search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனித்தீவு"

    • அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றினையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • ஆற்றை கடந்து செல்லும் போது பெருத்த இன்னல்கள் ஏற்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலை வாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    கூட்டாறு

    அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மழைக்கால ங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்வதற்கு முடியாமல் மலைவாழ் மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.

    :வெள்ளம்

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றினையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனித்தீவாக மாறியுள்ளது.

    மலைவாழ் மக்கள் பாதிப்பு

    அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமதளபரப்புக்கு சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் ஆற்றை கடந்து செல்லும் போது பெருத்த இன்னல்கள் ஏற்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆற்றைக் கடக்கும் போது திடீரென வெள்ளத்தின் போக்கும் அதிகரித்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.

    எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×