search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
    • எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இதுபோன்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்துக்கு பின் முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் புதிய அணை கட்டியே தீருவோம் என பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    இடுக்கி எம்.பி. சூரியகோஸ் இப்பிரச்சனையை வலியுறுத்தி மக்களவையில் குரல் எழுப்பினார். கேரளாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் ஒரே கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி சுரேஷ்கோபியும் தற்போது அதில் இணைந்துள்ளார். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தன்னார்வலர் அமைப்பினர், யூடியூபர்கள் ஆகியோரும் முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்ற பீதியை தொடர்ந்து மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் இருந்தே அதிக அளவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பொருளுதவி மட்டுமின்றி நிவாரண பொருட்களும் தமிழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

    இது போல இரு மாநில பிரச்சனையில் மக்களின் நலன் சார்ந்து தமிழக அரசு செயல்பட்டாலும் கேரள அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரத்தை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    எனவே இது போன்ற சம்பவத்தை கண்டித்து வருகிற 22-ந் தேதி குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுக்கு பின் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் அதனை அவமதிக்கும் வகையில் கேரளாவில் தொடர்ந்து விஷம பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    கேரளாவின் இடது சாரி கட்சிகள், காங்கிரஸ், பா.ஜ.க. கத்தோலிக்க இளைஞர் இயக்கம், ஆர்.எஸ்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இதுபோன்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் இப்பிரச்சனையில் எதிர்வினையாற்றாமல் மவுனமாக உள்ளது. எனவே விவசாயிகளை ஒன்றிணைத்து வருகிற 22-ந் தேதி குமுளி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    • உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
    • எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உள்ளூர் தொழில் அமைப்பினருடன் ஜி.எஸ்.டி சம்பந்தமாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தமிழ் நாடு ஒட்டல்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசனிடம், உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது சம்பந்தமாக சமூக ஊடகத்தின் மூலமாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.

    உண்மை நிலை இப்படி இருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக எதிர்க்கட்சிகள் உண்மை சம்பவத்தை மறைத்து தவறான அறிக்கைகள் கொடுப்பதும், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும், தொழில் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

    எனவே ஜி.எஸ்.டி சம்பந்தமாக உள்ள நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அடித்தளமாக அமைந்த இந்த கூட்டத்தை அரசியல் கண்ணோட்டத்திற்காகப் புரிந்தும், புரியாமலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
    • இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்த போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் வெள்ளிப் பதக்கத்துக்கான அவரது மேல் முறையீடும் பலனளிக்காமல் போனது.

    இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியிலும் அரியானாவில் அவரது சொந்த கிராமத்திலும் உற்சாக வரவேற்பானது அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரியானா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதையொட்டி வினேஷ் போகத் அரசியலிலும் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பஞ்சாப் - அரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வினேஷ் போகத் பங்கேற்றுள்ளார். விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகத், உங்களின் மகள் இன்று உங்களோடு நிற்கிறாள் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் ஒரு மல்யுத்த வீராங்கனை, மொத்த நாட்டுக்கு நான் சொந்தம், மாநிலத்தில் வர உள்ள தேர்தலில் நான் செய்ய எதுவும் இல்லை. எனக்கு இப்போது தெரிந்தது எல்லாம், இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடத்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.
    • மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ந் தேதி வி.சி.க சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் மதுவை ஒழிப்பதற்கும் போதை பொருட்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம்.

    இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெளிநாடு செல்லும் முதல்வர் நிர்வாகத்தை கவணிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 15 நாள் பயணம் மேற்கொள்கிறார் இந்த 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே. இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது.

    ஐ.ஏ.எஸ். போன்ற அதிகாரிகளை அவர்களின் சிறந்த ஆளுமைகளை ஆட்சி நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் மதுவை வியாபாரம் செய்வது, எப்படி? லாபத்தை பெருக்குவது எப்படி? கடைகளில் எண்ணிக்கையை பெருக்குவது எப்படி? என்பதற்கு அந்த அதிகாரிகளில் சிந்தனை ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இது வேதனைக்குரியது.

    சினிமாவிலேயே இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்.டி.ஆர்.யை பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள்.

    தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள்.

    அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க.விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள்.அதனால் வெற்றி பெற முடிந்தது.

