search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரகாளி அம்மன் திருவிழா"

    • வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்ட திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 2-ந் தேதி நடக்கிறது.
    • போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திருவிழாவுக்கு வந்து செல்லும் வகையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    சிறுமுகை :

    கோவை மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்ட திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 2-ந் தேதி நடக்கிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனபத்ர காளியம்மன் கோவிலில் வடக்கு மாவட்ட ஆர்.டி.ஓ.பூமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு வந்த அனைவரையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் வரவேற்றார். இதில் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் குண்டம் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் விதத்தில் போக்குவரத்து மாற்றம், குண்டம் இறங்கும் பக்தர்கள் பவானி ஆற்றுக்கு செல்லும் போது உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக உள்ள இந்த சாலையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும். திருவிழா முடியும் வரை மின்வாரிய துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திருவிழாவுக்கு வந்து செல்லும் வகையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் விழாவையொட்டி பவானி ஆற்றில் நீராட செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தீயணைப்புத்துறை சார்பில் நீச்சல் வீரர்கள், தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சுகாதாரத்துறை சார்பில் கோவில் பகுதியில் மருத்துவர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்படுத்தி தர தேவையான மருத்துவ வசதிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    இதேபோல கோவில் விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் சில இடங்கள் வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் வர வேண்டி உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    ×