search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாவுருட்டி அருவி"

    • செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லை பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் கேரள எல்லைக்கு உட்பட்ட அச்சன்கோவிலில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. அங்கு 4,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

    கும்பாவுருட்டி அருவி

    இங்குள்ளவர்கள் ரப்பர் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அய்யப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இங்கு அமைந்துள்ள கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி கொள்ளை கொள்ளும் அழகை கொண்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவிக்கு மேக்கரை சோதனை சாவடி அருகில் அமைந்துள்ள மணலாறு வழியாக செல்ல வேண்டும். செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    1,200 அடி உயரம்

    மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் வடபுறத்தில் தரைமட்டத்தில் இருந்து 1,200 அடி உயரத்தில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி அச்சன்கோவிலிலுக்கு செல்லும் வழியில் 12 கொண்டைஊசி வளைவு கொண்ட குறுகிய மலை வழியாக செல்லும் சாலையில் இந்த அருவி அமைந்துள்ளது.

    இதன் அழகை காணவும், ஆனந்தமாக குளியல் போடவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த அருவியானது முழுமையாக காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அருவிக்கு செல்லும் பாதையின் இருபுறத்திலும் அடர்ந்த மரங்கள் இருக்கும்.

    குளிக்க தடை

    இங்கு வாழும் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியானது பல்வேறு மூலிகைகளை சுமந்து வருவதால், மிகவும் புனிதமானதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருந்தும் கடந்த 2018-ம்ஆண்டு அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் கவனக்குறைவால் நிலை தடுமாறி விழுந்ததால் அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது.

    மீண்டும் அனுமதி

    இந்நிலையில் தற்போது தடைவிதிக்கப்பட்ட அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழக-கேரள எல்லை பகுதி வரையிலான அருவி சாலையானது மிகவும் மோசமாக உள்ளதால் இங்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. மேலும் நடுக்காட்டில் அருவி உள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏதேனும் நேரிட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழி இல்லாமல் போய்விடுகிறது.

    கோரிக்கை

    எனவே அருவிக்கு அருகிலேயே முதலுதவி அறைகள் அமைத்து டாக்டர்களை நியமிக்க வேண்டும். பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வர அருவி பகுதியில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    தமிழக எல்லையான மேக்கரை வரை தென்காசியில் இருந்து பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கர்நாடகம் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு தென்காசியில் இருந்து கும்பாவுருட்டி அருவி வரை போக்குவரத்து வசதி நீடித்தால் சுற்றுலா பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளா நீர்வளத்துறை சார்பில் தற்போது அருவி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் 2 மாநில பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×