    அதன் பிறகு வந்த தலைவர்கள் அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள். அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    விஜய் அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம், என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்லப்படுகிறது.

    முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மாநாடு நடத்திருக்கிறார்கள். இந்த மாநாடு பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிகிறது. பாஜக . ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் கடவுள்,மதம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை அரசியல் அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு முயற்சித்தார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அப்படிப்பட்ட அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக் கூடிய வகையிலே இந்து சமய அறநிலைத்துறை செயல்படுகிறது என்றால் அதை நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர்.
    • எனது மக்கள் பணி, கழக செயல்பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவிய வதந்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று மற்றொரு தகவலும் பரவியது. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று சேலம் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று என்னை குறிப்பிட்டு ஒரு செய்தி வெளி வந்துள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த விருந்தும் வைக்கவில்லை.

    எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

    கழக வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற வகையில் நான் செயல்பட்டு வருகிறேன். எனது பெயருக்கு யாரும் களங்கம் கற்பிக்க விட மாட்டேன். எனது மக்கள் பணி, கழக செயல் பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
    • 'ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள்'

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முக்கியத் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாகப் பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.

    இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின. மேலும் சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் தான் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகச் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    மேலும் அவரது எக்ஸ் பதிவில், கட்சித் தலைமை தன்னை அவமதித்து விட்டது.எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?தனது கட்சி தன்னை அவமதித்து விட்டதாகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் புது கட்சி தொடங்கும் முடிவை சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ஜார்கண்ட் திரும்பியுள்ள சம்பாய் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இனி புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. நான் அரசியலிலிருந்து ஒருபோதும் விலகப் போவது இல்லை. என்னுடைய ஆதரவாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடனான எனது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக ஒன்றை [அரசியல் கட்சியை] நான் தொடங்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.

    ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கட்சி தொடங்க நிறைய நேரம் இல்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சம்பாய் சோரன், அது உங்களின் பிரச்சனை இல்லை, ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள், அப்படி இருக்கும்போது புதிதாக [கட்சி] தொடங்குவதில் எனக்கு என்ன பிரச்சனை.

    ஒரே வாரத்துக்குள் ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிய கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நான் ஈடுபடுவேன். இந்த பயணத்தில் பயணத்தில் புதிய நண்பர்கள் கிடைத்தால் [கூட்டணி] அவர்களுடன் இணையவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
    • சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-

    சமூகத்தில் சீர்திருத்தம் வரவேண்டும் என்று பேசிக் கொண்டே சீர்திருத்தத்தை தடுப்பதுதான் சிலரது வேலை. அதற்கு மதத்தையும், சாதியையும் கேடயமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    இஸ்லாமியர்களிடம் 'முத்தலாக்' முறையை மதத்தின் பெயரால் வைத்து கொண்டு பெண்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எந்த சமூகத்திலும் பெண்கள் முன்னேறினால் தான் உண்மையான முன்னேற்றம் வரும்.

    முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் அந்த அடிமை நிலையில் இருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டனர். சொத்து மீதான உரிமை கிடைத்துள்ளது.

    வக்பு வாரிய சட்ட திருத்தத்தையும் இமாம்களுடன் கலந்து ஆலோசித்துதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இத்தனை வருடங்களாக சுற்றி சுற்றி எந்த மாற்றத்தையும் காணாத நிலையில் இப்போதுதான் நம்பிக்கை வந்துள்ளது.

    இதை எதிர்ப்பவர்கள் பிரதமர் மோடி எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை கொண்டவர்கள். மதத்தை தாண்டி சீர்திருத்தத்தை பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

    எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வாக்களிப்பது மதத்தையும், சாதியையும் காப்பதற்கு அல்ல. வேலை வாய்ப்பு வேண்டும். சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வேண்டும், சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

    மதங்களை சொல்லி காட்டி மக்களின் உணர்வுகளை மறைக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடிக்கும் தி.மு.க. தனது மந்திரி சபையில் எத்தனை இஸ்லாமியர்களுக்கு மந்திரி பதவி கொடுத்துள்ளது? அவர்களுடைய சிறுபான்மை நாடகத்தை கேட்டும், பார்த்தும் மக்கள் சலித்து போனார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெட்ரா மகாகாளி கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது முறை 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து வருடம் முழுவதும் மகாகாளேஸ்வர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர் என்பது கவனிக்கத்தக்கது.

