search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரூமூர்த்தி அணை"

    • மே மாதம் 5-ந் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    குளம், குட்டைகள் மற்றும் அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வழங்கப்படும். வி திமுறை அடிப்படையில், வருவாய்த்துறை, வேளாண் துறை, கனிம வளத்துறை வாயிலாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

    உடுமலை தாலுகாவில் விருகல்பட்டி, பழையூர், வாகத்தொழுவு, ஜக்கமநாயக்கன்பாளையம், பொன்னேரி, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், வடுகபாளையம், சுங்காரமுடக்கு, அந்தியூர், கணபதிபாளையம், கரையான் குட்டை, கருப்பராயன் கோவில் குளம், சின்ன வாளவாடி, பெரிய குளம் என 9 குளம், குட்டைகளில் 30 ஆயிரத்து 742 கன மீட்டர் மண் விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் அடிப்படையில் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவு மண் மேடாக உள்ளது. இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும்.இதனால் கூடுதலாக ஒன்றரை டி.எம்.சி., நீர் தேக்க முடிவதோடு, பி.ஏ.பி., திட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.கடந்த 2017ம் ஆண்டு, சர்வே எண் 252, 253ல், 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.

    அப்போது 36 ஆயிரம் கன அடி மண் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் மழை துவங்கியது பாசனம் ஆகிய காரணங்களினால் நிறுத்தப்பட்டது.அந்த ஆண்டே, சர்வே எண் 254ல் 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளித்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.ஆனால் நடப்பாண்டு குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கும் அரசு ஆணையில் திருமூர்த்தி அணை விடுபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள்திருமூர்த்தி அணையிலும் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதனையடுத்து திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரிய விவசாயிகள் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. முதல் கட்டமாக 10 விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கன மீட்டர் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, மண் எடுக்கும் பணி துவங்கியுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையிலுள்ள வண்டல் மண், விவசாய நிலங்களுக்கு அதிக பயன் அளிக்கும் என்பதால், விவசாயிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். ஏறத்தாழ, 40 விவசாயிகள் வரை விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிக கன மீட்டருக்கு அனுமதி உள்ளதால் விருப்பம் உள்ள விவசாயிகள், வி.ஏ.ஓ.,சான்று வேளாண்துறை பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம்.இதன் வாயிலாக அணை நீர் தேக்கும் பரப்பளவு ஆழம் அதிகரித்து கூடுதல் நீர் சேமிக்கப்படுவதோடு விவசாய நிலங்களும் வளமாகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×