search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • 5-ந்தேதி அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் கிணற்றில் இருந்து எடுத்து கொண்டு வரப்படும்.

    அதன்படி நேற்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் புனித நீர் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    யானை ஊர்வலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வாகன பவனி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    10-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்துக்கு மாலை சென்றடைந்து பரிவேட்டை நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

    அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    மேலும் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியை கோவில் நிர்வாகத்தினருடன் கன்னியாகுமரி பக்தர்கள் சங்கமும் இணைந்து செய்கிறது.

    • சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
    • பூஜைகள் முடிந்த பின்னர் 7-ந்தேதி மீண்டும் குமரிக்கு புறப்படும்.

    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி திருவனந்தபுரம் செல்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கடந்த 22-ந் தேதி ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் குமரி மாவட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி 23-ந் தேதி பத்மநாபபுரத்தில் நடந்தது.

    இதையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் தமிழக, கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் உடைவாள் முன் செல்ல யானை மீது சரஸ்வதி அம்மனும், பூ பல்லக்குகளில் குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சாமி சிலைகளும் ஊர்வலமாக புறப்பட்டன. ஊர்வலம் அன்று இரவு குழித்துறையில் தங்கியது.

    குழித்துறையில் இருந்து புறப்பட்டு தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு கேரள போலீசார் சார்பில் சாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து சாமி சிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணன்கோவிலில் தங்கின. நேற்று முன்தினம் காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணியளவில் திருவனந்தபுரம் கரமனையை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைகளுக்கு பக்தர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அத்துடன் பூ பல்லக்கில் கொண்டு செல்லப்பட்ட குமாரகோவில் முருகன் சிலையை வெள்ளி குதிரை மீது அமர்த்தி பக்தர்கள் எடுத்து சென்றனர்.

    பின்னர் சரஸ்வதிதேவி அம்மன் பத்மநாபசாமி கோவில் நவராத்திரி மண்டபத்திலும், முன்னுதித்த நங்கை அம்மன் ஆரியசாலை பகவதி அம்மன் கோவிலிலும், முருகபெருமான் செந்திட்டை பகவதி அம்மன் கோவிலிலும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று முதல் வருகிற 5-ந் தேதி வரை நவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. பூஜைகள் முடிந்த பின்னர் ஒருநாள் நல்லிருப்பிற்கு பின்பு 7-ந் தேதி மீண்டும் குமரிக்கு புறப்படும்.

    • தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர்.
    • கொலுப்படிகளை ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும்.

    'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்றும் பொருள். ஒன்பது இரவுகளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டுவந்தால் பொன், பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த அற்புதமான நவராத்திரி திருநாள், புரட்டாசி 9-ம் நாள் (26.9.2022) திங்கட்கிழமை தொடங்குகிறது.

    ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான், கல்வியால் செல்வம் ஈட்டி, ஈட்டிய செல்வத்தை வீரத்தால் காப்பாற்றி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்றும் நாட்களும், செல்வம் தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், கல்விச் செல்வம் தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று தினங்களும் பூஜைசெய்து வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.

    தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும், உயிர்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடுகிறோம். கொலுப்படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுகளில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். உயரமான பீடத்தில் பராசக்தியை வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்கரித்துக் கொண்டாட வேண்டும்.

    கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், பூண்டு, செடி, கொடி தாவர வகைகளை வைக்க வேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட ஜீவ ராசிகளான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான், நான்காவது படியில் நான்கறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவ ராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள், நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் வைக்க வேண்டும். ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்ய வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலுபீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    சரஸ்வதி பூஜை அன்று பூஜையறையில் புத்தகங்கள், எழுதுகோல், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள், தொழிற்கருவிகள் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும். மறுநாள் தேவி வெற்றி பெற்ற திருநாளான விஜயதசமியிலும் வழிபாடுகள் செய்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • 5-ந்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி.
    • 4-ந்தேதி ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

    சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, தை அமாவாசை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று காலை 5 மணிக்கு காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 4-ந் தேதியன்று இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடைபெற உள்ளது.

    5-ந்தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    • நவராத்திரியின் முக்கிய நோக்கமே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான்.
    • எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

    2-வது நாள்- 27-9-2022 (செவ்வாய்க்கிழமை)

    வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

    பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.

    திதி : துவிதியை

    பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

    ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

    கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

    பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

    • ‘சக்தி கொலு’ என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 5-ந்தேதி ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    சென்னை

    சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது.

    நவராத்திரி திருவிழாவையொட்டி 'சக்தி கொலு' என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலுவை பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அருணின் இசை கச்சேரி நடந்தது. முதல் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொலுவை கண்டு ரசித்தனர்.

