search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"

    • சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள்.
    • புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம். வியாழன் - ஞானம் கூடும்.

    சந்திர பகவானை மாத்ருகாரன் (தாயை நிர்ணயிப்பவர்) என்பார்கள். சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி தினம், தாயாரை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளாக கூறப்படுகிறது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்குரிய வழிபாடுகளை செய்வதைப்போல தாயை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து விரதம் இருந்து வழிபாடுகளை செய்ய வேண்டும். எவன் ஒருவன் பெற்ற தாயை நினைத்து, அவள் பாசத்தை நினைத்து மனதாரப் போற்றி நாளை வழிபாடு செய்கிறானோ, நிச்சயமாக அவன் குலம் எவ்வித குறையுமின்றி தழைக்கும்.

    சித்ரகுப்தரை கும்பிடுங்கள்

    நாம் செய்யும் பாவ, புண்ணியங்களை இம்மி பிசகாமல் கணக்கு எழுதுபவர் சித்ரகுப்தர். இவர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான் அவதரித்தார். இவரது திருமணமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சித்ரகுப்தரை நாளை நாம் மனப்பூர்வமாக வழிபடுவது நல்லது. நாளை யார் அவரை வழிபடுகிறார்களோ, அவர்களது பாவ சுமை ஏறாமல் சித்ரகுப்தர் பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கையாகும்.

    நாளை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள், மறக்காமல் ஆலயத்துக்குள் இருக்கும் சித்ரகுப்தரை வழிபடலாம். அப்போது, `நான் மலை அளவு செய்த பாவத்தை கடுகு அளவுக்கும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலை அளவுக்கும் கணக்கில் எழுதிக் கொள்' என்று கூறி வழிபட வேண்டும்.

    திருமணம் கை கூடும்

    பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பலன்கள்

    ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்

    திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.

    செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.

    புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.

    வியாழன் - ஞானம் கூடும்.

    வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.

    சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.

    நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.

    • துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது.
    • அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    அமாவாசை என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாசையாகும்.

    சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியில் இருந்து பார்ப்போருக்கு தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை.

    இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

    துவிதியை திதி

    துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாட்களில் இரண்டாவது நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    துவிதியை எனும் வடமொழிச் சொல் இரண்டாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் இரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவிதியைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் துவிதியையை சுக்கில பட்ச துவிதியை என்றும், பூரணையை அடுத்த துவிதியையை கிருட்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கின்றனர்.

    • சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும்.
    • தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு.

    அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாகும். அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம்.

    சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்னும், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    • அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
    • மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

    ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆறு கடல் போன்ற புனித நீர் நிலையங்களில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    கடல் கூடும் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.

    கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்சம் தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பா காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.

    பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவார்கள் .

    திருமண தடை நீங்கும்

    பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

    முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால் பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில்தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே. காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

    • ஆடி அமாவாசை முன்னிட்டு நடந்தது
    • வருகிற 26-ந் தேதி கருட ஜெயந்தி விழா நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதரசுவாமிகளின் அருளானைப்படி உலக நன்மைக்காகவும்,சகல கார்யங்களில் வெற்றி பெறவும் வேண்டி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி மஹா யாகத்துடன் மஹா காளி யாகம், சூலினி துர்கா யாகம், வாராகி யாகம், திருஷ்டி துர்கா யாகம் என 5 யாகங்கள் நடைபெற்றது.

    மிளகாய் வற்றல், கருங்காலி, புல்லுருவி, நவ சமித்துக்கள், கொப்பரைத் தேங்காய், நெல் பொரி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சௌபாக்ய திரவியங்கள், செந்நாயுருவி, கிராம்பு, வால் மிளகு, லவங்கம், போன்ற பல்வேறு திரவியங்களை கொண்டு நடத்தப்பட்ட யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கருட ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

    கருட ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு மூல மந்திர ஹோமமும், நவ கலச திருமஞ்சன அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.
    • பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி, குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 12 மணியளவில் தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • யாகத்திற்கு 108 கிலோ மிளகாய் பயன்படுத்தப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ பெரிய கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து கோவில் முன்பாக பெரிய கருப்புசாமி வாகனமான குதிரை பசு கன்றுகளுக்கு பூஜை செய்தனர் . உற்சவமூர்த்தி, கருப்பசாமி வீச்சருவா உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பூஜைகள் செய்து தீ மூட்டி 108 கிலோ மிளகாயை தீயில் போட்டு கோவில் பூசாரி சாமி ஆடி 11 படிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் படியேறி வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற தேங்காய் உடைத்து ஏராளமான பக்தர்கள் கருப்பசாமிக்கு பொங்கலிட்டு பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    மேலும் பம்பை வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல்களை நிறைவேற்றிய மூலவருக்கு பக்தர்கள் ஆடு, கோழி, மது, சுருட்டு, மற்றும் மிளகாய் உள்ளிட்டவைகளை நேர்த்திகடன்களாக செலுத்தி வழிபட்டனர்.

    • புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.
    • ஆகஸ்டு 16-ந்தேதி அப்பர் கயிலை காட்சி நடைபெறும்.

