search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"

    • திமுக கடந்த முறை போன்று தற்போதும் இரண்டு இடங்கள் வழங்க தயாராக இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் 3 இடங்கள் கேட்டு, அதில் உறுதியாக உள்ளது.

    மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. இந்த குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 3 தொகுதிகள் கேட்கிறது. அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக கடந்த 2019 தேர்தலை போன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மூன்று தொகுதிகள் கேட்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் உள்ளது.

    தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்ய விரும்புகிறார். இதன்காரணமாக திமுக நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தனது முடிவில் உறுதியாக இருந்தால் பேச்சுவார்த்தையில் இழுபறிதான் நீடிக்க வாய்ப்புள்ளது.

    3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் திமுக கூட்டணியில்தான் இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
    • பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூடடம் கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் கலந்து ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் என அறிவித்து, அதனை செய்தும் காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பிரதமர் மோடி பல்லடத்திற்கு வந்துள்ளார். ஆனால் இதுவரை கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பா.ஜ.க காரர்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்-மந்திரி அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில் நடப்பது தான் என்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகும், பா.ஜ.க முதல்-மந்திரி ராஜினாமா செய்தாரா?

    பாராளுமன்றத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் ஒதுக்கப்படும். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதுவரை பிரதமர் மோடி கேள்வி நேரத்திற்கு வந்ததில்லை. மாறாக அவர் மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருக்கிறார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற பிரதமரை நான் இதுவரை பார்த்தில்லை.

    இதுவரை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதில் அளித்து அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னை போல, நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை பிரதமர் மோடி எதிர்கொள்வாரா?

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று தற்போது உள்ள மத்திய அரசை மாற்றினால் கண்டிப்பாக மோடி சிறைக்கு செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி.
    • எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது.

    சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடஒதுக்கீடு பிரச்சனையில் சுமுகமான முறையில் தீர்வை காண்போம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவுகள் இருக்கும்.

    அ.தி.மு.க. தங்களின் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து முதலில் ஒரு கூட்டணியை உருவாக்கட்டும். தங்களின் நட்பு கட்சிகளான பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

    அதனை எங்கள் மீது உள்ள கரிசனம் என்று புரிந்து கொண்டாலும், அது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் அணுகு முறையில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகத்தெளிவாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அது வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும் தி.மு.க. கூட்டணியில், இந்தியா கூட்டணியில் பயணிப்போம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்படி அரவணைக்கிறார்களோ! அப்படி ஒவ்வொரு கட்சிகளையும், அவர்களின் தேவையை உணர்ந்து அரவணைக்க வேண்டிய பொறுப்பில் தி.மு.க. இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.

    ஒரு கூட்டணியின் அங்கமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அந்த கூட்டணியின் நலன்களை பற்றி கவலைப்படாமல் ஒரு முடிவை எடுக்க முடியாது. எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது. எங்கள் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு கூட்டணி வெற்றியும் முக்கியம். அந்த வயைில் ஒரு பரஸ்பர புரிதலோடுதான் எங்கள் முயற்சிகளும், பேச்சுவார்த்தையும் இருக்கும்.

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    • மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.
    • தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தமிழகம் மற்றும் தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். வீடு இல்லாதவர்களை கண்டறிந்து, 8 லட்சம் பேர் அடையாளப் படுத்தப்பட்டு, அவர்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன.

    இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம், கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    மத்திய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைத்துள்ளது. வரலாறு திருத்தப்படுகிறது. வரலாற்றை மாற்றி அழிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம். ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கின்றனர். பொய் சொல்லி, பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். இங்குள்ள மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.

    எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார். தி.மு.க.வை மோடி மட்டு மல்ல, உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.

    கல்வி கடன், விவசாய கடன், மகளிர் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க. பெரும் ஊழல் செய்துள்ளது.

    90 சதவீத நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளது.கொரோனா தடுப்பூசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பா.ஜ.க.விற்கு நிதி அளித்து உள்ளது.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள்.
    • மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

    அம்மமாபேட்டை:

    திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சுப்புராயன்.

    இவர் கடந்த முறை திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற ஆனந்தனை எதிர்த்து கதிர்அருவாள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

    மீண்டும் தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில் அதே இடத்தில் சுப்புராயன் நிற்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்று அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிக்கு ஓரிரு வரை மட்டுமே வந்துள்ளதாகவும், மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அந்தியூர், பவானி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம், பூதப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் "கண்டா வர சொல்லுங்க" எங்கள் தொகுதி எம்.பி.யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    • தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
    • இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் உடன்பாடுக்கு வரவில்லை. இந்த கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.

    காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கேட்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 இடங்கள் கேட்கின்றன.

