search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார்.
    • நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்! நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர். தேவர்கள், மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான் அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசக்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. 

    • 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம்.
    • ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு.

    நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.

    இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.

    ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை. 

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.

    தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

    மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.

    மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம். இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.

    • லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி.
    • தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார்.

    சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

    நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை:

    ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

    ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

    மஹாளய அமாவாசை கழிந்தது.

    இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

    சக்தி, நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி, விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம், உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

    ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

    சக்தியால் உலகம் வாழ்கிறது.

    நாம் வாழ்வை விரும்புகிறோம்.

    ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

    • நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும்.
    • நவராத்திரி முத்தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    சக்தியின் அருள் வேண்டி நோற்கும் விரதங்களில் மிக முக்கியமானது நவராத்திரியாகும். நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளும் சக்தியை துர்க்கை, மகாலட்சுமி சரஸ்வதி என பல்வேறு வடிவங்களில் வழிபடுவதாகும்.

    நவராத்திரி பெரும்பாலும் பெண்கள் அனுட்டிக்கும் விரதமாகும்.

    நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும். வசந்த காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு வசந்த நவராத்திரி என்படும். இது சிலாபத்திலுள்ள முன்னேஸ்வர ஆலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

    காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிவழிபாடு சாரத நவராத்திரி எனப்படும். இது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரை உள்ள ஒன்பது தினங்கள் அனுட்டிக்கப்படும் தனிச்சிறப்புடைய விரதமாகும்.

    ஏனைய விரதங்களில் பெரும்பாலானவை ஒரு தெய்வத்தின் அருள் வேண்டி நோற்கப்படுன்றது. ஆனால் நவராத்திரி முத் தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    நவராத்திரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இத்தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், கலைப்பயிற்சிகளைத் தொடங்குதல் என்பன நடைபெறும்.

    விஜய தசமியன்று ஆயுத பூஜை நடத்தப்படும். முற்காலத்தில் நவராத்திரி விரத காலத்தில் "தேவி மகாத்மியம்" என்ற நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பேணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சகலகலாவல்லி மாலை முதலான நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது.

    நவராத்திரி காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் முப்பெரும் தேவியர்களுக்கு விசேட அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும்.

    ஒன்பதாம் நாள் கலைமகள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும். பத்தாம் நாள் விஜய தசமி விழா (வாழை வெட்டு) நடைபெறும். பாடசாலைகளில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    • ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது.
    • தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் 12 நாட்கள் தசரா விழா நிகழ்த்தப்படுகிறது. இவ்விழாவில் கொடியேற்றல், காப்புக்கட்டுதல், நோன்பிருத்தல், வேடம் புனைதல், காணிக்கை பெறுதல், அம்மன் மகிசனை வதம் செய்தல், காப்பு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழிபாடுகளைக் காண முடிகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்று ஒரு முனிவன் தவ வலிமைமிக்கவனாக வாழ்ந்து வந்தான். எனினும் ஆணவத்தால் கட்டுண்டு அறிவுக் கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒருநாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் வரமுனி அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோட அவமரியாதையும் செய்தார். மனம் வெறுத்த அகத்தியர் வரமுனியை நோக்கி, எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார்.

    அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினான். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றான். முனிவனாக வாழ்வைத் தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய பராசக்தி மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசனை அழித்த பத்தாம் நாள் தசரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    தேவர்கள், மகிசாசுரன் செய்த துன்பத்தைச் சிவனிடம் முறையிட்டனர். அவன் மேல் சிவனிடம் உண்டான சீற்றம் பெண்ணுருவாய்த் திரண்டது. அதுவே காளியுருவம்.

    கர்நாடகத்தில் நவராத்திரிப் பண்டிகையைச் சாமுண்டேசுவரிக்கு விழா எடுத்துத் தசரா என்று அழைக்கிறார்கள். இதை அவர்கள் தசராத்திரி, மகாநவமி என்றும் அழைப்பதுண்டு. சக்திப் பூசை இதில் சிறப்பாக இடம் பெறுகிறது. ஒன்பது வடிவங்களைக் கொண்டவளாகத் தேவி பூசிக்கப்படுகிறாள்.

    எருமை முகம் கொண்ட மகிசாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்த, தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் கோபம் அக்னி ஜுவாலையாகப் பிறந்து ஒன்றாக இணைய, அதிலிருந்து துர்க்கா தேவி தோன்றினாள். துர்க்கைக்குப் பத்துக்கரங்கள். ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு ஆயுதங்கள், பல்வேறு கடவுள் அளித்தவை. என்றாலும் சிவபெருமான் அளித்த திரிசூலத்துக்குத்தான் மகிசாசுரனை அழித்த பெருமை கிடைத்தது. மகிசனைத் துர்க்கை வதம் செய்த நாள்தான் வெற்றித் திருநாள் என்று பொருள் கொண்ட விஜயதசமி. மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜா இதுவே நவராத்திரியாகும்.

    ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது. ராவணனை ராமபிரான் வென்ற பத்தாவது நாளைத்தான் விஜய தசமியாகக் கொண்டாடுகிறோம் என்ற நம்பிக்கையும் நம் நாட்டில் பரவலாக உள்ளது. நவராத்திரியைத் தசராப்பண்டிகை என்று அழைப்பதே இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    மகிசாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரம்மாவிடமிருந்து தனக்குத் தேவர், மனிதர், அசுரர்களால் மரணம் ஏற்படக்கூடாது என்று வாக்கினைப் பெற்றான். ஆண்களால் மரணம் நேரிடக்கூடாது என்று அந்த அரக்கன் வரம் பெற்றமையால், சண்டிதேவியால் அவனுக்கு அழிவு நேரிடுகிறது. தேவி ஒன்பது நாட்கள் கொலுவிலிருந்து பத்தாவது நாள் மகிசாசுரனை வதம் செய்ததால், தேவி மகிசாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறாள். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய சக்திகளின் வடிவமாகத் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் நவராத்திரியில் வழிபடுவது தமிழ்நாட்டவர் மரபு. நவராத்திரி முடிந்து, விஜயதசமியன்று அந்திவேளையில் தேவி மகிசாசுரனை அழித்தாள்.

    மகிசம் என்றால் எருமை என்று பொருள். மகிசாசுரன் என்றால் எருமைத் தலையுடைய அசுரன் என்று பொருள். இம்மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத வானவர்களும் முனிவர்களும் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசாசுரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தைக் கண்டு உள்ளம் இரங்கினாள் அன்னை. மாமுனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள். மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வினை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியில் ஒரு பெண் மகவு தோன்றியது. அது லலிதாம்பிகை என அழைக்கப்பட்டது. அந்தப் பெண் மகவு ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து, பத்தாம் நாள் அன்னை பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த பத்தாம் நாள் தசரா என்றழைக்கப்படுகிறது.

    மேலே கூறப்பட்ட கதைகளுள் ஒன்று மட்டும் தசரா விழாவை ராவண வதத்தோடு தொடர்புபடுத்துகிறது. ஏனையவை யாவும் தேவி மகிசாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியோடு தசராவைத் தொடர்பு படுத்துகின்றன. மேலும் நவராத்திரி நாட்களில் தேவியே வெவ்வேறு சக்திகளின் வடிவில் கொலுவிருத்தல் மரபாக உள்ளது. தவிர இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இவ்விழாவைச் சக்தி வழிபாடாகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.

    எனவே இவ்விழாவைச் சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் கொள்வதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலிலும் மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியை மையமாகக் கொண்டே நவராத்திரி விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டுத் தெய்வம் அவதாரம் எடுக்கும் என்ற இந்து சமயக் கொள்கை உட்பொருளாக வெளிப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பன்னிரு நாட்கள் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவே தசரா விழாவாகும். இவ்விழாவின் பத்தாம் நாளன்று மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய அம்சமாகப் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வழிபடுகின்றனர்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் தென்பகுதி எங்கும் விழாக்கோலம் பூணும் வகையில் இத்தசரா விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவைக் கிராமியத் தன்மையுடன் விளங்கும் கலை விழா என்று கூறலாம். திருச்செந்தூரில் கந்தசஷ்டியின் போது கடற்கரையில் மிகப் பெரியளவில் பக்தர்கள் கலந்து கொள்ளுதலைப் போன்று இவ்விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

    காப்புக் கட்டுவது திருக்கோவிலின் மரபு. கொடியேற்றி அது இறக்கப்படும் வரை இவ்வூரார் பிறவூர்களுக்குச் செல்லுதல் கூடாதென்றும் செல்ல நேரின் காப்பவிழக்கும் முன் திரும்ப வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. காப்புத்தடை நாட்டுப்புற மக்களிடையே ஊறிப்போன வழக்காறு. ஏனைய தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் இதனைக் கட்டுவதாகக் கருதப்படுகிறது.

    முத்தாராம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் அமாவாசையன்று இரவு எட்டு மணிக்குக் கருவறைத் தெய்வங்களான அம்மனுக்கும் சுவாமிக்கும் பூசை நடத்தப்பட்டுக் காப்புக் கட்டப்படுகிறது. பின்னர் அக்கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. தெய்வங்களுக்குக் காப்புக் கட்டுதலைப் பூசாரியே செய்கிறார். கோவில் பூசாரிகளுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. இதனை அவர்கள் ஒருவருக்கு மற்றவர் எனக் கட்டிக் கொள்கின்றனர். தெய்வங்களுக்குக் காப்புக் கட்டப்பட்ட மறுநாள் கொடியேற்றத்திற்குப் பின் பக்தர்களுக்குக் கட்டப்படுகிறது. காப்புக் கட்டிய பிறகு பக்தர்கள் நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.

