search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயகாந்த் பிறந்தநாள்"

    • தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
    • திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.

    சென்னை:

    நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை:-

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, அமரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.

    நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தி ருக்கும்.


    பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு:-

    விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர். கள்ளங்கபடம் இல்லாத சொக்கத் தங்கம் அவர்.

    யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் எதை பற்றியும் யோசிக்காமல் முதல் ஆளாக வந்து நிற்கும் மனிதநேயம் நிறைந்த தலைவர். அவர் புகழ் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.


    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:-

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜய காந்த். ஈகையும், வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்று கிறேன்.

    இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் மதிய உணவு சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரியாணி ஆகியவையும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
    • மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தென்சென்னை வடக்கு மாவட்டம் சைதை பகுதியில் 139 140 168 170 172 வட்டங்களிலும், மயிலை பகுதியில் 122, 171 ஆகிய வட்டங்களிலும் கொடியேற்றுதல், பெயர் பலகை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் மதிய உணவு சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரியாணி ஆகியவையும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை கழக உயர்மட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக செயலாளர் வி.சி.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் அகமது, புண்ணியமூர்த்தி, மடுவை சுப்பு, சைன்.ராஜ்குமார், பிரஸ் பாஸ்கர், பூக்கடை கந்தன், தமிழ்ச்செல்வன், கோட்டை ரவி, வாட்டர் வாஷ் குமார், ஏழுமலை, ஆறுமுகம், ராஜன், நரசிம்மன், துரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
    • என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன் தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்படுகின்றன.

    பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    2005-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறேன். தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களையும், தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள சுமார் ஆயிரம் நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாயும், செம்மரக்கட்டை வெட்டியதாக ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

    அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாயும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை "மக்களுக்காக மக்கள் பணி" என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம். மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல், மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டும் வழங்கப்படும்.

    இதுபோன்று நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம் பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.8.2023 (நாளை) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த விஜயகாந்த் உற்சாக மிகுதியால் கைகளை உயர்த்தி மீண்டும் அசைத்தார்.
    • விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 70-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கட்சியினர் கொண்டாடுவது வழக்கம்.

    இந்த வகையில் 70-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்றவை நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.

    வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

    இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்திப்பார் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவித்தார்.

    அதைத் தொடர்ந்து இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு குவிந்தனர். பூக்கொத்து, மாலை, பழத்தட்டுகளுடன் காத்திருந்தனர்.

    பகல் 12 மணிக்கு விஜயகாந்த் காரில் அங்கு வந்து இறங்கினார். அவருடன் பிரேமலதா வந்தார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கேப்டன் வாழ்க என கோஷமிட்டனர்.

    பின்னர் அலுவலக நுழைவு வாசலில் போடப் பட்டு இருந்த நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்தார். அப்போது தொண்டர்களின் வாழ்த்து கோஷம் அதிர்ந்தது. அவர் சிரித்தபடியே கைகூப்பி தொண்டர்களை பார்த்து வணங்கினார்.

    உற்சாகமாக கைகளை அசைத்ததோடு வெற்றியை குறிக்கும் வகையில் பெரு விரலையும் வளைத்து காட்டினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த விஜயகாந்த் உற்சாக மிகுதியால் கைகளை உயர்த்தி மீண்டும் அசைத்தார்.

    விஜயகாந்த் அருகில் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் தலைமை நிர்வாகிகள் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன், இ.சி.ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நின்று தொண்டர்களை அமைதிப் படுத்தினர்.

    முன்னதாக விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தொண்டர்களை பார்த்து கையசைத்தனர். கடந்த ஆண்டு பிறந்த நாளை காட்டிலும் தற்போது விஜயகாந்த் உற்சாகமாக இருப்பதாக தொண்டர்கள் தங்களுக்குள்ளே கூறிக் கொண்டதை காண முடிந்தது.

    விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

    நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். நடிகை வடிவுக்கரசி, நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, போண்டாமணி, கிங்காங் ஆகியோரும் விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து கூறினார்கள்.

    • நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-

    'வானத்தைப் போல' பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று 'புலன் விசாரணை' செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக 'கேப்டனாக' மரியாதையுடன், நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×