search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஏழு தலங்களில் ஒன்றாகும்.
    • சுயம்புவாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஏழு தலங்களில் ஒன்றாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்று சிறப்புகளையும் கொண்ட இக் கோவிலில் அம்மையும், அப்பனும் கலந்த திருமேனியாக சுயம்புவாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.

    சிவன் வலது புறத்திலும், பார்வதி தேவி இடது புறத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக் கோவில் தோன்றியதாக அறியப்படுகிறது. ஆனாலும் யாரால் எந்த காலக்கட்டத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

    இந்த கோவில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி அருகே செங்கோட்டு வேலர், ஆதிகேசவப்பெருமாள் சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் வெண் பாசனத்தால் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் தான் அர்த்தநாரீஸ்வரர் அபிஷேகத்துக்கு பால், இளநீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அர்த்தநாரீஸ்வரரை திருஞான சம்பந்தரும், செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதரும் இத்தலத்தில் பாடியுள்ளனர். சிலப்பதிகாரம் முதலிய பண்டைய தமிழ் நூல்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களில் திருச்செங்கோடு அர்த்தாரீஸ்வரர் கோவில் போற்றப்பட்டுள்ளது.

    புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு திருமண மாகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், வழக்கு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் வந்து அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவரை வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பதால் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாபநாச தீர்த்தம், தின்ம தீர்த்தம், எந்திர தீர்த்தம், வாயு தீர்த்தம் மற்றும் சப்த கன்னிமார் தீர்த்தம் முதலான பலத்தீர்த்த சிறப்புகளை பெற்று இக்கோவில் விளங்கி வருகிறது.

    முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே எழுந்த போரில் பெயர்த்து கொண்டு விண்ணில் பறந்து வந்து விழுந்து மேருவின் சிகரங்களுள் ஒன்று மூன்று பாகங்களாகி அவைகளில் ஒரு பாகம் ஆதிசேஷனின் சிரத்துடன் விழுந்த திருச்செங்கோடாக அமைந்தது என்பது புராண வரலாறு.

    இதன் காரணமாவே இக் கோவிலுக்கு நாகமலை, சேடமலை, மேருமலை, வாயுமலை, முதலான சிறப்பு பெயர்களும் ஏற்பட்டன. இதோடு இல்லாமல் பார்வதி தேவி இடப்பாகம் பெற்ற வரலாறு, பிருங்கி முனிவர் வழிபாடு பற்றிய வரலாறு போன்ற புராண வரலாற்று சிறப்புகளையும் இக்கோவில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலம்.
    • அனந்த சயன மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டியில் உள்ளது, கண்ணிறைந்த பெருமாள் திருக்கோவில். நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    திருமயம் குடை வரைக் கோவிலைப் போலவே சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின் மீது எழுப்பப்பட்டுள்ள குகைக் கோவில்தான் மலையடிப்பட்டி கோவில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'திருவாலத்தூர் மலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இங்கு அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு வீற்றிருக்கும் ஆலயம், திருப்பதி ஆலயத்திற்கு நிகராக போற்றப்படுகிறது.

    இங்குள்ள சிவன் கோவில், திருமால் கோவிலைவிட காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது. மலையடிப்பட்டி குகைக் கோவில் களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறு சில பழங்கால குகைக் கோவில்களும் காணப்படுகின்றன. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை அனைத்தும் உள்ளன.

    மலையடிப்பட்டி கோவிலில், நந்திவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் 16-வது நூற்றாண்டில், குறிப்பாக கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோவில் எழுப்பட்டதாகவும், அந்த இறைவனுக்கு 'வாகீஸ்வரர்' எனப் பெயரிட்டதாகவும் செய்தி காணப்படுகிறது.

    மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகி இருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

    எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின் மீது அமர்ந்து போரிட்டு வீழ்த்தும் காட்சியும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பணியை சார்ந்தது.

    சிவன் குகையின் மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை காணப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில், பள்ளிகொண்ட பெருமாள் அருள்கிறார். சயன கோலத்தில் இருக்கும் இறைவன் 'பள்ளிகொண்ட பெருமாள்' என்றும், 'கண்ணிறைந்த பெருமாள்' என்றும், தாயார் 'கமலவல்லி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

    விஷ்ணு குகைக் கோவிலானது கருவறையையும், அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோவிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

    மண்டபத்தின் சுவற்றில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்ற, இருந்த, கிடந்த (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) கோலங்களைக் கொண்ட மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

    சயன பெருமாளை சுற்றிலும் 5 தலை கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், தேவர்கள் உள்ளனர். துவாரபாலகர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள். தாயாரின் சன்னிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.

