ற காரணங்களால் இவை உருவாகலாம்.

    ஒன்றிரண்டு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கிறது. அதுவும் பயப்பட தேவை இல்லை.

    3 அல்லது 4 நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறையாமல் இருப்பது, உடல் சோர்ந்து போவது, மூச்சு விட சிரமம், மிக குறைந்த அளவே சாப்பிடுவது, வாந்தி தொடர்ந்து இருப்பது போன்றவை காணப்பட்டால் மருத்துவரை அணுகினால் போதும்.

    முக கவசம் அணிவது, இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது, வீட்டு உணவுகளையே சாப்பிடுவது, காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×