search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி அலுவலகம்"

    • நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.
    • ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் வெளியேறினர். பின்னர், நகராட்சி அதிகாரிகளை வைத்து ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.

    அப்போது திடீரென பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழுவானது டெபுட்டி இன்ஸ்பெக்சன் செல் ஆபீஸர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.

    நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கணக்கில் வராத கையூட்டு தொகைகளை வைத்திருந்த நகராட்சி ஆணையர் குமரனிடமிருந்து ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேப்போல் உதவி பொறியாளர் மனோகரனிடம் ரூ.80 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடம் ரூ.66 ஆயிரம், டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் கணக்கில் வராத கையூட்டு பணம் சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில் ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம் பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டு மரத்திற்கு தாவியது.
    • கடந்த மாதமும் சாவியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் போக்கு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் திருத்தம், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனால் நகராட்சி அலுவலக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் ஒரு குரங்கு மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பொருட்களை தூக்கிச் சென்று விடுகிறது. நேற்று மதியம் இந்த குரங்கு, ஆதார் அட்டை திருத்தத்திற்கு வந்த இளம் பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டு மரத்திற்கு தாவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மரக்கிளைகளில் அமர்ந்த குரங்கு, பேக்கை திறந்து பார்த்தது. அதில் உணவு பொருள் ஏதும் இல்லாததால், பேக்கை தூக்கி எறிந்தது. பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளுக்கு வந்து அதில் இருந்த சாவியை தூக்கி சென்றது. அந்த சாவியை கையில் வைத்த படியும் வாயில் கவ்விய படியும் அங்கும் இங்குமாக தாவித்தாவி போக்கு காட்டியது.

    பின்னர் அங்கு நின்றவர்கள் குரங்கிற்கு வாழைப்பழத்தை வாங்கி கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட குரங்கு சாவியை தூக்கி எறிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதமும் இந்த குரங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் போக்கு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் குரங்கை பிடித்து காட்டில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயங்கர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயங்கர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே ராஜேசின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதகாட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தியது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் கொலையை கண்டித்தும், தப்பி ஓடிய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரியும் ராஜேசின் உறவினர்கள் அவரது நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நகராட்சியில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
    • குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள்,மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிட்டுள்ளபடி நேரம்,வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்ட படி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யா விட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
    • திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி பேரூராட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நகராட்சி பணிகளில் தொய்வு ஏறபட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகராட்சி தலைவர் குமார் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித்துறை நிர்வாக இயக்குனர் பொன்னையனை சென்னையில் சந்தித்து நகராட்சிக்கு தேவையான வசதிகள் குறித்து கோரிக்கை மனு வழங்கி இருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் ராஜன், யுவராஜ், மதிவாணன், சுப்பிரமணியம், நடராஜ் உள்பட மேலும் ஒரு சில கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர், அதிகாரிகள் நியமனம், சாலை, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாக்கடை கால்வாய் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்காக இயக்குனர் ராஜனிடம் கோரிக்கைகளாக வைத்தனர்.

    மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளிலும் இந்த பிரசசினை இருப்பதாகவும், அடுத்த சனிக்கிழமைக்குள் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    • ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது.

     ஊட்டி

    ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரசபை தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் காந்திராஜன், துணைத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில், இருந்த கால்வாயை மறைத்து ஏற்கனவே ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இரு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தில் கால்வாயை மறைத்து கட்டிடங்கள் கட்டுவதற்கு எவ்வாறு நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது?

    மேலும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கிய போதிலும், பணி செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளதால், நகரில் எந்த ஒரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். நகராட்சியே அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்:

    ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் 1,500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஊட்டி நகராட்சியிலேயே அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேல் கட்டிடங்கள் கட்ட மற்ற துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஆனால், ஊட்டி நகரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    அதன்பின் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. எனவே 1,500 சதுரடிக்குள் கட்டிடங்கள் கட்ட நகராட்சியே அனுமதி அளிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கவுன்சிலா்களும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும், மாஸ்டா் பிளான் சட்டத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட பட்பயா் நிலத்தை டைடல் பாா்க் அமைக்க மாவட்ட நிா்வாகத்துக்கு ஒப்படைக்க கூடாது. இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சி மாா்க்கெட் கட்டிடங்களை இடித்து கட்டும்போது, தற்போது அங்கு கடை வைத்துள்ளவா்களுக்கே மீண்டும் கடைகள் வழங்க வேண்டும்.

    ஆணையா் காந்திராஜன்: ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டின் ஒரு பகுதி ரூ.29 கோடியில் இடித்து கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் கடைகளும், மேல் தளத்தில் பாா்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    தம்பி இஸ்மாயில் (திமுக): எனது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும். மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், எனது வாா்டில் நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    அபுதாகீா் (மநேம): ஊட்டி நகராட்சிப் பணியாளா்களுக்கு காந்தல் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இவை மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் பணியாளா்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த குடியிருப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    ரஜினி (காங்கிரஸ்): எனது வாா்டுக்கு உள்பட்ட அலங்காா் பகுதியில் மழை நீா் செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
    • தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து புதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ளனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் ஆணையரிடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை விவரம் வருமாறு:-

    தாராபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் கடைகளை இடித்துபுதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளைகாலி செய்யச் சொல்லி உள்ளனர். மாற்று ஏற்பாடாக பாதுகாக்கப்பட்ட இடம் காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கவேண்டும். மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருபவருக்கே முன்னுரிமை அளித்து பழைய வாடகைக்கு கடையை ஒதுக்கவேண்டும் .இவ்வாறு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.எனினும்கடைகளை காலிசெய்யும்படிவத்தில்கையெழுத்திட மறுத்து காய்கறி வியாபாரிகள் சென்றனர்.

    ×