    பூசாரிகள் காப்புக் கட்டிய பின் அவர்கள் குடும்பத்தில் ஏதேனும் தீட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் காப்புக் கட்டியவரைத் தீட்டுக் கட்டுப்படுத்தாது. அவர்கள் விழாச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம். காப்பு அவிழ்க்கும் வரை அவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் உண்டு.

    காப்புக் கட்டிய நாளன்று முளைப்பாரி வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பூசாரி கோவில் சார்பாக ஒரு முளைப்பாரி மட்டும் வைக்கிறார். முளை வைக்க விரும்புவோருக்கு அந்நாளில் முளைப்பாரிகளை வைக்கின்றனர். பதினொரு நாட்கள் இம்முளைப்பாரிகள் சிதம்பரேஸ்வரர் கோவிலில் வளர்க்கப்படுகின்றன. சூரசம்ஹாரத்தன்று இவை முத்தாரம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, நண்பகல் பூசை முடிந்த பிறகு எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன.

    காப்புக் கட்டிய நாள் முதல் தசராப் பக்தர்கள் நோன்பு மேற்கொள்கின்றனர். சூரசம்ஹாரம் வரை இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவேளை உண்டு, தூய்மை மேற்கெண்டு, தனியிடத்தில் தங்கி, இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    தசரா விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி கொடியேற்றம் ஆகும்.

    கொடியேற்று விழா, மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கும் உயிர் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள அருளை நாடுவதைக் குறிக்கிறது. பஞ்சாட்சரத்தினால் வீடு பேற்றை அடைவிப்பதைக் காட்டுவது கொடியேற்றுவிழா.

    முத்தாரம்மன் கோவிலில் பெருந்தெய்வ வழிபாட்டு மரபிற்கேற்பக் கொடியேற்றமும் பன்னிருநாள் திருவிழாவும் தசராவின்போது நிகழ்கின்றன. திருவிழா நாட்கள் யாவற்றிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்கு முன்னர் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் வருகிறது. ஊர் முழுவதும் வீதிஉலாச் செல்லும் கொடிப்பட்டம் மீண்டும் கோவிலுக்குள் திரும்பி வருகிற வேளையில் ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று ஆவேசக் கூச்சலிடுகின்றனர்.

    கொடிப்பட்டம் வெண்மையான கச்சைத் துணியால் செய்யப்பட்டதாகும். இத்துணி பதினெட்டு முழ அகலமும் ஐம்பெத்தொரு முழ நீளமும் கொண்டது. கொடியேற்றப் பயன்படும் நூல்கயிற்றின் அளவு இருபத்தேழு முழம் ஆகும்.

    வீதி உலாச் சென்று வந்த கொடிப் பட்டம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டதும், அம்மனுக்குப் பூசை செய்யப்படுகிறது. அதன்பின் கொடிமரத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. கொடி மரத்திற்கு முன்னால் உள்ள பலிபீடத்தின் முன் கொடி வைக்கப்பட்டு, சிறிய யாகமும் பூசையும் நடத்தப்படுகின்றன. பின்னர்க் கொடிக்குச் சிறப்புப் பூசைகளும் தீபாராதனைகளும் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்படுகிறது. கயிற்றில் கட்டப்பட்ட கொடி மேளதாளத்தோடும் பெண்களின் குலவைச் சத்தத்தோடும் மேலே ஏற்றப்படுகிறது.

    கொடி மரத்தின் கீழ்ப்புறத்தில் நாற்புறங்களிலும் தர்ப்பைப் புல் சிறுசிறு பகுதிகளாக முடிச்சிடப்பட்டு கட்டப்படுகிறது. முடிச்சிகளுக்குள் என்ற வடிவில் மர அச்சுக்கள் செருகி வைக்கப்படுகின்றன.

    தர்ப்பைப் புல்லைச் சுற்றிக் கீழ்ப்புறமாகச் சிறப்பு நிறக் கதர்த்துணி ஆடைபோல் கட்டப்படுகிறது. அதன்பின் பீடப்பகுதியில் அபிஷேகம் நடைபெறுகிறது. பலிபீடத்திற்கும் சேர்த்தே பூசை நடைபெறுகிறது. மஞ்சள் நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம் ஆகியவற்றால் தனித் தனியாக அபிஷேகம் நடைபெற்று, ஒவ்வொருமுறையும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடிமரத்தைச் சுற்றிலும் சிறு குடங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் உள்ள புனித நீரால் கொடி மரப்பீடமும் பலி பீடமும் நீராட்டப்படுகின்றன. சந்தனமும் குங்குமமும் பூசப்படுகின்றன. பின்னர்க் கொடி மரப் பீடத்தைச் சுற்றிப் பட்டுத் துணி கட்டப்படுகிறது. தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு மாலைகள் சூட்டப்பட்டு, நாக வடிவ விளக்கு முதலான பல்வேறு விளக்குகளால் தீபராதனை செய்யப்படுகிறது.