    மேலும் இந்தக் குகைக் கோவிலில், ஆந்திரா மாநிலம் லேபாட்சியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும். முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கையின் ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு, ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாசல்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம், ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்கும் என்கின்றனர்.

    கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் இத்தல பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்தக் குடைவரைக் கோவிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

    கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றை சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன.

    கண்ணிறைந்த பெருமாள் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை.

    கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு, அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.

    பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும், வேண்டுதல் நிறை வேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம் ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் வழிபட தீபாவளி, கார்த்திகை, ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

    காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடியில் இருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16 கிமீ தூரம் பயணம் செய்தும் மலையடிப்பட்டி குகைக் கோவிலை அடையலாம்.

    • ‘கோவிந்தா..’ கோஷம் திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது.
    • வேங்கடேச ஸ்தோத்தித்தை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி.

    திருப்பதிக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் காதுகளிலும் வேங்கடேச ஸ்தோத்திரம் என்ற பாடல் கேட்பதை தவிர்க்க இயலாது. பிரசித்தி பெற்ற இதனை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி ஆவார்.

    இந்த ஸ்தோத்திரத்தில் 'விநா வேங்கடேஸம் ந நாதோ ந நாத' என்ற வரி வரும். 'உன்னைத் தவிர வேறு தெய்வமில்லை.. உன்னையே சரணடைகிறேன்' என்பது இதன் பொருள் ஆகும்.

    அப்படி ஸ்துதி செய்த மார்க்கண்டேய மகரிஷிக்கு திருப்பதி சீனிவாசப் பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்தார். நாமும் அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி வணங்கினால், திருப்பதி ஏழுமலையான் அருள் நமக்கும் கிடைக்கும்.

    இதனை திருமலைவாசனே வேறு விதமாக சொல்லியிருக்கிறார். அதாவது "என்னை 'கோவிந்தா..' என்று ஒரு முறை அழைத்தால், உனக்கு நான் கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை 'கோவிந்தா..' என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி கொடுப்பேன்.

    மூன்றாவதாக 'கோவிந்தா..' என்று அழைத்தால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன்" என்று சொல்லியிருப்பதாக திருப்பதி தல புராணம் தெரிவிக்கிறது. அதனால்தான் 'கோவிந்தா..' என்ற கோஷம், திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது.

    குபேரனுக்கு மட்டும் கடன்பட்டவராக இல்லாமல், தனது நாமத்தை உச்சரிப்பவர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கடன்பட்டவனாக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    • பத்மாவதி தாயாரை தரிசித்து வணங்க வேண்டும்.

    திருமாலை வழிபடும் வைணவ தலங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். நம் நாட்டில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று. இங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

    'திருப்பதிக்கு இணையான திருத்தலம் வேறொன்றும் இல்லை..' என்பது சொல் வழக்காக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திருப்பதியில் அருளும் ஏழுமலையானை தரிசிக்க சில விதிமுறைகள் உள்ளன.

    பொதுவாக திருமலை செல்பவர்கள், அங்கு சென்றவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    * முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.

    * அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து வணங்க வேண்டும்.

    * பின்னர் திருமலையின் மீது ஏறியதும் 'வராக தீர்த்த கரை'யில் கோவில் கொண்டிருக்கும் 'வராக மூர்த்தியை' தரிசித்து வணங்க வேண்டும்.

    * அதற்கு பிறகுதான் 'மலையப்பன்' என்று சொல்லப்படும், ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை தரிசித்து வணங்க வேண்டும்.

    இந்த வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சாரியர்களும் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.

    • திருடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 11 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை இரவு 7.50 மணி வரை. பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: அனுஷம் காலை 10.36 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பழனி ஸ்ரீமுருகப் பெருமான் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு, திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் சப்தாவர்ணம். மதுரை ஸ்ரீகூடலழகர் உபய நாச்சியார்களுடன் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. திருடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-லாபம்

    கடகம்-அமைதி

    சிம்மம்-செலவு

    கன்னி-பாராட்டு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-சாதனை

    தனுசு- ஆசை

    மகரம்-சாந்தம்

    கும்பம்-உவகை

    மீனம்-இனிமை

    • முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.
    • ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    'சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! 'சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும்.