    அமாவாசை நாட்களில் ஆடி மாதம் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இந்த நாட்களில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆறு, புஷ்யமண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஐயாறப்பர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.

    இந்த ஆண்டு திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அடுத்தமாதம் 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசை அன்று ஐயாறப்பர் கோவிலில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்பெண்ணை ஆற்றிலும் இன்று காலை தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தருமபுரி,

    ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. அந்த நாளில் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும்.

    வருடந்தோறும், ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாளில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பொது–மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

    இந்த வருடம் ஆடி பிறப்பான முதல் நாளான இன்று ஆடி அமாவாசையும் சேர்ந்து வருவதால், பொது–மக்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்ய குவிந்தனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று தருமபுரி, கிருஷ்ண–கிரி மாவட்டங்களில் நீர் நிலைகளில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கெல–வரப்பள்ளி அணையிலும், போச்சம்பள்ளி அருகேயுள்ள இருமத்தூர், ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் ஆகிய பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றிலும் இன்று காலை தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

    ஆடிபிறப்பையொட்டி கிருஷ்ணகிரியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்க–ளுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்தனர். காவிரி ஆற்றில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதேபோன்று பென்னாகரம், நாகமரை, ஏரியூர் ஆகிய பகுதியில் காவிரி ஆற்றில் பொது–மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

    ஆடி பிறப்பை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது குலத்தெய்வத்திற்கு கோழி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிப்பட்டு வருவது வழக்கம். இதையொட்டி இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குலத்தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதேபோன்று நீர்நிலை–களில் உள்ள கோவில்க–ளுக்கும் சென்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அரூர் அருகே தீர்த்தமலை நீப்பத்துறையில் ஆற்றில் பக்தர்கள் நீராடிவிட்டு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    ஒகேனக்கல்லில் குவிந்த புதுமண தம்பதிகள்

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஆடி அமாவாசை மற்றும் ஆடி பிறப்பை முன்னிட்டு இன்று தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர்.

    பொதுமக்களில் சிலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி நீராடிவிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இதேபோன்று ஆடிபிறப்பை யொட்டி புதுமண தம்பதிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து நீராடிவிட்டு அவர்கள் கொண்டு வந்த பூமாலையை ஆற்றில் விட்டு சூரியனை வணங்கினர். மேலும், அங்குள்ள காவிரியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அதிக அளவில் மக்கள் கூட்டம் வரும் என்பதால் ஒகேனக்கல் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    • பவானி ஆற்றில் குளித்து முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசியை பெற்றனர்.
    • அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

     மேட்டுப்பாளையம்,

    ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வருகிற அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆடி மாத அமாவாசை தினத்தில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம்.

    மேலும்,ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    முன்னதாக பவானி ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு படையிலிட்டும், தர்ப்பணம் செய்தும் வழிபட்டு முன்னோர்களின் ஆசியினை பெற்றுச்சென்றனர்.

    கோவை, திருப்பூர் ஈரோடு நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு ச்சென்றனர்.மேலும்,ஆடி அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும், படையலிட்டும் வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பதால் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள நந்தவனம் பகுதியில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து பொதுமக்கள் முன்னோர்களின் ஆசியினை பெற்று சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நந்தவனத்தின் செயலாளர் சிபிஎஸ் பொன்னுச்சாமி செய்திருந்தார்.

    இதேபோல ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஷவரில் நீராடி சென்றனர்
    • 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

    கோவை,

    இன்று அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பிறந்துள்ளது. இந்த வருட ஆடி மாதத்தில் 2 ஆடி அமாவாசை வருகிறது. இன்று மற்றும் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

    ஆடி அமாவாசையான இன்று தினம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள தர்ப்பண மண்டபத்திலும் இன்று காலை முதலே கோவை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அவர்கள் நேராக நொய்யல் படித்துறையில் உள்ள தர்ப்பண மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு தங்கள் முன்னோர்களின் பெயரை சொல்லி திதி கொடுத்தனர். தொடர்ந்து எள் உருண்டை, பச்சரி சாதம் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனம் உருகி வழிபட்டனர்.

    மேலும் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

    திதி கொடுக்க வரும் பக்தர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவில் நிர்வாகம் பேரூர் படித்துறையில் பிரத்யேகமாக ஷவர் அமைத்திருந்தது.

    இன்று திதி கொடுக்க வந்த பக்தர்கள் ஷவரில் குளித்து விட்டு சென்றனர். மேலும் ஆத்து விநாயகரை வணங்கி விட்டு, அங்கு நிற்கும் மாடுகளுக்கு அகத்திக்கீரையும் வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர். பின்னர் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

    வழக்கமாக ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் பேரூர் படித்துறையில் பக்தர்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்த வருடம் 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

    பக்தர்கள் வந்து திதி கொடுப்பதும், போவதுமாக இருந்தனர். இதனால் அங்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

    கோவில் நிர்வாகம் கூட்டம் வந்தால் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தது.

    • இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று
    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புனித தீர்த்தங்களில் நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வருகிறது.

    இப்படிப்பட்ட சமயங்களில் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும். என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

    இதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 2-வது அமாவாசையான வருகிற 16-ம் தேதி பூஜை நடக்கிறது. பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக முக்கடல் சங்கத்தில் உள்ள படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் பணியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×