    நவராத்திரி திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 108 பேர் கொண்ட குழுவால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வேத பாராயணம் நடக்கிறது.

    காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு இசை கச்சேரி நடைபெறுகிறது.

    நவராத்திரி திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக மீனாட்சி அம்மனுக்கு அக்டோபர் 2-ந் தேதி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.

    நவராத்திரி விழாவின் நிறைவு பகுதியாக அக்டோபர் 5-ந் தேதியன்று 2½ வயது முதல் 3½ வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கி வைக்கும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    • ஆண்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு மரபு இருந்தது.
    • ஆண்கள் அந்தகாலத்தில் வெள்ளைநிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகள் உடுத்துகிற பழக்கமில்லை.

    எல்லார் வீடுகளிலும் நவராத்திரி பெருவிழா, நல்ல மகிழ்ச்சியோடும் கலகலப்பாகவும், குறைந்தபட்சம் சுண்டலோடும் கொண்டாடப்படும்.

    "வீடுதோறும் கலையின் விளக்கம்

    வீதிதோறும் இரண்டொரு பள்ளி"

    என்பது பாரதியின் கனவு.

    வீடு தோறும் கலையின் விளக்கம் என்றால், ஒரு சங்கீத கச்சேரிக்கு போய்தான் சங்கீத கச்சேரி கேக்கணும்.. ஒரு டான்ஸ் கச்சேரிக்கு போய் தான் டான்ஸ் பார்க்கணும்.. அப்படி என்கிறதையெல்லாம் தாண்டி ஒவ்வொருத்தருடைய வீட்டிலும் ஆடல் பாடல் இதெல்லாம் நிகழுனும் என்பதைத்தான் கலையின் விளக்கம் என்று பாரதி கண்டார்.

    டான்ஸ் என்கிறது யாரோ மேடையில் ஆடி, போக்கஸ் லைட்டு வச்சு பார்க்கிறது என்பதாக இருக்கக்கூடாது.

    நம்ம ஆடணும்.. அவங்க அவங்க வீட்டுல எல்லாரும் மகிழ்சியா ஆடணும், பாடணும்.. அது தான் நவராத்திரி.

    எல்லாரும் ஆடிப்பாடி மங்களகரமாக இருக்கிற கலர்புல் விழா தான் நவராத்திரி.

    பெண்கள் எங்கு சம்பந்தப்பட்டாலுமே அங்கே வண்ணம் வந்திரும்.. கலர் வந்துடும்..

    ஆண்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு மரபு இருந்தது. ஆண்கள் அந்தகாலத்தில் வெள்ளைநிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகள் உடுத்துகிற பழக்கமில்லை.

    அந்த காலத்துல பெண்களுக்கு வெள்ளைநிற உடை கொடுக்க மாட்டார்கள். அதை வேறு மாதிரி நினைப்பாங்க.

    ஏன் வெள்ளை என்பதை ஒற்றை நிறமாகவும் மற்றதையெல்லாம் வண்ணமாக கருதுறாங்க?

    பெண்களுக்கு வண்ணங்கள், ஆண்களுக்கு வெள்ளையுமாக வச்சிருக்காங்களே ஏன்?

    வெண்மை என்பது ஒற்றை நிறமில்எலை. அது எல்லா நிறங்களும் ஒடுங்கிய நிலை. அதை பிரித்தால் ஏழு வண்ணங்களாக விரிவடையும்.

    சிவன் என்பது ஒடுக்கம்.

    அம்பிகை என்பது விரிவு.

    ஒடுக்கம் என்பது சிவனாகவும், விரிவு என்பது அம்பிகையாவும் கொண்டாடப்படுகிறது.

    இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது?

    எல்லாம் ஒன்றில் ஒடுங்குது, பின்பு விரியுது. திரும்பி எல்லாம் ஒன்னுல ஒடுங்குது, மீண்டும் அதிலிருந்து விரியுது. இப்படித்தான் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    "ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து

    இவ்வுலகு எங்குமாய் நின்றாள்"

    என அம்பிகையைப் பாடுகிறார் அமிராமி பட்டர்.

    அப்ப கடவுள் என்பது கூட ஒடுங்கி ஒற்றை நிலையில் நின்றால் அது சிவம். அது பலவாய் விருத்தி அடைந்தால் அம்பிகை.

    எப்படி ஒரு வேடிக்கையான கணக்கை வைத்துள்ளார்கள் பாருங்கள்..

    ஒன்பது நாள் நவராத்திரி

    ஒரேஒரு நாள் சிவராத்திரி

    இதுல என்ன கணக்கு இருக்கு? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக யோசிப்போம்..