    அதாவது சஷ்டி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு கருப்பை நிறையும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நியதி! இப்படி குழந்தை பாக்கியத்தையும், சொந்த வீடு அமையும் யோகத்தையும் கொடுக்கும் முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

    அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும்.

    கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.

    இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

    சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார்.

    குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும்.

    சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும்.

    முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

    சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும்.

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

    கலியுகத்தில் காக்கும் கடவுளாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இந்த முருகனுக்கு பழனி என்றால் விருப்பம் தான்! அறுபடை வீடுகளில் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலை இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் ஒரு அதிசயம் தான். எனவே வாரந்தோறும் முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வாருங்கள், அனைத்தையும் அடையுங்கள்.

    • கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.
    • ஆடி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும்.

    ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை அன்று காலை 6.30 மணிக்கு 2 மாடுகள் 181 படிகட்டுகள் ஏறி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும்.

    முருகப்பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும் கூட அவரை வளர்த்தெடுத்தது எல்லாம் கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.

    கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப்பெரிய புண்ணியத்தை தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும்.

    பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.

    • பரமேஸ்வரரின் அம்சமான துர்வாச முனிவர் சிறந்த தவசீலர்.
    • வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன்.

    வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்ததால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன.

    பரமேஸ்வரரின் அம்சமான துர்வாச முனிவர் சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன்கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார். அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும்.

    தம் தவவலிமையால் பூஜைப் பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார்.

    அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம்குமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது.

    முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதன்படி அங்கு சென்று குழந்தை வடிவில் முருகப்பெருமான் இருக்கக்கண்டு பேரானந்தம் அடைந்து மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் நிறுத்தி தவம் மேற்கொண்டார்.

    நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். நான் அமைத்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார்.

    அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது.

    21.07.1954 அன்று கோபி, புதுப்பாளையத்தை சேர்ந்த நிலக்கிழார் குப்புசாமி கவுண்டர் குமரனை வழிபட அங்கு வந்தார். முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் அவர்.

    அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில் இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே? இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீகமாக உணர்ந்து ஒரு கால பூஜையுடன் இறைப்பணி மீண்டும் தொடங்கியது.

    இன்று ஏழு கால பூஜையுடன், மிக பிரமாண்டமான கோவிலில் குகப்பெருமானுக்கு உகந்த திருவிழாக்களுடன், மற்ற தெய்வங்களுக்கான அனைத்து சிறப்பு தினங்களும் வெகு சிறப்பாக பச்சைமலை ஸ்ரீ பாலமுருகனின் திருவருளோடு நடைபெற்று வருகிறது.

    பச்சைமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பாதவிநாயகர் ஆலயத்தில்ஆதி காலம் முதல் அனைத்து விழாக்கள் மற்றும் உற்சவங்களின் முதல் பூஜை பாதவிநாயகருக்கு தான். அரசுவேம்பு மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாதவிநாயகருக்கு பிரம்ம அதிகாலை முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி ஒரு குடம் நீர் ஊற்றி 108 முறை வலம் வந்து வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும், அனைத்து வினைகளும் தீரும்.

    முதல் திருப்பணி ஆரம்பித்த வருடத்தில் குப்புசாமி கவுண்டர் சிறப்பாக செயல்பட நிதியுதவி மற்றும் இதர வசதிகள் சரிவர கிடைக்கவில்லை. அன்றைய காஞ்சி மகா பெரியவரிடம் ஆசி பெற காஞ்சிபுரம் சென்றார்.

    தன் நிலைமையை கண்டு வியந்த மகா பெரியவர் தன்னிடம் வருபவர்கள் சொந்த பிரச்சினைகளுக்காக ஆசி வேண்டி வருவர், ஆனால் நீங்கள் முருகன் ஆலயம் அமைக்க எண்ணி ஆசி வேண்டி வந்துள்ளீர்கள். அந்த குமரன் அருளால் நிச்சயம் அருமையான கோவில் அமையும் என ஆசி வழங்கினார்.

