search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ரகுபதி"

    • தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர்.
    • போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும்.

    தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர்.

    இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுத்த பின்னர் அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே அவர் கூறியுள்ளார்.

    போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • இந்த அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், தனது இறுதி அறிக்கையை மே மாதம் 18-ம் தேதி சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

    அலுவலர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களுடன் கூடிய ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
    • இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் சிறைச்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. இங்கு தான் சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பாளை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சிறையில் உள்ள கைதிகள் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாளை மத்திய சிறையை பொறுத்தவரை தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,378 பேர் உள்ளனர். ஆனால் இங்கு 1,332 கைதிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது. எனவே கூடுதலாகத்தான் கைதிகள் இருக்கிறார்கள்.

    எனினும் அவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா? போதிய மருத்துவ வசதிகள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

    இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் சிறைச்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. இங்கு தான் சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

    புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியாக ஒரு அமர்வு நீதிமன்றம் வேண்டும். அதன்படி தென்காசி மாவட்டத்துக்கும் தனியாக ஒரு மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளோம்.

    உயர்நீதிமன்றத்தில் கருத்துரு பெற்று விரைவில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த 3 வருடங்களாக சிவில் நீதிபதிகள் தேர்வு நடைபெறாமல் உள்ளது. நீதிபதிகள் காலி பணியிடம் என்பதை பொறுத்தவரை, உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட ஒரு நியமன குழு உள்ளது. அவர்கள் தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு செய்வார்கள். அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும்.

    மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல் என்று புகார்கள் கூறப்படுகிறது. ஆனால் அங்கு அந்த அளவுக்கு வருவாய் இல்லை. இருந்த போதும் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பழைய சிறைச் சாலைகளை புதுப்பிக்க இரட்டிப்பு செலவாகும் என்பதால் புதிதாகவே கட்டலாம் எனவும், அதற்கான இடத்தை வருவாய் துறையினர் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக அதற்கான பணிகளை தொடங்கலாம் எனவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    பாளை மத்திய சிறையை பொறுத்தவரை புதுப்பிக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி செலவாகும். அதற்கு பதிலாக புதிதாக சிறைச்சாலை கட்ட வருவாய் துறையினர் இடம் தேர்வு செய்து கொடுத்தால் புதிதாக சிறைச்சாலை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    கைதிகளின் திறமைக்கேற்ப வேலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறைச்சாலைகளில் 2-ம் நிலை காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாளை சிறைச்சாலையில் கலைஞர் சிறை வைக்கப்பட்ட அறை உள்ளது. இது தி.மு.க.வினருக்கு கோவில் போன்றது.

    தி.மு.க. நூற்றாண்டு விழாவையொட்டி அவர் இருந்த அறையில் அடையாள சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பாக அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளது.

    ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
    • தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள், இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படவில்லை.

    அதேபோல் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கும், இந்த ரெய்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்து வருகின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன. அதை தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மீதமுள்ள ஐந்து பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

    அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சேர நாடு, பாண்டியநாடு என பெயரிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிகார பலத்தை வைத்து அவர்கள் எத்தனை நாடாக வேண்டுமானாலும் பிரிக்கலாம், ஆனால் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து கூட அவர்களால் பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×