என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 260147"
- என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
- பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும்.
விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.
- ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
- ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர்.
ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாகஎடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.
கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும்.
- கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
- மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோவில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.
கந்த விரத மகிமை
முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
- முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.
- பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன்.
சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.
இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.
அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.
இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.
அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.
முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.
தூதை ஏற்காத சூரன், வீரவாகுதேவரை சிறை பிடிக்க முயன்றான். இதையடுத்து வீரவாகு போர் நடத்தினார்.
2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவை கொன்றார். 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவை கொன்றார்.
பிறகு முருகனிடம் திரும்பி வந்து நடந்தவற்றை வீரவாகு விளக்கமாக கூறினார்.
இதையடுத்து 4-வது நாள் முருகனே களத்தில் குதித்தார். அவருக்கும் சூரனுக்கும் திருச்செந்தூர் கடலோரத்தில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது.
அந்த 6 நாட்களும் முருகன் வெற்றிக்காக அனைவரும் விரதம் இருந்தனர். அதனால்தான் இப்போதும் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்கிறார்கள்.
இந்த 6 நாள் போர் எப்படி நடந்தது என்பதை பாருங்கள்...
பானுகோபன் வதைப் படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் பேர் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்கு வந்தான்.
பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அதன்பிறகு பானுகோபன் முருகன் வேலுக்கு பலியானான்.
சிங்கமுகன் வதை:
பானுகோபன் பலியான தகவவல் அறிந்தததும், சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்கு வந்தான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் செய்தான். இவனது தலை விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய தலை தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாமல் குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சம்காரம் செய்தான்.
சூரன் சம்காரம்:
சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.
தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.
அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.
அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.
தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான்.
இந்திரஞாலம் என்ற தேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார்.
இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.
சூலப்படை முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரன், கடைசியாக தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது.
முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராடினான். இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணினான்.
எனவே, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாஜால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.
தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிந்து பதுங்கினான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்காரம் செய்தது.
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி முருகனிடம் மன்றாடினான்.அவன்மேல் இரக்கம் கொண்ட முருகன் பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக்கொண்டார்.
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்பினார்.
சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி தினமாகும்.
சூரனை அழித்த பாவம் தீர, திருச்செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, முருகன் சிவ பூசை செய்தார். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காணும் முருகனின் கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
இங்கே முருகப் பெருமான் அபயம் / வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. சும்மா அலங்காரத்துக்கு வேல் அல்லது யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம் உள்ளது.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம் உள்ளது. அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ்சிறு சிலைகள் உள்ளன, வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று!
கருவறையைக் காலையிலும், மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆலயத்தில் சிறு செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது.
பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காணலாம். கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம்.
சூரசம்காரங்கள் முடிந்த பின்னர், இந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க முடிவுசெய்தார். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், வள்ளியை திருத்தணியில் திருமணம் புரிந்தார்.
- பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன் மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.
- ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.
ஆறுமுருகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
இவ்விரதம் 21 வருடம் கைக்கொள்ள வேண்டுமென்பது இவ்விரத விதியாகும். சகல சௌபாக்கியங்களையும் நல்கும் இவ்விரதத்தினை முறைப்படி 12, 6, வருடங்கள் வரை மேற்கொண்டு இறுதியில் 'உத்யாபனம்' செய்து விரதத்தினை நிறைவு செய்து கொள்ள முடியும்.
பொதுவாக எந்த விரதத்தினை அனுஷ்டித்தாலும் விரத பலன்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முறையே உத்தமம், மத்திமம், அதமம் என்பனவாம்.
உத்தமம்:- (உபவாசம்) உணவொன்றும் அருந்தாமலிருப்பது. இயலாவிட்டால் பகல் சென்றபின் சுவாமி தரிசனம் செய்து கொண்டு இரவில் தீர்த்தம். நீர், பசும்பால், இளநீர், முதலிய நீராகரத்தை உட்கொள்ளலாம். மிக முக்கியமாக பரிசுத்தமாகி அலைபாயாது மனதை விரதத் தெய்வம் எதுவோ அதன் பால் நிறுத்திக் கொள்வதாகும்.
மத்திமம்:- பகற்பொழுதைக் கழித்துத் தரிசனை செய்த பின் இரவில் ஏதாயினும் ஒருவகைப் பழங்களை சொற்பமாக அருந்தலாம். உத்தமம், மத்திம நிலைகளைக் கைக்கொள்வோர் விரதத்திற்கு முதல்நாள் ஒரு பொழுது உணவும் அன்றிரவு சொற்பமாக ஏதேனும் பலகாரமும் உண்ணலாம்.
