search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு ஒத்திகை"

    • கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    'சிவிஜில் 2022' என்ற பெயரில் நேற்று தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகள் போல ஊடுருவியவர்களை பல இடங்களில் போலீசார் மடக்கி பிடித்தனர். சில பகுதிகளில் கோட்டையும் விட்டுள்ளனர். இறுதி நாளான இன்றும் கடலோர பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறையினரும் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது 4 பேர் கடற்கரை வழியாக பயங்கரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மடக்கி பிடித்தனர்.

    • கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    • கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளூர் போலீசார் இணைந்து சீ விஜில் என்ற ஒத்திகையை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கடலோர மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தின் பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சீ விஜில் என்ற பெயரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஆபரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதில் தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக வந்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்குள் நுழையும், மத்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்களை எப்படி அடையாளம் கண்டு கைது தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்கிறார்கள், அவர்களிடம் விசாரிக்கும் விதம் எப்படி இருக்கிறது, கடல்பகுதி தகவல் தொடர்பு கருவிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கண்டறியவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருவதால் அவர்களைத் தாக்கவும், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வழியாக நுழையலாம். ஆபத்தான அணு உலை கல்பாக்கத்தில் உள்ளதால் அதை தகர்த்து எரிய சட்ராஸ் பகுதி கடலோரம் வழியாக நுழையலாம் என்பது போன்ற ஒத்திகையில் கடலோர காவல் படையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கோவளம் கடலில் சந்தேகத்திற்கு இடமான படகில் வந்த நபர்கள் 8 பேரை கடலோர காவல்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒத்திகைக்காக தீவிரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி, வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலோர காவல் படைவீரர்கள் அவசர அவசரமாக கடலுக்குள் படகை இறக்கி, வேகமாக எடுத்துச் செல்வதைப் பார்த்த மீனவர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டது. அதன்பின் அது ஒத்திகை என தெரிய வந்ததும் இயல்பு நிலை திரும்பியது.

    • இறுதி நாளான நாளை பிரமாண்ட ஒத்திகையை நடத்த கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    • ஒத்திகை சென்னையையொட்டிய கடலோர பகுதியில் நாளை நடைபெறுகிறது.

    சென்னை:

    கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்றுபாது காப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடலோர பாதுகாப்பு படையினர், இந்திய கடற்படையினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் இணைந்து 'சீ விஜில்' என்ற பெயரில் ஒத்திகையை மேற்கொண்டனர்.

    தமிழக காவல்துறையினர் கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் அனைத்து மாவட்டங்களில் இன்று காலை இந்த ஒத்திகை மற்றும் பயிற்சி தொடங்கப்பட்டது.

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்த ஒத்திகை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது.

    கடல் வழியாக ஊடுருவி முக்கிய இடங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்றும், அதனை முறியடிப்பது போன்றும் இன்றைய ஒத்திகையின் போது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

    2 நாட்கள் இந்த ஒத்திகை நடைபெறும் என்று கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 5 ஆயிரம் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் இன்றைய ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய கப்பல் படையினரும் ஒத்திகையில் இணைந்துள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் ஆகியவையும் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தன. சென்னை முதல் குமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவ கிராமங்கள் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக பரபரப்பாக காட்சி அளித்தது.

    இறுதி நாளான நாளை பிரமாண்ட ஒத்திகையை நடத்த கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஒத்திகை சென்னையையொட்டிய கடலோர பகுதியில் நாளை நடைபெறுகிறது.

    முதல் நாளான இன்று சென்னை கடலோர பகுதியில் அனைத்திலும் விரிவான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும், மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீசார் ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    மாறுவேடத்தில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் பயங்கரவாதி போன்று செயல்பட்டு டம்மி வெடிண்டு போன்ற பொருளை எடுத்து வருவது போன்றும், அதனை போலீசார் மடக்கி பிடிப்பது போன்றும் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    பட்டினப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை மணல் பகுதியில் டிராக்டரில் ரோந்து சென்று போலீசார் கண்காணித்தனர்.

    இந்த கண்காணிப்பு மற்றும் ஒத்திகையால் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் துணை கமிஷனர் பாலகிருஷ்ண ரெட்டி, உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் பிராங்ளின் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனர்.

    மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருபவர்களை பிடிக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கல்பாக்கம் அணு உலை பகுதியிலும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னேரி மற்றும் பழவேற்காடு சுற்று வட்டார பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இந்திய கடற்படையினர் கப்பல் மற்றும் ரோந்து படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் குமரி மாவட்டத்தில் உள்ள 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு போலீசார் மாறுவேடத்தில் புகுந்துள்ளனர். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழக கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர காவல்படை, போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு கடலோரப் பகுதி மீனவர்களிடம் இன்று காலை கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் திடீரென விசாரித்து அவர்களிடம் துப்பாக்கி, வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்து, பயங்கரவாதிகள் போன்று எவரேனும் புதிய நபர்களை இன்று காலை. பார்த்தீர்களா என விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பானது. பின்னர் இது கடலோர காவல் படையின் "சாகர் ஹவாஸ்-2022" ஒத்திகை என தெரியவந்தது.

    தமிழக கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது. மத்திய கடலோர காவல் படை வீரர்கள் சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து மீனவர்கள், பயணிகள் போன்ற மாறுவேடத்தில் டம்மி துப்பாக்கி, வெடிகுண்டு, வாக்கி டாக்கியுடன் பயங்கரவாதி போல் கடல்வழி மற்றும் தரைவழியாக ஊடுருவி உள்ளனர்.

    இவர்கள் அணுமின் நிலையம், அனல்மின் நிலையம் இருக்கும் கடலோர கூடுதல் பாதுகாப்புடைய பகுதிக்குள் நுழைவார்கள். இவர்களை எப்படி தமிழக கடலோர காவல் படையினரும், போலீசாரும் அடையாளம் கண்டு பிடிக்கிறார்கள் என்பதுதான் இந்த ஒத்திகை.

    இன்று காலை 6 மணிக்கு கோவளம், நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சட்ராஸ், கல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கூவத்தூர், கடலூர் பகுதியில் துவங்கிய இந்த ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர காவல்படை, போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் போல ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோர காவல்படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு கடலோர பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    மாநில அரசுகள் தங்களது எல்லைகளுக்குட்பட்ட கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் தொடர்ச்சியாக இந்த ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக பயங்கரவாதிகள் போல வேடமிட்டு ஊடுருவுவார்கள். இவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும் என்பதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய உத்தரவாகும்.

    இதன்படி இன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் போல ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோர காவல்படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னையில் காசிமேடு, ராயபுரம் துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை பரபரப்பாக நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதே போன்று கடலோர பகுதிகளை எட்டியுள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    இதனையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 1 லட்சம் போலீசார் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையை கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் கண்காணித்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒத்திகையை நடத்தினர்.

    நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாரை உஷார்படுத்தி உள்ளார்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது கவனக்குறைவாக செயல்படும் போலீசாரிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×