search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனாவின் ஆடை ஏற்றுமதி"

    • 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
    • இறக்குமதியில் இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா பாதிப்புக்கு பின் உலகளாவிய ஆயத்த ஆடை இறக்குமதியாளர்கள் சீன சார்பு நிலையை குறைத்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தைக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை சீனா இழந்து வருகிறது.

    சீனாவின் சின்ஜியானில் உற்பத்தியாகும் பருத்தியில் தயாரித்த ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய 2021 முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சீன பருத்தி ஆடை ஏற்றுமதி வேகமாக சரிந்து வருகிறது. இதை சாதகமாக்கி வியட்நாம், வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை வசப்படுத்தி வருகின்றன.

    நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.அதாவது 15.7 சதவீதத்துடன் வியட்நாம் முதலிடமும், 14.4 சதவீதத்துடன் வங்கதேசம் இரண்டாமிடமும் பெற்றுள்ளது. 13.1 சதவீத பங்களிப்புடன் சீனா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அதேநேரம் இந்திய பருத்தி ஆடை ஏற்றுமதி முன்னேற்றமடைந்து வருகிறது. கடந்த ஜனவரி -மே வரை ரூ. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஆடை ரகங்கள் அமெரிக்காவில் இறக்குமதியாகியுள்ளன.

    இது குறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-

    அமெரிக்காவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில், இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம். போட்டி நாடுகளுக்கும் நமக்கும் அமெரிக்காவில் பருத்தி ஆயத்த ஆடைகளுக்கு ஒரே வரி விகிதமே உள்ளது.

    எனவே அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் 15 சதவீத பங்களிப்பை பெற நாம் முயற்சிக்க வேண்டும். ஆண்டுதோறும் 3.5 லட்சம் கோடி மதிப்பிலான செயற்கை இழை ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. நம் நாடு 10 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வருகிறது.தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சந்தை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடை உற்பத்தியாளர்கள் நூற்பாலை, சாய ஆலை என அனைத்து துறையினரும் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டால் மிகப்பெரிய வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×