    பூசாரிகள் இருவர் கொடி மரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமர்ந்து சந்தனத்தால் சிறு சிலை போன்ற உருவத்தைச் செய்கின்றனர். அதை அம்மனாகப் பாவித்துச் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம் முதலானவற்றைப் படைத்து, வைத்துப் பூசை செய்கின்றனர். பின்னர் வெண்பொங்கல் மட்டும் கொடி மரத்தைச் சுற்றிக் கீழே நான்குபுறமும் வைக்கப்படுகிறது. தொடர்ந்த மீண்டும் தீபாராதனை செய்யப்பட்டு, பூசைப் பொருட்கள் அம்மன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    கொடி பதினோராம் நாளில் இறக்கப்படுகிறது. ஏற்றியவர்களே கொடியை இறக்க வேண்டும் என்பது மரபாகும். கொடியேற்றம் நேரத்தைப் பூசாரிகள் பஞ்சாங்கம் பார்த்துக் கணிக்கின்றனர். ஆனால் கொடி இறக்கும்போது நாள், நேரம் பார்ப்பதில்லை.

    கொடித்துணியைப் பூசாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கொடியேற்றத்திற்காகக் கொடித்துணி, கொடிக்கயிறு இவற்றை வாங்கும் செலவைக் கட்டளைதாரர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இவை திருச்செந்தூரில் வாங்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப்புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப் புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்குத் தத்துவ விளக்கம் கூறப்படுகிறது. தர்ப்பைப்புல் பாசமாகிய சுத்தமாயையை உணர்த்துவது. கொடித்துணியில் வரையப் பெற்ற தெய்வம் உயிரை (ஆன்மாவை) உணர்த்துவது. கொடி மரத்தில் தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட கொடி ஏறுவது உயிர் சுத்தமாயை துணைக் கொண்டு ஏனைய ஆதாரங்கள் வழியே முறையே மேலே ஏறுவதைக் குறிப்பது. மேலே உச்சியைச் சென்றடைவது உயிர் பேரானந்த நிலையில் நிற்பதனை உணர்த்துவதாகும். இவ்வாறு கோயிற்களஞ்சியம் கொடி மரத் தத்துவத்தைக் கூறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்குக் காப்புக் கட்டுதல் நிகழ்கிறது. நோன்பு மேற்கொண்டவர்களும் நேர்ச்சை செய்வோரும் வேடம் புனைவோரும் பக்தர்களும் வரிசையாகக் கோவிலுக்குள் சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். தசராக் குழுவினர் கூட்டமாக வந்து காப்புக் கட்டிக் கொள்வதும் உண்டு.

    தசரா விழா நாட்களில் முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் வீதி உலா வருதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதக்கிருஷ்ணர், மகிசாசுரமர்த்தினி, ஆனந்த நடராசர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய கோலங்களில் அம்மன் தேரில் வீதி உலா வருகிறாள். பத்தாம் நாள் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை வதம் செய்கிறாள்.

    தசராவிற்கு அணி சேர்த்து அதனைத் தனிப்பெரும் விழாவாக வெளிப்படுத்துகிற சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டை குறிப்பிடலாம். அவை:

    1. சூரசாம்ஹாரம்

    2. வேடம் புனைதல்

    சூரசம்ஹாரம் என்று மக்களால் வழங்கப்படுகிற மகிசாசுர வதம் குலசேகரன்பட்டினத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மகிசனை வதம் செய்து கொல்லும் இந்நிகழ்ச்சியே தசரா விழாவில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

    மகிசாசுரமர்த்தினி கோலத்தின் சிறப்புக் காரணமாக அதனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

    கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் (சிலம்பு. வேட்டுவரி, 7) என்கிறது சிலப்பதிகாரம்.

    இக்கோலம் தமிழகக் கோவில்களில் பரவலாகச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மகிசாசுரன், அவனை மாதகனம் செய்யும் கார்த்தியாயினி, இருதரப்புப்படைகள், போரின் உக்கிரம் ஆகியவற்றைக் கல்லில் அற்புதமாக வடித்துள்ளனர். அன்னையின் உருவம் செப்புச் சிலையாக வேதாரணியம், பட்டீச்சுவரம் முதலிய கோவில்களில் உருப் பெற்றிருக்கிறது.

    மகிசம் என்றால் மந்தம், மடமை, அறியாமை என்று பொருள்படும். அன்னையின் ஆற்றல் முழுவதும் இந்த அறியாமையும், அஞ்ஞானமும் ஒழிந்து ஞானம் பெருகச் செயல்படுகிறது.

    மகிசனை அழிப்பதற்காகத் தோன்றியவளே மகிசாசுரமர்த்தினி. குலசேகரன்பட்டினம் கோவிலில் பத்தாம் நாளன்று முத்தாரம்மன் மகிசனை அழிக்க மகிசாசுரமர்த்தினி கோலத்தில் புறப்படுகிறாள்.