     

    இந்த உத்தரவு பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தொடங்கிவைத்துள்ள இந்த புதிய சர்ச்சை மக்கள் அதிகம் வருகை தரும் நகரங்களில் இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற விமர்சனக்குரல்கள் எழுந்துள்ளன.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.
    • மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க. புதிதாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயருடன் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார்.

    தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு உதவிகளை செய்வது, தமிழகத்தின் நலன் சார்ந்த செயல்களுக்காக குரல் கொடுப்பது என விஜய்யின் அரசியல் பயணம் திட்டமிட்ட திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

    தமிழக தேர்தல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் மரணம் அடைந்த பிறகு கூட்டணி அரசியல் தான் கை கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யும் கூட்டணி அரசியலுக்கு தயாராக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு விஜய் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனித்து களம் காண விஜய் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    விஜய்யின் அரசியல் பயணம் தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். மறைந்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரது கொள்கைகளை பின்பற்றி அரசியல் களத்தில் நடைபோட உள்ள விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருவள்ளுவரின் வார்த்தைகளையும் பயன்படுத்தியே அரசியல் மேற்கொண்டு வருகிறார்.

    சமூக நீதிக் கொள்கைகள், இரு மொழிக் கொள்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ள விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.

    கல்வியை தமிழக பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதும் தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இப்படி தமிழ் தமிழர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி சட்ட மன்றத் தேர்தலை அவர் சந்திக்க இருக்கிறார்.

    ஆன்லைன் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 48 லட்சம் பேர் இதுவரை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமான வகையில் பொதுமக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

    சட்டமன்ற தேர்தலுக்குள் 5 மண்டல மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ள விஜய் 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளார். 100 தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலம் முழுவதும் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியில் சேரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை தமிழக வெற்றிக் கழகத்தி்ல் உருவாக்குவதற்கும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் திருச்சி அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் மாநாட்டில் ஏற்ற உள்ளார். இப்படி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு விஜய் அதிரடியாக தயாராகி வருவதால் நிச்சயம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்து இருக்கிறார்கள்.

    தேர்தல் களத்தில் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுதியோடு இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் 2026 -ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக ஆவார் என்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது.
    • மதத்தில் தலையிடுவதை அரசியல்வாதிகள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்

    கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

    கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மத விவகாரங்களில் அரசியல் தலைவர்கள் தலையிடுவது குறித்து பேசிய அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, "நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது என்பது முற்றிலும் சரியானது. ஆனால் அதே சமயம் அரசியல்வாதிகள் கூட மதத்தில் தலையிடக்கூடாது. அரசியல்வாதிகளே, மதத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதத்தில் தலையிடுவதை நீங்கள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்" என்று பேசியுள்ளார்.

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார்.
    • புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரசிடம் ஆளுங்கட்சியான பா.ஜனதா தோற்றதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    அதில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் அரசில் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டா, மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், கட்சி அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறினர். அதோடு ரங்கசாமி அரசிற்கான ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பாஜக மாநிலதலைவர் செல்வ கணபதி எம்.பி.யின் செயல்பாட்டை முன்னாள் தலைவர் சாமிநாதன் விமர்சித்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் போர்குரல் எழுந்துள்ளது. இதனால் புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியிலும், பா.ஜனதா கட்சிக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பாஜக கட்சியின் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் எம்.எல்.ஏ.க்கள் புகார், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதற்காக புதுச்சேரிக்கு நாளை (திங்கட்கிழமை) வரும் நிர்மல் குமார் சுரானா காலை 10.30 மணிக்கு கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்கிறார்.

    பின்னர் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திப்பார் என கூறப்படுகிறது. கூட்டணி மோதல் மற்றும் உட்கட்சி பிரச்சனையில் சமரசம் காணுமாறு பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு பா.ஜனதா தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை நாளைய ஆலோசனை கூட்டத்தில் சமரசம் ஏற்படாத பட்சத்தில் பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் அடுத்த கட்டமாக புதுவைக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.

    • மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
    • டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.

    இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

     

    இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.

    இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    ×