search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள்"

    • சிறையில் இருந்து ஏராளமான கைதிகள் தப்ப முயன்றனர்.
    • அப்போது மூச்சுத்திணறல், துப்பாக்கிச் சூட்டில் 129 பேர் இறந்தனர்.

    கின்ஷாசா:

    காங்கோ தலைநகர் கின்ஷாசா அருகே மகலா என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறைச்சாலையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 1,500 கைதிகள் வரை அடைக்கும் வசதிகொண்ட இந்தச் சிறைச்சாலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்தச் சிறைச்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர். நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது, கைதிகளுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் கைதிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    மூச்சுத்திணறலில் மயக்கமடைந்த கைதிகள் பலரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதேவேளை, தப்பிச்செல்ல முயன்ற சிறைக்கைதிகள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 129 கைதிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்தச் சிறைச்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.

    இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.

    மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
    • தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர்.

    சேலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2019-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி தவ்பீக், அப்துல் தமீம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த சோதனை குழுவினர் சிறையில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். அதன்படி தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர். அப்போது அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அந்த அறை முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேரையும் வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர்தயாள் உத்தரவிட்டார். அதன்படி தவ்பீக் கடலூர் சிறைக்கும், அப்துல் தமீம் கோவை மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

    • தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
    • கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் விடுதலை செய்ய தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.

    இந்த பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளி ஜெயிலில் இருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர். இந்த கைதிகளில் 205 பேர் ஆயுள் தண்டனை 8 பேர் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறைகளில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது முக்கியமானது என்பதால் கைதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
    • 4 மத்திய சிறைகளில் ஆயிரக்கணக்கான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்பந்தப்பட்ட வரக்கூடியவர்களுக்கு சிறைச்சாலைகள் தண்டனை அனுபவிக்கக்கூடிய மற்றும் அவர்கள் திருந்துவதற்கான ஒரு இடமாக திகழ்ந்தாலும், பலருக்கு அது மறுவாழ்வு அழிக்கக்கூடிய இடமாக மாறிவிடுகிறது. அதற்கான வசதிகள் அனைத்து சிறைச்சாலைகளிலும் இருக்கின்றன.

    சிறைகளில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது முக்கியமானது என்பதால் கைதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கியமாக முடி வெட்டுவது, தாடியை ஷேவிங் செய்வது உள்ளிட்டகைளை கைதிகள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் கேரள ஜெயில்களில் ஏராளமான கைதிகள் தாடியை பெரிதாக வளர்த்து வருகிறார்கள்.

    கேரள மாநிலத்தில் 11 மாவட்ட சிறைகள், 16 துணை சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள், 16 சிறப்பு சிறைகள் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள திருச்சூர் விய்யூர், பூஜாப்புரா, கண்ணூர், தவனூர் ஆகிய 4 மத்திய சிறைகளில் ஆயிரக்கணக்கான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

    இந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தான், தாடியை வளர்க்க விரும்புகிறார்கள். அதிலும் தாடியை சவரமே செய்யாமல் மிகவும் நீளமாக வளர்க்கிறார்கள். இதனால் ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் பற்றிய பல விஷயங்கள் கேரள ஜெயில்களில் கேள்விக்குறியாகி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    டி.ஐ.ஜி. ரேங்க்கில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த அதிகாரி கூறியிருப்ப தாவது:-

    கேரள சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் விதிகள் 292(1)விதியின் படி ஒரு கைதிக்கு தாடி வளர்க்க உரிமை உள்ளது. இருந்தாலும் மற்ற கைதிகள இதைப்பார்த்து பின்பற்றும் போக்கு கேரள ஜெயில்களில் அதிகரித்து வருகிறது. தாடி வளர்க்க அனுமதிக்கா விட்டால், அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறி போராட்டம் நடத்துகிறார்கள். பின்பு நீதிமன்றத்தை அணுகி தாடி வளர்க்க அனுமதி பெறுகின்றனர். பூஜாப்புரா, விய்யூர், தவனூர், கண்ணூர் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் தாடி வளர்க்க அனுமதி கோருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதிகள் தாடி வளர்க்கும் விவகாரம் பற்றி திருச்சூரை சேர்ந்த மூத்த ஜெயிலர் கூறும்போது, 'கைதிகள் தங்களின் தாடியை நீளமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. முக முடியின் நீளம் பெரும் பாலும் ஒரு மனிதனின் தோற்றத்தை மாற்றும். தாடியின் நீளத்திற்கு பொருந்தக்கூடிய சட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் கைதிகள் தாடியை நீளமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