    ம.தி.மு.க. 2 இடம் வேண்டும் என்கிறது. இந்த கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2 இடம் வேண்டும் என்கிறது. இதனால் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற 9-ந்தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைக்க கேட்டு கொண்டு உள்ளது.

    அதன் பேரில் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

    • அடுத்த முறை தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை கேட்க வேண்டும் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.
    • தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று களம் இறங்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும் அந்த கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எதுவும் இன்னும் நேரடியாக நடைபெறவில்லை.

    அதே நேரத்தில் ரகசியமாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்து உள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி அந்த தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை தொகுதியை கமல்ஹாசனுக்கு விட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கு பதில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்க அந்த கட்சி முடிவு செய்து உள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தி.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


    இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு தொகுதியையும் கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியுடன் உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பாராளுமன்ற தேர்தல், சட்டன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு டார்ச்லைட் சின்னத்தில் களம் இறங்கி உள்ளது. வருகிற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த முறை தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை கேட்க வேண்டும் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.

    இதற்காகவே கமல்ஹாசன் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று களம் இறங்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. அது எந்த தொகுதி என்பது விரைவில் முடிவாகும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஏற்கனவே தி.மு.க. குழுவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அப்போது 15 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதே தி.மு.க. தரப்பில் 'அதிகம் ஆசைப்படாதீர்கள். மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும். எனவே தொகுதிகள் குறையும்' என்று கூறப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே 9 தொகுதி குறைய கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது அஜோய்குமார் 'காங்கிரசுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்று வெளியே தகவல்கள் பரவுகிறது. தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் எதுவும் சொல்லவில்லை.

    இதற்கிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களை சுமூகமாக பேசி முடிக்கும் வேலையில் டெல்லி தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் பேசியதில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. டெல்லியிலும் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் வழங்க ஆம்ஆத்மி ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு மாநில வாரியாக சுமூகமாக முடிவுகள் எட்டப்பட்டு வருவதால் இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க.வுடனும் சுமூகமாக பேசி உடன்பாடு காண முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    அப்போது காங்கிரசுக்கு மொத்தம் 9 தொகுதிகள் வழங்கவும் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுக்கும்படியும் பேசியதாக கூறப்படுகிறது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    • திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும்.
    • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதம் வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என சிவோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    • தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.

    சென்னை:

    மெரினா அண்ணா சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தி.மு.க. மாநில உரிமைகளை தாரை வார்த்து விட்டு அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. இவர்களுக்கு அண்ணாவின் பெயரை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அண்ணா வழியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்தார்கள்.

    இப்போது அதே வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வேலைகளை அ.தி.மு.க. ஏற்கனவே தொங்கி விட்டது. எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தி.மு.க. தொகுதி பங்கீடு செய்வதற்கு அவசரப்பட காரணம் யாரும் அவர்களை விட்டு பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.


    அதற்காகவே அவர்கள் கூட்டணி கட்சியினரை வாங்க... வாங்க.... சீக்கிரம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று அவரசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். அதனை தடுக்க முடியாது. இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் உள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அ.தி.மு.க. அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைமுகமாக ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    4 விருப்பத் தொகுதிகளை குறிப்பிட்டு 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம்.
    • இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    வேலூர்:

    "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.

    முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம். நாங்களும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.


    மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் ஆய்வு மேற்கொள்வது குறித்து கேட்டதற்க்கு, அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆய்வு பண்ணாலும் சரி படம் வரைந்தாலும் சரி, செய்து போட்டோ எடுத்து போட்டாலும் சரி, டி.பி.ஆர் தயாரிக்கும் ரிப்போர்ட்டுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் வேண்டும், இரண்டாவது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் ஒத்துக் கொள்ளும் வரை அது நடக்காது.

    வெள்ள பாதிப்பில் இன்னும் நிதி வரவில்லை கேட்டிருக்கிறோம்.


    "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தை இப்பதான் தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள குழந்தையை பற்றி கேட்டால் எப்படி தெரியும். எங்களிடம் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

    இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் விலகியது ஒரு திருவிளையாடல் தான். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும் இதெல்லாம் எதிர்பார்த்துதான் கூட்டணி அமைக்கிறோம். எதிர்பார்த்துதான் தேர்தலை சந்திக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல. எங்களுக்கு இது பழசு தான்.

    தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும் தான் தற்போதைக்கு பேசிவிட்டு செல்கின்றார்கள்.

    சோசியல் மீடியாவில் தவறாக பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கும். என்றைக்கோ பேசியதை இன்றைக்கு பரப்பக்கூடியது என்பது ஆண்மை இல்லாத தனம்.

    இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு வருவார்கள் போவார்கள் கூட்டணி இறுதி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×