search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை யானை"

    • பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
    • யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றனர்.

    பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினை குடிப்பதற்காக வனவிலங்குகள் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வருவது உண்டு. அதில் குறிப்பாக யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சாலைகளிலும், அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளிலும் ஒற்றை யானையை சுற்றி திரிந்து வருகின்றது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், யானையை பார்த்தவுடன் செல்பி எடுப்பது, செல்போனில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவத்தினால் வன விலங்குகள் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், வாகனத்தை சேதப்படுத்துவதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது.
    • 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி செல்லும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதமாக ஒற்றை யானை பகல் நேரங்களிலேயே உலா வருகிறது. விவசாய பூமியில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடம்பூர் அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை கடுமையாக துரத்தியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்த ஒருவர் திடீரென யானை துரத்தி வருவதை கண்டு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நண்பருடன் ஓடி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. நல்ல வாய்ப்பாக 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த அந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள்ளே சென்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள, வாகன ஓட்டிகள் அஞ்சினார்கள். 

    • மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து தக்காளியை தின்று ருசித்து உள்ளது.
    • யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறி ப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீபகாலமாக யானைகள் உணவு, தண்ணீ ரை தேடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேத ப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சத்திய மங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஒங்கல் வாடி, அரேபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை பீதி அடைய செய்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்து கட்டிடங்களை சேதப்படுத்தி யும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு வித அச்சத்து டனேயே இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ஆசனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தணிகாசலம் என்பவரின் மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து உள்ளே வைத்திருந்த விலை மதிப்பில்லாத தக்காளியை தின்று ருசித்து உள்ளது.

    கடையில் பல பொருட்கள் இருந்தும் யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வராதவாறு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது.
    • கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக ஒற்றை யானை இரவு நேரங்களில் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதே போல் இன்று அதிகாலை அந்த ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையை சைரன் ஒலி எழுப்பி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஒற்றை யானையை இங்கிருந்து வேறு இடத்துக்கு வனத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

    • ஒரு ஒற்றை யானை சாலைஓரம் சுற்றி கொண்டு இருந்தது.
    • யானையிடம் செல்பி எடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

    புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் அடிக்கடி இந்த சாலையை யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், வனவிலங்குகளை போட்டோ, செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் காரப்பள்ளம் என்ற பகுதியில் நேற்று மாலை ஒரு ஒற்றை யானை சாலைஓரம் சுற்றி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனத்தை இயக்கி அந்த பகுதியை கடந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர் திடீரென ஒற்றையானையை நோக்கி சென்றார். பின்னர் யானை உடன் சேர்த்து செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த யானை அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதைப்பார்த்த அந்த நபர் வேகமாக ஓடிவந்து காரில் ஏறி தப்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யானையிடம் செல்பி எடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    • யானை சுற்றி திரிந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது.

    இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் யானை கூட்டங்கள் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகள், சாலை பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகல் நேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தட்டப்பள்ளம் மலைப்பாதையில் சுற்றி திரிந்தது.

    காட்டு யானை 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே அங்கும் இங்குமாக உலா வந்து வாகனங்கள் செல்ல வழி விடாமல் நீண்ட நேரம் சாலையிலேயே நின்றது. இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒற்றை காட்டு யானை நீண்ட நேரம் சுற்றி திரிந்த தால் வாகன ஓட்டிகள் என்ன செய்வ தென்று தெரியாமல் வாகனத்தி லேயே 2 மணி நேரத்திற்கு மேலாக முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தொடர்ந்து தட்டப்பள்ளம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இன்று அதிகாலையில் அந்த யானை காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது.
    • ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சானமாவு வனபகுதியில் இரண்டு மாதங்களாக சுற்றி திரிந்த ஒற்றை ஆண் யானை தற்போது இன்று அதிகாலையில் காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது.

    இந்த யானை ஊருக்குள் நுழையாமல் வனப்பகுதி ஒட்டி விளை நிலங்களில் பயிர்களை சாப்பிட்டு விட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு தஞ்சம் அடைகிறது.

    இந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் புளியரசி, செட்டி பள்ளி, சக்காரலு, கடத் துர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தேவையின்றி வன பகுதிகளுக்கு விறகு வெட்ட, ஆடு, மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம். யானையை நேரில் பார்த்தால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய விட வேண்டும். யானையை விரட்டு வகையில் நெருப்புகளையும், வெடி சத்தம் முழக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    • காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி இறங்கி வரும் ஒற்றை யானை முன்பு ஒரு நபர் அலட்சியமாக நடந்து செல்கிறார்.
    • யானையை பார்த்ததும் அச்சப்படாத நபர் யானையை நோக்கி கைக்கூப்பி கும்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது.

    யானை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், சில வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், வனத்துறை அதிகாரிகளான சாகேத் படோலா மற்றும் ரமேஷ் பாண்டே ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அதில், காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி இறங்கி வரும் ஒற்றை யானை முன்பு ஒரு நபர் அலட்சியமாக நடந்து செல்கிறார். யானையை பார்த்ததும் அச்சப்படாத அந்த நபர் யானையை நோக்கி கைக்கூப்பி கும்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் சம்பந்தப்பட்ட நபரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற எரிச்சலூட்டும் நபர்களை சகித்து கொள்வது எளிதானது அல்ல. இதனால் தான் அவர்கள் மென்மையான ராட்சதர்களாக மதிக்கப்படுகிறார்கள் என்று படோலா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

    • வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது.
    • இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, மான், புலி, காட்டு பன்றிகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும், கார், பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்படி வரும் யானைகள் ரோட்டில் உலா வருவதும்,

    அந்த வழியாக லாரிகளில் கொண்டு செல்லும் கரும்புகளை ருசித்து செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்நிலையில் இரவு சத்தியமங்கத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது. இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகும். இந்த ரோட்டில் ஒற்றை யானை வந்ததால் இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் உடனடியாக விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் வனக்குழு சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்தும் மற்றும் அவர்கள் வந்த வாகனங்கள் மூலம் அதிக ஒலி எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • ஒற்றை யானை ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது.
    • வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதையில் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இன்று காலை 9 மணி அளவில் வரட்டுபள்ளம் அணை அருகே ஒற்றை யானை ஒன்று சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்தது.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதனால் வனப்பகுதிகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஒற்றை யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டக்காடு பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை உருவாக்கி வந்தது.

    எனவே இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது.
    • யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, சிறுத்தை, யானைகள், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. மேலும் வனப்பகுதி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளுக்குள் குட்டைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது. அந்த யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மற்ற வாகன ஓட்டிகளும் யானை ரோட்டில் நிற்பதை கண்டு மிகுந்த அச்சத்தோடு செல்ல முடியாமல் அங்கேயே நின்றனர். இதனால் வாகனங்கள் ரோட்டோரம் அணி வகுத்து நின்றன.

    நீண்ட நேரம் அங்கேயே நின்ற யானை அதன் பிறகு அங்கு இருந்து வனப்பகுதிகளுக்குள் சென்றது. அதன் பின்பு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.
    • ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதி, சாவரப்பத்தம் பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிந்தன. அதனை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கண்காணித்து, பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து. அங்கிருந்த பட்டிக்குள் புகுந்து மாடுகளை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் 3 மாடுகளுக்கு கால் முறிந்து பலத்த காயமடைந்தன.

    இது குறித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.

    அப்போது, பட்டிக்குள் இருந்த காளைகள், பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு ஓட்டம் பிடித்தன. இதில், ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.

    இதில், அவருக்கு வலது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர், தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். இது குறித்து அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

    ×