    விழாவின் பத்தாம் நாளான சூரசம்ஹாரத்தன்று நண்பகல் கோவிலில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் ஆகியோருக்கும் துணைத் தெய்வங்களுக்கும் அபிஷேகமும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. மேலும் சூரசம்ஹாரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிற சூலத்திற்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அன்றைய தினம் நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்கு மீண்டும் சூலத்திற்குப் பூசைகள் செய்யப்படுகின்றன. பின்னர் சூலம் பூசாரியால் கோவிலிலிருந்து தேர்மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. தேர் மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான அம்மன் மகிசாசுரமர்த்தினி கோலத்தில் வதம் செய்யத் தயாராக இருக்கிறாள்.

    தேர் மண்டபத்திலிருந்து முதலில் மகிசாசுரன் புறப்படுகிறான். பின்னர் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்ட முத்தாரம்மன் புறப்படுகிறாள். இருவரின் சப்பரங்களும் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கடற்கரைச் சாலையில் வந்து சேர்கின்றன. கடற்கரைச் சாலையில் நான்கு பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் முதல் பந்தலின் கீழ் அம்மன் வந்ததும், மகிசாசுரன் அம்மனை மூன்று முறை வலம் வருகிறான். பின்னர் அம்மனின் சப்பரத்திற்கும் மகிசனின் சப்பரத்திற்கும் இடையில் கயிறு பிடிக்கப்பட்டு, அக்கயிற்றின் வழியாக ராக்கட் வாணம் பற்றவைக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது. அது கயிற்றின் இருமுனைகளுக்கும் இருமுறை சென்று வருகிறது. இச்செயல் அம்மனுக்கும் மகிசனுக்கும் இடையில் நடப்பது போலச் சித்தரிக்கப்படுகிறது.

    அம்மன் சப்பரத்திலிருந்து சூலாயுதம் புறப்பட்டு, மகிசனின் அசுரத் தலையைக் கொய்கிறது. அப்போது காளிவேடம் அணிந்த பக்தர்களும் தம் கையில் ஏந்திய சூலாயுதங்களுடன் மகிசனைக் கொல்ல ஆவேசமாக வருகின்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் நூறு அடி தொலைவில் உள்ள இரண்டாவது பந்தலுக்கு அம்மன் சப்பரம் நகரத் தொடங்கும் வேளையில் மகிசாசுரன் சிம்மத்தலையுடன் முன்னால் செல்கிறான். அம்மனின் சூலாயுதத்தால் மகிசனது சிம்மத்தலை வெட்டப்படுகிறது.

    மூன்றாவது பந்தலில் மகிசனின் எருமைத் தலை வெட்டப்படுகிறது. இறுதியில் மகிசன் சேவல் தலையுடன் நான்காவது பந்தலுக்குச் செல்கிறான். அங்குச் சேவல் தலை வெட்டப்படுகிறது. உடனே பக்தர்களின் ஆரவாரத்துடன் வாணவேடிக்கை முழங்குகிறது. அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள கடற்கரை மேடையில் எழுந்தருளுகிறாள். வெற்றி வாகை சூடிய அம்மனைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அபிஷேக ஆராதனைகள் அம்மனுக்குச் செய்யப்படுகின்றன. பின்னர் அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல, அங்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து அம்மன் தேரில் புறப்பட்டு தேர் மண்டபத்துக்கு வந்து சேர்கிறாள்.

    மறுநாள் அதிகாலை கோவில் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளுகிறாள். அங்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீதிஉலாச் செல்லும் அம்மன் மாலையில் கோவிலுக்கு வந்து சேர்கிறாள்.

    பின்னர் கொடி மரத்திலிருந்து இறக்கப்படுகிறது. அம்மன், சுவாமி, பிற தெய்வங்களுக்குக் கட்டப்பட்டுள்ள காப்புக்கள் களையப்படுகின்றன. தொடர்ந்த பூசாரிகளும் பக்தர்களும் காப்புக்களைக் களைகின்றனர். நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்குச் சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று நண்பகல் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பன்னிரண்டாம் நாளன்று காலை எட்டு மணிக்கும் பத்து மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    • வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.
    • இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரிகள் சகலபாக்கியங்களையும் தரும்.

    அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும்.

    இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம்.

    உடலும் தீபமும்

    விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி! கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.

    தொடர்பு ஏற்படுத்தும் தீபம்

    ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மாவாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன! விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் இறையருள் ஒளியாக உள்ளது.

    எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவை.

    அதைப் போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது.

    இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

    குத்துவிளக்கில் பெண்மை!

    குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன. அவை, அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியனவாகும்.

    விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்!

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தைச் செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும்.

    வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்!

    பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.

    மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வமாடத்தில் ஏற்றலாம்.

    ஆனால் எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது.

    தீபங்களும் திரிகளும்!

    பருத்தி பஞ்சினால் ஆன திரிகள் நல்லவை அனைத்தும் செய்யும்.

    இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரிகள் சகலபாக்கியங்களையும் தரும்.

    தாமரைத்தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது. முன் வினைப் பாவத்தை போக்கும். செல்வம் நிலைத்து இருக்கும்.

    வாழைத் தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால், குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம், குடும்ப சாபம் முதலியவை நீங்கி அமைதி உண்டாகும். குல தெய்வ குறைபாடு நீங்கும்.

    வெள்ளை எருக்கம் பட்டையில் திரித்த திரியால், பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லைகள் நீங்கும். பிள்ளையார் அருள் கிட்டும்.

    புதுமஞ்சள் சேலை திரி:

    அம்மன் அருள் கிட்டும், வியாதிகள் குணமாகும், காற்று, கருப்பு சேட்டைகள் நீங்கும்.

    சிகப்பு நிற சேலைத் திரி:

    திருமணத் தடை நீங்கும், மலட்டுத்தன்மை செய்வினை தோஷங்கள் முதலானவை விலகும்.

    பன்னீர் விட்டு காய வைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஆகாத எண்ணை!

    கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.

    இறைவனுக்கு உகந்த எண்ணை விபரம் வருமாறு:-

    மகாலட்சுமிக்கு- நெய்

    திருமால், சர்வதேவதைகளுக்கு- நல்லெண்ணை

    விநாயகருக்கு- தேங்காய் எண்ணெய்

    சிவபெருமானுக்கு- இலுப்பை எண்ணெய்

    அம்பாளுக்கு- நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஏற்ற எண்ணை

    பசு நெய்: லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

    நல்லெண்ணை: பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

    தேங்காய் எண்ணெய்: லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.

    இலுப்பை எண்ணை: எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.

    விளக்கெண்ணை: தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.

    வேப்ப எண்ணை: குலதெய்வ அருள் கிடைக்கும்.

    மூவகை எண்ணை: நெய், வேப்பஎண்ணெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

    தீபம் ஏற்றுவதின் பலன்கள்

    ஒருமுக தீபம்: சாதாரணமாக வீடுகளில், குத்து விளக்கில் ஒற்றைத் திரியுள்ள தீபம் ஏற்றக்கூடாது.

    இருமுக தீபம்: பிரிந்தவர் கூடுவர், குடும்ப ஒற்றுமை வளரும்.

    மூன்றுமுக தீபம்: புத்திர சுகம் ஏற்படும். குழந்தைகளுக்கு படிப்பில் ஏற்படும் மறதி குறையும்.

    நான்முக தீபம்: பால்பாக்கியம் கிட்டும், பூமியின் அருள் கூடி நிலம் கிடைக்கும்.

    ஐந்துமுக தீபம்: அனைத்து நலன்களுடன் அம்பிகையின் பூரண அருளும் கிட்டும்.

    தீபம் ஏற்ற வேண்டிய திசைகள்!

    கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்ற, துன்பங்கள் நீங்கும்.

    மேற்கு திசை நோக்கி விளக்கேற்ற கடன் தொல்லை நீங்கும், பகை நீங்கும்.

    வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கும். திரவியம் கிட்டும். சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

    தீபம் ஏற்றக் கூடாத திசை!

    தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.

    விளக்கிற்கு பொட்டு இடுதல்!

    விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பொட்டிட்டு வழிபட வேண்டும்.

    விளக்கிற்கு ஏற்ற ஆசனம்!

    விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

    விளக்கை அலங்கரிக்கும் முறை!

    ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.

    குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும். நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.

    உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.

    இவ்வாறு திருவிளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    தீபம் ஏற்றும் நேரம்!

    தினமும் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்ற சர்வமங்கல யோகத்தை தரும்.

    காலையில் வாசலில் சாணம் தெளித்து, கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

    மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை தேடி வரும்.

    மாலையில், விளக்கேற்றும் போது வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

    காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லப்புறக்கதவை சாத்திவிட வேண்டும். கொல்லைப்புற கதவு இல்லாதவர்கள் பின்பக்கமுள்ள சன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கேற்றும் போது விளக்கிற்குப் பால், கல்கண்டு நிவேதம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    விளக்குப் பாடல்!

    வீட்டில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட பாடலை ஆறு முறை கூறி, ஒவ்வொரு முறையும் விளக்கிற்கு பூ போட்டு, பூமியைத் தொட்டு வணங்கி வழிபட எல்லா சுகங்களும் கிட்டும்!

    தீப ஜோதியானவளே நமஸ்காரம்

    திருவாகி வந்தவளே நமஸ்காரம்

    ஆபத்பாந்தவியே நமஸ்காரம்

    அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்

    • பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.
    • ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.

    ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

    மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன் போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    வரலாறு:

    முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    ஸ்தல விருட்சம்:

    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தல வரலாறு:

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவறால் பார்வதியை பூலோகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.

    பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

    விழாக்கள்:

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    எப்படி செல்வது:

    1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    2) காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன.

    3) அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.

    • ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.
    • அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள்.

    ஒரு வருடம் என்பது இரண்டு இரண்டு மாதங்களாக மொத்தம் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முதலாக வருவது வசந்தம் என்னும் ருது. ருதூநாம் குஸுமாகர: ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். வசந்த ருது ஆரம்பமாகும் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் 9 ராத்திரிகள் அம்பிகை ஆராதிக்க சிறந்த காலம்.

    இதையே வசந்த நவராத்திரி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 1) தேவி நவராத்திரி, 2) வாராகி நவராத்திரி, 3) சரந் நவராத்திரி, 4) சியாமளா நவராத்திரி என்பதாக மொத்தம் நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என்பது ஸ்ரீவித்யா சாஸ்திரம்.

    அவற்றில் நாம் ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் ஸ்ரீ வித்யா மார்கத்தில் ஈடுபட்டு சத்குரு மூலம் மந்திர உபதேசம்- தீட்சை பெற்று நவாவரணம் போன்ற விசேஷ பூஜைகளைச் செய்பவர்கள் இந்த 4 நவராத்திரிகளையுமே அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள். சைத்ர மாதம் சுக்ல பட்ச பிரதமையான இன்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாட்களிலும் தினசரி தேவியை விசேஷமாகப் பூஜைகள் செய்து ஸ்தோத்ர பாராயணம் செய்து கன்னிகா பூஜை கள் செய்து கொண்டாடலாம். மேலும் நவாவரண பூஜை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், சப்த சதீ பாராயணம், சுவாசிநீ பூஜை, சண்டீ ஹோமம் போன்றவற்றால் அம்மனை ஆராதிக்கலாம்.

    திருப்பாவாடை கல்யாண உற்சவம்

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் தேவஸ்தானத்தின் 36-ம் ஆண்டு பங்குனி ரேவதி திருமஞ்சன திருப்பாவாடை கல்யாணம் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு- 9442313789.

    • நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.
    • சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை.

    ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.

    இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியாமளா தேவி நவராத்திரி விரதம் தொடங்குகிறது.

    சியாமளா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராஜசியாமளா தேவியின் மந்திரங்களை குருமுகமாக உபதேசம் செய்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

    காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகம் என்னும் புத்தகத்தில் சியாமளா தேவி மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் ஆர்வமுள்ளவளாக, எட்டுக் கைகளுடன், மரகதப் பச்சை நிறமுள்ளவளாக, மார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக நெற்றியில் சந்திர கலையை அணிந்து கொண்டவளாக, கைகளில் கரும்பு வில், மலர் அம்பு, பாசம், அங்குசம் ஆகிய வற்றை தரித்தவளாக கரங்களில் கிளியுடன் தியானம் செய்வதாக வர்ணிக்கப்பட்டுள்ளாள்.

    ராஜ சியாமளா, மாதங்கி, மந்திரிணீ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இவள் மதங்க முனிவரின் மகளாக அவதரித்தவள். தசமகாவித்யைகளுள் ஒன்பதாவது வித்தையாக அறியப்படுபவள்.

    கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியான சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஆகவே மந்திரிணி என்று அழைக்கப்படுகிறாள்.

    லலிதா தேவி பண்டாசூரனுடன் போருக்கு புறப்பட்ட போது லலிதா தேவியின் கையில் உள்ள மனஸ் தத்துவமான கரும்பில் இருந்து தோன்றியவளே சியாமளா தேவி, லலிதா பரமேஸ்வரியின் மகாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருள் புரியும் இவள் லலிதா தேவிக்கு சக்தியை தந்தவள், லலிதா தேவியின் அக்சர சக்தியாக விளங்குபவள், சரஸ்வதியை போன்றே அருளுபவள்.

    என்றாலும் கூட வெளியில் உள்ள கலைகளுக்கும் திறமைகளுக்கும் அதிபதி சரஸ்வதி, சியாமளா தேவியோ தகரா காசத்தில் உள்ள கலைகளுக்கு அதிபதி, அம்பிகையின் பிரதிநிதியாக, ஆட்சி நடத்துபவள்.

    மேலும் கதம்பவனவாசினி என்றும் இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். அதாவது ஸ்ரீ லலிதா தேவியின் நிவாச தலமான ஸ்ரீநகரத்தில் சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்கிறாள் சியாமளா தேவி. மதுரை மாநகருக்கு கதம்பவனம் என்ற ஒரு பெயரும் உண்டு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள்.

