என் மலர்
நீங்கள் தேடியது "மின் கம்பம்"
- கீழக்கரையில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பங்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பாவது:-
கீழக்கரை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மக்கள் அதிகம் நடமாடக்கூடிய முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு இருந்த மின் கம்பத்ைத அகற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும். கீழக்கரை முக்கு ரோட்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்து கொண்டு இருக்கிறது. அந்த மின்கம்பத்தில் மின்சாரம் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் கீழக்கரையில் தெருக்களில் ஆங்காங்கே மின்சார வயர்கள் பொதுமக்கள் தொடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவைகளை உயரத்தில் கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் நிகழ்வில் நகர செயலாளர் காதர், துணைத்தலைவர்கள் சுல்தான், சிக்கந்தர், ரீகான் செயற்குழு உறுப்பினர்கள் ஜலீல், ராஜா, சித்திக், அஸ்ரப் மற்றும் தாஜூல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சேலம் மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
- மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கியபோது விபத்து.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் சேலம் அம்மாபேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்த போது அம்மாபேட்டை கவுண்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கினார்.
அப்போது செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் அடிபட்டு மயங்கிய இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ர்
- தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
- மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
- 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சாய்ந்து விழும் அபாய நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது.
- அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
காங்கயம் :
காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலைக்கவுண்டன்வலசு பகுதியில் குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சாய்ந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.
பலமான காற்று வீசும் போது மின் கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
- பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 18 வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் வேப்பமரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மாநகராட்சி குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
- ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது.
- முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது.
பெரியபாளையம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடைவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருவள்ளூரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலின் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அதனை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அதே இடத்தில் கிரேன் மூலம் நட்டு வைத்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. அப்பொழுது மின் தடை ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் ஆத்துமேடு பகுதிக்கு செல்லும் மின் வயர்களை துண்டித்து விட்டு மின்சார சப்ளை செய்து விட்டு சென்றனர்.
இதனால் முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் மின் மோட்டார்கள் இயக்க முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.
தற்போது குருவை சாகுபடிக்கு நாற்றங்கால் காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை மாற்றி மின் சப்ளை செய்ய கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய துறையின் வாட்ஸ் அப் எண்ணில் விவசாயிகள் புகார் மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
- மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது.
- மின்சார கம்பிகள் மீது விழுந்தது.
உடுமலை :
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் தனியார் இடத்தில் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது. பிரமாண்டமாக வளர்ந்து இருந்த வேப்ப மரத்தின் கிளைகள் மின்சார வாள் மூலம் அறுக்கும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெட்டப்பட்ட பெரிய மரக்கிளை ஒன்று அருகில் சென்ற மின்சார கம்பிகள் மீது விழுந்தது. கிளையின் எடை அதிகமாக இருந்ததால் பாரம் தாங்காமல் அருகில் உள்ள மின்கம்பம் உடைந்து நரசிங்காபுரத்திலிருந்து கருப்புசாமி புதூர் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதையடுத்து மரத்தை வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. மின்கம்பம் விழுந்த போது சாலையில் யாரும் செல்லாததாலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.விபத்து என்ற வகையில் சேதமடைந்த மின்கம்பங்களுக்கான செலவினங்களை மின்வாரியத்திற்கு செலுத்த சம்பந்தப்பட்ட நபர் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் தெரிவித்து உடனே மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் மரங்களை வெட்டும்போது உரிய அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் வெட்ட வேண்டும் என மின்வாரியத்தினர் வலியுறுத்தினர்.
- மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
- எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மதுரை மேலூரில் மின்சார ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலூர் பகுதியில் ஒரு மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மின் ஊழியர் ஷாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் ஷாஜியின் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இவரின் சொந்த ஊரான திருவட்டாரில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று மாலை அடக்கம் செய்ய ப்பட்டது.
- சாலையில் சென்று கொண்டிருந்த மாணவர் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்தது.
- மாணவனின் இடது காலில் கணுக்கால் முறிந்து துண்டாகி ரத்தம் கொட்டியது.
மதுரை:
மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே நேற்று மாலை கோச்சடை பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பரிதி விக்னேஸ்வரன் சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் கோச்சடை முத்தையா கோவில் அருகே மின்கம்பம் ஒன்று பழுதாகி சேதமடைந்து இருந்தது. பழுதான அந்த மின்கம்பத்தை மின்சார வாரியத்தினர் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது கட்டுக்கம்பிகளை மின்கம்பத்தில் கட்டி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் விழுந்தது. அதேநேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாணவர் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்தது.