    ஒன்று என்பது எண்ணிக்கையின் தொடக்கம்.

    ஒன்பது என்பது எண்ணிக்கையின் முடிவு. சரியாகச் சொன்னால் முடிவில்லாதது எனலாம்.

    ஒன்று ஒன்பது ஆதல் என்பது சிவராத்திரி நவராத்திரியாக ஆதல்.

    ஒரு அவரை விதையை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதற்குள் எத்தனை விதைகள் இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியுமா?

    நீங்கள் ஒரு அவரை விதையை ஆடி மாதத்தில் நட்டு வைத்தால், அது முளைத்து துளிர்விட்டு கொடியாகி பூத்து ஆயிரக்கணக்கான காய்களை காய்க்கும். அந்த காய்களில் லட்சக்கணக்கான விதைகள் இருக்கும்.

    ஒரு விதையை பூமியில் போட்டால் ஒரு லட்சம் விதை வரும்.. ஒரு கோடி விதை கூட வரும். இப்படி பெருகிகொண்டு போய்கிட்டே இருக்கும்.

    வித்து என்பது சிவம். அது முளைத்து எண்ணிலடங்கா காய்களைத் தருவது என்பது அம்பிகை.

    ஒன்றாக இருத்தல் சிவராத்திரி,

    ஒன்பதாக ஆகுதல் நவராத்திரி.

    ஒன்றாக இருக்கிற விதையை ஒன்பதாக ஆக்குவது, சிவனை சீவனாக ஆக்குவது தான் நவராத்திரி.

    சிவன் மூலப்பொருள். அதை சீவனாக ஆக்குகிறாள் அம்பிகை. அது ஒரு மாயை.

    ஒரு விதையை பூமியில் போட்டால் அது ஒன்பது லட்சம் விதையாக மாறும். இதைவிட பெரிய மாயை என்ன வேணும்?

    இந்த மாயைக்கு பெயர் மகா மாயா. இதைத்தான் மகமாயி என்று அழைக்கிறார்கள். அவள்தான் அம்பிகை.

    அவள் மாயையினால் ஒன்றை பலமாக ஆக்குகிறாள்.

    ஒரு சிவனை பல கோடி சீவன்களாக மாற்றுகிறாள் மகா மாயா.

    இதற்காக கொண்டாடப்படும் விழாதான் நவராத்திரி.

    அபிவிருத்தியாதல்.. ஒன்றாக இருந்தது பலவாக மாறி இந்த உலகத்தை வண்ணமயப்படுத்துதல்.. அழகுப்படுத்துதல்.. இது தான் நவராத்திரியின் தத்துவம்.

    அது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என.. கல்வி, செல்வம், வீரம் என.. இவற்றோடு வெற்றி விழாவான விஜயதசமியும் சேர்த்து கொண்டாடுகிற பெரிய திருவிழாவாக மாறி உள்ளது.

    புராணக்கதைகள் நிறைய சொல்லுவோம். குழந்தை மனம் கொண்டவர்களுக்கு தான் இந்த புராணக்கதைகள் எல்லாம்.

    எருமை வடிவத்தில் ஒரு அரக்கன் வந்தான் என்பார்கள். எருமை வடிவத்தில் ஒருவன் இருக்க முடியுமா..? எருமை மாதிரி இருக்க முடியும்.

    மகிஷாசுரன் அப்படின்னு அவனுக்கு பேரு. ஏன் அப்படி சொன்னார்கள்?

    எருமை மாடு சோம்பல் மிகுந்தது. நமக்குள் இருக்கிற சோம்பலைத்தான் எருமைத்தனத்துடன் ஒப்பிட்டு அப்படி கூறினார்கள்.

    சோம்பலுக்கு தமோ குணம் என்று பெயர். அதை சகித்துக்கொண்டு வாழ முடியுமா?

    முடியாது.

    சோம்பலை வீழ்த்தினால் தான் நாம் வாழ்வில் முன்னேற முடியும்.

    அப்போ அதனை வீழ்த்தணும். அதை எது வீழ்த்தும் என்றால் மனோ பலம் தான் வீழ்த்தும்.

    துர்க்கை என்பது மன உறுதி.

    துர்க்கம் என்றால் அரண் என்று பொருள்.

    துர்க்கா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

    கோட்டை மதில் சுவருக்கு துர்க்கம் என்று பெயர். அதில் ஒரு தேவதையை வைப்பார்கள். பாதுகாப்புக்கு காவல் தேவதையாக வைப்பார்கள். அதுக்குதான் துர்க்கா என்று பெயர். துர்க்கத்தில் வைக்கப்படுகிற தேவதை துர்க்கா.

    இந்த தேவதை மன உறுதி உடையவள்.