    மேலும் ஒரு மூத்த அதிகாரி கூறும்போது, 'சபரிமலை யாத்திரை காலம் அல்லது ரம்ஜான் மாதம் போன்ற மத காரணங்களுக்காக சில விதிவிலக்குகளை சிறைகளில் கைதிகளுக்கு அனுமதிக்கிறோம். என்.ஐ.ஏ. வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட ஏராளமான கைதிகள் மத நம்பிக்கைளை சாக்காக வைத்து தாடி வளர்க்கிறார்கள். கைதிகளின் இந்த போக்கு சிறைகளில் ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதில் சிக்கலாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சட்டப்படி கடுமையான நடவடிக்கை தேவை. தாடி வளர்க்கும் கைதிகளின் எண்ணிக்கை குறித்து பிரத்யேக பதிவு எதுவும் தற்போது இல்லை' என்றார்.

    சிறைத்துறையை சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறும்போது, 'சிறைக்கைதிகள் தாடியை பெரிதாக வளர்க்கும் போது மற்ற கைதிகளின் உணவில் முடி உதிர்ந்து மோதல்கள் ஏற்பட்டு பாதுகாப்பு சிக்கல்களை தூண்டலாம். இதனால் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்' என்றார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் - பலாஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்துள்ளது
    • போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது . இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

     

    பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் - இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது.

    காசாவில் 36,000 மக்களை கொன்று குவித்த பிறகு, தற்போது ரஃபாவில் உள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை.

     

    இந்நிலையில் பாலஸ்தீனிய சுதந்திர அரசும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் ஐ.நாவின் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தாயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்த இந்த இரக்கமற்ற போரை முடிவுக்கு கொண்டுவருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கிடையில் காசா தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

    • கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
    • ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

    • பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் மறுவாழ்வுக்காக சிறை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் மன அழுத்தம் குறைக்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    சமீபத்தில் சிறைக்கு வந்து சென்ற நடிகர் பார்த்திபன், சிறை கைதிகள் மன அழுத்தம் குறைக்க இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார்.

    அதன்படி, பார்த்திபன் மனித நேய மன்றம் சார்பில், காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி நடந்தது.

    இதில், பாடகர்கள் ஸ்ரீராம், சபிதா, தந்தை பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தினர். பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தனர். பாடகர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
    • வீடியோ கால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
    • கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான 5 வயது சிறுமி, கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த அஸ்பாக் ஆலம்(வயது28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.

    அவர் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளில் 13 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கொலை குற்றச்சாட்டுக்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றச்சாட்டுகளுக்கு 5 ஆயுள் தண்டனைகள், 49 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ7.20லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த 110 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து அஸ்பாக் ஆலம் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி அஸ்பாக் ஆலம் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பல குழந்தைகளை கொன்ற களியக்காவிளையை சேர்ந்த அழகேசன் என்பவர் 1979-ம்ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

    14 பேரை கொடூரமாக கொன்ற சந்திரன் என்பவர் 1991-ம் ஆண்டு கண்ணூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு பல வழக்குகளில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை. மாநிலத்தில் உள்ள 4 சிறைகளிலும் 21 மரண தண்டனை கைதிகள் தூக்கிற்காக காத்திருக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் பூஜாப்புரா சிறையில் 9 பேரும், திருச்சூர் விய்யூரில் 5 பேரும், கண்ணூரில் 4 பேரும், விய்யூர் உயர் பாதுகாப்பு சிறையில் 3 பேரும் உள்ளனர். நீதிமன்றங்களில் மேல்முறையீடு உள்ளிட்ட காரணங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    • மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூா் கிளை சிறைச்சாலையில் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சுசீலா தலைமையிலும், கும்பகோணம் கிளை சிறைச்சாலையில் திருவிடைமருதூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்

    சிவபழனி தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதி தலைமையிலும், திருச்சி மத்திய சிறையில் தஞ்சாவூா் குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிமன்ற நடுவா் முருகேசன் தலைமையிலும் நடைபெற்றது.

    இவற்றில் மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

    இந்த நிகழ்வில், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா், இளநிலை நிா்வாக உதவியாளா் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×