    ஆனை முகத்தோனுக்கு ஒரு யாகம் நடத்தி மிகப்பெரிய யாகம் ஒன்றை குப்புசாமி கவுண்டர் நடத்தினார். அன்று ஆரம்பித்த திருப்பணி இன்று வரை பல மடங்கு வளர்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அன்று முதல் அனைத்து முக்கிய விசேஷங்களும் முழு முதற் கடவுளின் யாகத்துடன் தொடங்குகிறது. அச்சமயம் பக்தர்கள் விடாது தண்ணீர் ஊற்றி வழிபடுவர். இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மலை ஏறும் முன் ஸ்ரீ பாத விநாயகரையும் வணங்கி மலை ஏறத்தொடங்குவர்.

    ஒருமுறை இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர் மீண்டும் மீண்டும் இந்த அழகு முருகனால் இங்கு வர தூண்டப்படுகின்றனர். 

    • ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார்.
    • லட்சுமி நரசிம்மர் புன்னகையுடன் விளையாடினார்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார். எந்த காரியமாக இருந்தாலும் நரசிம்மரிடம் சம்மதம் (பூ போட்டு பார்த்தல்) கேட்டுவிட்டுத்தான் செய்வார். இவரிடம் லட்சுமி நரசிம்மர் கொஞ்சம் விளையாடி பார்த்தார்.

    அவரது பையனுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு பக்தர் இவரிடம் அறிமுகம் ஆனார். அவர் கல்லூரி அட்மிஷன் விசயத்தில் விவரம் தெரிந்தவர். ஆனாலும் பணத்தாசை. எனவே இந்த அட்மிஷனில் முதலாம் வருடம் இருந்து பெரிய தொகை பெற்றுக்கொண்டு அட்மிஷன் வாங்கித் தருவதாக வாக்களித்தார்.

    வழக்கப்படி பையனின் தந்தை லட்சுமி நரசிம்மரிடம் பூப்போட்டு பார்த்தார். மல்லிகை பூ வந்தால் சரி, அரளிப்பூ வந்தால் வேண்டாம் என்ற நியதியில். லட்சுமி நரசிம்மர் இங்கு தான் புன்னகையுடன் விளையாடினார். சரி என்று மல்லிகை பூவே வந்தது.

    தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பணத்தை கொடுத்துவிட்டு அட்மிஷனுக்காக காத்துக்கொண்டு இருந்தார். காலம் கடந்து ஏமாந்தது தெரியவந்தது. பெருமாளே விளையாடி விட்டானே என்று நொந்து கொண்டார். இருப்பினும் கோவிலுக்கு வருவதை நிறுத்தவில்லை.

    சுமார் ஒரு வாரம் கழித்து பணம் வாங்கிய பெரிய மனிதர் அடித்து கட்டிக்கொண்டு பெருமாள் காலடியில் விழுந்தார். அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அதில் ஒரு சிம்மம் அவரை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலை நோக்கி துரத்திக்கொண்டு வந்ததாம். மனிதர் அப்படியே அரண்டு போய் பணத்தை கொண்டுவந்து பணம் தந்தவரிடம் கொடுத்து சென்று விட்டார்.

    ஒரு கேள்வி அனைவரது மனதிலும் தோன்றும். பூ கட்டி பார்த்தபோது வேண்டாம் என்று பெருமாள் காண்பித்து இருக்கலாமே? ஆனால் அந்த பணம் பெற்று ஏமாற்ற நினைத்தவரை திருத்தி நல்வழிப்படுத்த முடியாதே? அதற்குதான் இந்த விளையாட்டு.

    • பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.
    • மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

    சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக்கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

    நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம் மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.

    நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம். அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும்.

    "யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து

    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்

    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே"

    பொருள்: பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே, தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே, நினைத்த மாத்திரத்தில் உங்களுடைய பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே, லட்சுமி நரசிம்மனே. இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம். 

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.09 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பகலில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர்.

    தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும், நேற்று வைகாசி விசாகம் என்பதாலும் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

    கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது.

    பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்றாலும் மாலைக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (வியாழக்கிழமை) இரவு 7.44 மணி அளவில் நிறைவடைகின்றது. அதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    • காஞ்சிபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-10 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி இரவு 7.48 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: விசாகம் காலை 9.43 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம். நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி வெள்ளி குதிரை வாகனத்தில் சூர்ணோற்சவம். உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-ஜெயம்

    மிதுனம்-விருத்தி

    கடகம்-லாபம்

    சிம்மம்-உயர்வு

    கன்னி-முயற்சி

    துலாம்- யோகம்

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- பிரீதி

    மகரம்-நன்மை

    கும்பம்-நட்பு

    மீனம்-வெற்றி

    ×