search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத யாத்திரை"

    • சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
    • அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.

    ஜாலாவர்:

    கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது: 


    தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.

    வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1

    1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாஜகவின் இந்துத்துவா கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என மராத்தி எழுத்தாளர் கருத்து.
    • சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல்

    அவுரங்காபாத்:

    காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை பயணம் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அவரது பாத யாத்திரைக்கு 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்த கணேஷ் தேவி, பிரதிபா ஷிண்டே மற்றும் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக் உள்ளிட்ட எழுத்தாளர்கள் குழு, கலம்நூரி பகுதியில், ராகுல்காந்தியை சந்தித்து கலந்துரையாடியது. மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் வழங்கியது.

    இது குறித்து பேசிய மராத்தி எழுத்தாளர் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக், பாஜகவின் இந்துத்துவா கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார். சில அரசியல் கட்சிகள் மென்மையான இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இந்த நாடு அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது என்பதால் பிற சமூகங்களை பற்றியும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று ராகுலிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

    மக்களின் முன்னேற்றம், கண்ணியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சுதந்திரம் இன்றியமையாதது என்றும், கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சுதந்திரமான சூழலில் மட்டுமே மலரும் என்றும், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் தேஷ்முக் கூறியுள்ளார்.

    • கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62-வது நாளில் யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரசின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.

    இந்நிலையில், கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார் என ராகுல்காந்தி கூறினார்.

    மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் 20-ம் தேதி வரை ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
    • 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானா சென்றார்.

    தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெற்றது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    மகாராஷ்டிராவில் இன்று காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

    மகாராஷ்டிராவில் 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வரும் 10-ம் தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ம் தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ம் தேதி செல்கிறது.

    • ஒரு வீடியோவில் கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
    • தங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ம் தேதி தெலுங்கானாவை அடைந்தார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் நேற்றுடன் முடிந்தது.

    இதற்கிடையே, பாத யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சி கே.ஜி.எப்-2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இதுதொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி படப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403, 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957-ம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில், காங்கிரஸ் கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன்.

    நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசியலை பார்க்கிறது. பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் காங்கிரசின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இது கடினமான நேரம் என்பது எனக்கு தெரியும்.

    உள்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது.

    ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    • மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருமலை:

    ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபயணம் சென்றார். அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ராம்புராவில் இருந்து ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திற்கு சென்றார்.

    ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

    அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கையசைத்தனர். இளைஞர்கள் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓபுலாபுரத்தில் மாலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி ஆந்திர எல்லையில் நடைபயணத்தை முடித்தார்.

    மீண்டும் கர்நாடக மாநிலம் சென்றார். பெல்லாரியில் உள்ள ஹலகுண்டி மடம் அருகே இரவு தங்கினார்.

    மீண்டும் வருகிற 18-ந் தேதி காலை ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து 22-ந் தேதி வரை ஆந்திராவில் 100 கிலோ மீட்டர் பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.

    • வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.
    • எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் ராய்ச்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) கர்நாடகாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.

    இதையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் ராய்ச்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக நேற்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை, துமகூரு வழியாக மத்திய கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சென்றடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

    • மாண்டியாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார்.
    • ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சாவர்க்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய அவர் மொத்தம் 150 நாட்களில் 3,750 கி.மீட்டர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதுவரை 350 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி கடந்துள்ளார். கேரள மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதாலும், பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதாலும் ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை முக்கியத்துவம் பெறுகிறது.

    மாண்டியாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார். சோனியா காந்தி, நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டே விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது, தாயார் சோனியா காந்தியின் கையை பிடித்து நிறுத்திய ராகுல்... இவ்வளவு தூரம் நடந்து வந்ததே போதும் அம்மா... காரில் வாருங்கள் என்று வற்புறுத்தினார். சோனியா காந்தி தொடர்ந்து நடக்கவே ஆயத்தமாக இருந்தது போல தெரிந்தது. ஆனால், ராகுல் காந்தி விடாமல் காரில் வருமாறு அறிவுறுத்தினார். சோனியா காந்தியின் உடல்நலம் காரணமாக ராகுல் காந்தி அவரை நீண்ட தூரம் நடக்க விடாமல் காரில் வர அறிவுறுத்தினார். இதையடுத்து சோனியா காந்தி காரில் ஏறி சென்றார். அம்மாவின் மீதான ராகுல் காந்தியின் பாசத்தினை நேரில் பார்த்த அங்கிருந்த கட்சியினர் நெகிழ்ந்து போனார்கள்.

    இதனிடையே ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சாவர்க்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டியா மாவட்டத்தின் சில இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்களில், தலைவர்களின் படங்களுடன் வீர சாவர்க்கரின் படமும் இடம் பெற்றிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் அந்த பேனர்களை அப்புறப்படுத்தினர். நடைபயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சிலர் அந்த பேனர்களை வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.
    • மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    பெங்களூரு :

    இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா சென்று நிறைவடைந்து தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

    மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கி உள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூரு வந்தார். அவரும் ரெசார்ட்டில் தான் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல், சோனியா காந்தி எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பின்னர் எச்.டி.கோட்டை தாலுகா பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீண்டும் ராகுல்காந்தி 6-ந் தேதி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார்
    • சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது.

    தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். அவரது நடைபயணம் இதுவரை சுமார் 630 கி.மீ. தொலைவை நிறைவு செய்து உள்ளது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் தொண்டர்களும் மைசூரில் நடைபயணத்தை தொடங்கினார்கள். இன்று காலை 11 மணிக்கு அவரது நடைபயணம் மாண்டியா மாவட்டத்துக்குள் சென்றது.

    ஸ்ரீரங்கபட்டினத்தில் அவரது நடைபயணத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை பாண்டவர்புரத்தில் அவரது நடைபயணம் முடிகிறது. இதையடுத்து நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் நடைபயணத்துக்கு ஓய்வு அளிக்க ராகுல்காந்தி முடிவு செய்து உள்ளார்.

    நாளை ஆயுதபூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதால் 2 நாட்களும் நடைபயணத்தை ராகுல்காந்தி நிறுத்தி உள்ளார். இன்று மாலை நடைபயணம் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் விமானம் மூலம் கூர்க் மலைப்பகுதிக்கு ராகுல் செல்ல உள்ளார்.

    காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தியும் இன்று டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு வந்தார். அவரும் கூர்க் பிராந்தியத்துக்கு செல்கிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் சோனியாவும், ராகுலும் தங்குகிறார்கள்.

    அடுத்த 2 நாட்கள் சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கு தங்கியிருந்து காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.

    மீண்டும் ராகுல்காந்தி 6-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார். அப்போது அவருடன் சோனியாவும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்.

    சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர். பிரியங்காவும் நடைபயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • கூடலூரில் பாதயாத்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை அங்கிருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார்.

    ஊட்டி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார்.

    தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.

    கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    நேற்று மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார்.

    அங்கு அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து அவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

    நந்தட்டி, பள்ளிப்பாடி, செம்பாலா வழியாக கூடலூர் புதிய பஸ்நிலையம் பகுதிக்கு வந்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை இசைத்தபடியும், நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வேனிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    கூடலூரில் பாதயாத்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை கூடலூரில் இருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார். கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.

    ×