    பண்டாசூர வதத்தின்போது, கேயசக்ரம் என்னும் தேரில் இருந்து கொண்டு லலிதா தேவிக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசூரனின் தம்பியான விஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள்.

    வீணையைக் கையில் தாங்கிக் கொண்டு காட்சி தரும் சியாமளா தேவி சங்கீதக் கலைக்கு தலைவி ஆவாள். சங்கீதம் கற்றுக் கொள்பவர்களுக்கும் சங்கீதத்தை உபாசிப்பவர்களுக்கும் குறிப்பாக வீணை வாசிப்பவர்களுக்கும் விசேஷமாக அருள் புரிபவள் சியாமளா. ஆகவே இன்று முதல் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சங்கீத இசை பாடுவதாலும் சங்கீதத்தை கேட்பதாலும் சங்கீதத்தில் ஈடுபட்ட இசை வல்லுனர்களை தேவியாக பாவித்து தாம்பூலம் தந்து மகிழ்விப்பதாலும் சியாமளா தேவியின் பூரண அருள் கிடைக்கும்.

    • பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு திருக்கன் சாத்தி மலர் தூவி அம்மனை வரவேற்றனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், மன்னர்கள் தங்களது தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். அதைதொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந் தேதி வரை நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் கடந்த 23-ந்தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன. நவராத்திரி விழா முடிந்த பின்பு கடந்த 7-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இந்த சாமிசிலைகள் நேற்று முன்தினம் மாலையில் பத்மநாபபுரம் அரண்மனையை வந்து அடைந்தன. அரண்மனை வாசலில் சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலை குமாரகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. அம்மன் சிலைக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் நுழைவு வாயில் முன்பு தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதன் பின்பு அம்மன் சிலை மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது.

    அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு திருக்கன் சாத்தி மலர் தூவி அம்மனை வரவேற்றனர். பின்னர், அம்மன் கோவில் முன்பு வரும்போது தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்தநிகழ்ச்சியில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, பா.ஜனதா விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன், கோவில் ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், நவராத்திரி குழு தலைவர் வீரபத்திர பிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், கேரள அறநிலையத் துறையினரும், நவராத்திரி குழு அமைப்பினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • 26-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பூஜைகள் நடந்தன.
    • பக்தர்கள் மலர்தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய சாமி சிலைகள் புறப்பட்டு சென்றன. அங்கு 26-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பூஜைகள் நடந்தன.

    ஒரு நாள் ஓய்வுக்கு பின், கடந்த 7-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட சாமி சிலைகள் நேற்று முன்தினம் களியக்காவிளைக்கு வந்தன. அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு குழித்துறையில் தங்கி விட்டு நேற்று காலையில் குழித்துறை மகாதேவர் கோலில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டன. மார்த்தாண்டம், சாமியார்மடம், அழகிய மண்டபம், பரைக்கோடு, மணலி, சாரோடு வழியாக வந்த சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பத்மநாபபுரம் அரண்மனை கோட்டை வாசல் வந்த சாமி சிலைகளை பத்மநாபபுரம் பகுதி பக்தர்கள் தாலபொலிவுடன் மலர்தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் ரதவீதியில் வந்த சாமிகளில் வேளிமலை முருகபெருமான் வடக்குதெரு வழியாக குமாரகோவிலுக்கு புறப்பட்டு சென்றது, சரஸ்வதிதேவியும், முன்னுதித்த நங்கையம்மனும் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடைந்தபோது தமிழக, கேரள மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மன்னரின் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உப்பரிகை மாளிகையில் உள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டது. யானைமீது அமர்ந்து வந்த சரஸ்வதி அம்மன் விக்ரகத்திற்கு அரண்மனையில் உள்ள ஓமப்புரைக்குளத்தில் வைத்து ஆராட்டு நடத்தப்பட்டு தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்றிரவு பத்மநாபபுரத்தில் தங்கிவிட்டு இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் வந்து சேருகிறது.

    • சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த 23-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதிதேவி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.

    இதில் திருவனந்த புரத்தில் நடந்த நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. நவராத்திரி விழா முடிவுற்ற பின்னர் 8-ந் தேதி அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. அந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பளித்தனர்.

    இந்நிலையில் நேற்று குமரி - கேரள எல்லைப்பகுதி யான களியக்காவிளையில் பக்தர்கள் மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் திரளாக கூடி நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபு ரம், குழித்துறை, தபால் நிலைய சந்திப்பு வழியாக குழித்துறை மகா தேவர் ஆலயத்தை வந்த டைந்தது. அங்கு நேற்று தங்கலுக்கு பின்னர் இன்று அதிகாலையில் குழித்துறை மகாதேவர் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகள் வழி அனுப்பப்பட்டது.

    இதில் தமிழக போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு அங்கிருந்து பத்மநாப புரத்திற்கு புறப்பட்டு சென்றது.இந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

    பத்மநாபபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்த சாமி சிலைகள் நாளை (10-ந் தேதி) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×