இதில் மாணவனின் இடது காலில் கணுக்கால் முறிந்து துண்டாகி ரத்தம் கொட்டியது. இதனால் துடிதுடிக்க அந்தப் பகுதியில் கீழே விழுந்த மாணவன் விக்னேஸ்வரனை சக நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்கம்பம் மாற்றும் பணியின் போது எந்தவித அறிவிப்பு பலகையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு உபகரணங்களும் எதையும் பின்பற்றாமல் மிகவும் அஜாக்கிரதையாகவும், அலட்சியமாகவும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளால் தான் விக்னேஸ்வரனின் கணுக்கால் பகுதியை இழந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான தேசிய போட்டியில் கலந்துகொள்ள தன்னை தயார்படுத்தி வந்த மாணவர் பரிதி விக்னேஸ்வரன், மின் வாரிய துறையின் அலட்சியமான பணியால் கால் துண்டாகி தற்போது அவரது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாய் இருப்பதாக மாணவனின் நண்பர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவரின் தாய் கூறுகையில், 3 டன் எடை கொண்ட மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரியத்தினர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததே எனது மகனின் கால் துண்டாக காரணமாகும். போதிய வருவாய் இன்றி தவித்து வரும் எனது குடும்பத்தை காப்பாற்ற பலத்த காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு அரசு வேலை வழங்கவேண்டும். மேலும் இந்த விபத்துக்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் கம்பம் மாற்றும் பணியில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்படி தான் நடந்தது. ஆனால் மாணவரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது என்றார்.
இந்நிலையில் மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது அலட்சியமாக எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்புமின்றி பணிகள் மேற்கொண்ட கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இருவர் என மூன்று பேர் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:
குடிபோதையில் தொழிலாளி ஒருவர் செய்த அட்டகாசத்தால் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் நேற்று இரவு விடிய, விடிய தூங்காமல் தூக்கத்தை தொலைத்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 55). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
பூபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். நேற்று மாலையும் அவர் மதுகுடித்து விட்டு வந்தார். வழக்கத்தை விட அதிக போதையில் இருந்த அவர் அட்டகாசத்தின் உச்சிக்கே சென்றார்.
முதலில் அந்த பகுதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த ஓடுகளை பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பூபதியை கண்டித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகும் பூபதியின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் பூபதியின் தொல்லை அதிகரிக்கவே எரிச்சல் அடைந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார்.
உடனே தொண்டாமுத்தூர் போலீசாரும், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடமும் பூபதி, சண்டித்தனத்தை காட்டினார். அவர் போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து வீட்டில் போய் படுக்குமாறு கூறி விட்டு சென்றுவிட்டனர். போலீசாரை கண்டதும் பூபதி நல்லபிள்ளையாய் மாறி வீட்டில் போய் படுத்துக் கொண்டார். போலீசார் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். மரம் ஏறும் தொழிலாளி என்பதால் சர, சரவென மின்கம்பத்தில் ஏறிவிட்டார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார். அவரை கீழே இறங்கும்படி கூறி சத்தம் போட்டனர். யார் சொல்வதையும் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறினார். சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பூபதி தப்பினார். மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்தார்.
மீண்டும் போலீசுக்கு தகவல் பறக்க போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பூபதியிடம் நைசாக பேசி அவரை கீழே வரச் செய்தனர். அதற்குள் விடிந்து அதிகாலை 3 மணி ஆகிவிட்டது. பின்னர் பூபதியை போலீசார் தொண்டாமுத்தூர் போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் பூபதி மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களும் விடிய, விடிய தூங்காமல் தவிப்புக்கு ஆளானார்கள். பூபதியிடம் போலீசார் இன்று காலையில் விசாரணை மேற்கொண்டனர்.
- மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல் நிற்கிறது.
- தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் காந்தி ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல் நிற்கிறது. இந்த மின் கம்பத்திலிருந்து ஏராளமான மின் இணைப்புகள் செல்கின்றன. இதனால் அந்த மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
எந்த நேரமும் விழும் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அரசு கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே உள்ள பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் அமைந்துள்ளன. இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். மின் கம்பம் சாய்ந்து விழும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.