    மன உறுதிக்கு அடையாளம் துர்க்கை.

    அது எதை வெல்லும்?

    நமக்குள் இருக்கிற சோம்பல் என்கிற மகிஷாசுர அரக்கனைக் கொல்லும்.

    மன உறுதி சோம்பலை வெல்லும் என்கிற உருவகத்தைதான் இந்த புராணக்கதை காட்டுகிறது.

    சுகி சிவம் சொற்பொழிவிலிருந்து தொகுத்தவர் கோ.வசந்தராஜ்

    • இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
    • நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது.

    இதற்காக கோவிலுக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.

    மேலும் நவராத்திரி விழா காலத்தில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதேபோல் ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் தினசரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றினார்.
    • ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.நவராத்திரி, Navaratri

    சென்னை :

    மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் நேற்று காலை 9.30 மணி அளவில் அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து நவராத்திரி விழாவினை தொடங்கி வைத்தார்.

    சித்தர் பீடத்திற்கு வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு மேளதாளம் முழங்க சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர் கள் வரவேற்பு அளித்து பாத பூஜை செய்தனர்.

    சித்தர் பீடத்தின் வளாகம் முழுவதும் கலை நயத்துடன் பூக்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நேற்று அதிகாலை 2 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நவராத்திரி விழாவில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    காலை 9.30 மணி அளவில் அடிகளார் கருவறைக்கு சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் ஏற்றி வைத்தார்.

    பின்னர் அந்த அகண்ட தீபத்தை சிறுமிகளிடம் கையில் கொடுத்து சித்தர் பீடத்தை வலம் வரும்படி கூறினார். அகண்ட தீபத்திற்கு பல்வேறு வகையில் திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளையும் வலம் வந்த அகண்ட தீபம் 10 மணியளவில் கருவறையினுள் தென்கிழக்கு திசையில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டு இருந்த தனி பீடத்தில் வைக்கப்பட்டு பங்காரு அடிகளார், ஆன்மீக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோர் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தீபாராதனை செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் கருவறையில் அமைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி காலை 11.20 மணிக்கு அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று தொடங்கிய நவராத்திரி விழா வருகிற 5-ந்தேதி வரை நடைபெறுகிறது ஆதிபராசக்தி அம்மனுக்கு தினம்தோறும் பல்வேறு காப்பு மற்றும் அலங்காரத்துடன் நவராத்திரி விழா நடை பெறும்.

    விழா ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் அனைத்து மாவட்ட ஆதி பராசக்தி ஆன்மிக கத்தினர் பொறுப்பேற்று செய்திருந்தனர்.

    • ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும்.
    • நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும்.

    நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகு படுத்தலாம்.

    கடந்த வருடம் வாங்கிய பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும். ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள்.

    கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள். விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல் வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள். கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை இன்றே செய்ய வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண்டும்.

    நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். கொலு அமைக்க நாளை 27-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7.45 மணி முதல் 8.45 வரையும் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையும் நல்ல நேரம் ஆகும். அப்போது கொலு அமைக்கலாம். அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம். கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

    நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது.

    கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர் கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும்.

    விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தை களை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம்.

    வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தி னால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.

    • கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
    • எங்களது வாசகர்களுக்கு எங்களால் முடிந்த குறிப்புகளை இங்கே தருகிறோம்.

    கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். மற்றவர்களில் இருந்து தங்களது கொலு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அவ்வாறு எண்ணும் எங்களது வாசகர்களுக்கு எங்களால் முடிந்த ஒருசில குறிப்புகளை இங்கே தருகிறோம்.

    குறிப்புகள்: கொலுவில் முக்கியமானது கலசம், தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும், நிஜத்தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை. ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளாஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும். ப்ளாஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத் தில் வாங்கிக் கொள்ளுங்கள்.

    தங்கநிற சம்கிகள் சிறு இலை வடிவில் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள். குடத்தின் வாய்ப் பகுதிக்கு வெள்ளி நிறலேஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள். தங்கக் கலசம் தயார்.

    கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ தொட்டியிலோ கேழ்வரகு, கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய் மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அல்லது சதுர அல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புதுப்பொலிவினைத்தரும்.

    பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பாரம் போல தெரியும். உலர்த்திய காபிப்பொடியால் தார்சாலை நடுவில் அமைக்கலாம். சிறு ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டி செடிகள் செய்யலாம். அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.

    புத்தகங்களின் அட்டைப் பக்கத்தில் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் ஒட்டி கொலு முகப்பில் வைக்கலாம். கொலுவிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
    • எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    ×