அதமம்:- பகற்பொழுது ஒரு நேரமாய் புற்கை வகைகளில் ஒன்றேனும், பலகார வகைகளில் ஒரு வகையையேனும் உண்ணலாம்.
இதுவும் இயலாதவர்கள் ஒரு நேரமாய்ச் சோறு கறி உட்கொள்ளலாம். இவ்வகையோர் விரும்பினால் இரவில் அற்பமாய் பழமாயினும் நீரேனும் அருந்தலாம். ஆனாலும் சில விரதங்களுக்கு இரவில் யாதேனும் உண்பது விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
விரதம் முடிந்த மறுநாள் பாரணம் (விரதத்தை நிறைவு செய்தல்) காலை 5 மணிக்குள் செய்வது உத்தமம்.
முக்கியமாக பாரணை செய்தபின் பகலில் நித்திரை கொள்ளல் ஆகாது. அன்றிரவு ஏதேனும் பலகாரம் உட்கொள்ளலாம்.
சோறு உண்ணக் கூடாது. இது உபவாசம் இருந்த விரதங்களுக்கே உரியது. மேலே கூறப்பட்ட வகைகளெல்லாம் பொதுவாக விரதம் அனுஷ்டிக்கும் அன்பர்களுக்குப் பொருந்தும்.
குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை (கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது பற்றிய சிறிய தகவல் வருமாறு:-
கந்த சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
அதிகாலை4.30- மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிடலாம். ஓரளவு தாக்கு பிடிப்பவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம்.
உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் வெறும் தண்ணீருடன் விரதம் இருந்தவர்கள் உண்டு.
* முருகனுக்குரிய மந்திரங்களான "ஓம் சரவணபவ "ஓம் சரவணபவாயநம "ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* கோவிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் "அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
* மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது. பணி காரணம் உள்ளவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதமிருக்கலாம்.
பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.
அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.
பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன் மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள்.
அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.
நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
இவ்விரதத்தினை கடைப்பிடித்தால் வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.
- சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான்.
- ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார்.
பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.
ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.
இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான்.
அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரிக்க செய்தார்.
அதன்படி தான் முருகன் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளினார். அவருக்கும் சூரனுக்கும் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. 6-வது நாள் சூரனை முருகப் பெருமான் வீழ்த்தினார். அது சூரசம்ஹாரம் எனப்படுகிறது. அந்த போர் எப்படி.
ஆறுமுகன் அவதாரம்
தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன.
அவற்றை வாயு பகவான் ஏந்திச்சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.
அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்து போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான்.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.
பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்பில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.
அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வைபட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர்.
இவர்கள் ஆனைவரும் முருகனின் படைவீரர்களாயினர்.
இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார்.
ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.
சூரபத்மன் இச்செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.
பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப்படையும் கிளம்பிய முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்றனர்.
அதன் பிறகு முருகப்பெருமாள் சூரபத்மனுடன் போர் நடத்தினார்.
- திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார்.
- ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.
தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.
மலையின் சிறப்புகள் :
திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.
மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.
"குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
தலச்சிறப்புகள் :
இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.
இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க்குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.
திருமுருகாற்றுப்படை தந்த-நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.
வள்ளலாரும், முருகப்பெருமானும் :
வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி :
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.
திருவிழாக்கள் விவரம் :
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது.
- சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
தந்தைக்கே குருவான கதை :
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.
ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.
அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.
முருகப்பெருமான் காட்சி :
இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.
மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.
தலவிருட்சம் நெல்லி :
நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.
அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.
இயற்கையான மலை அல்ல :
சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.
மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச்செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.
மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண்கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.
திருவிழாக்கள் விவரம் :
இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
- பழனி மலை மீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.
- திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
பெயர் காரணம் :
பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை "ஞானப்பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.
இதேப்போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.
மகன் கோபித்துக்கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.
மலை உருவான கதை :
பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப்பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.
சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலை குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.
அப்போது முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.
இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. "இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது...?" என்று யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனை கீழே இறங்குமாறு கூறினான்.
ஆனால் அந்த சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.
பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப்பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.
இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள்பாலிப்பதாக அப்போது அருளினார்.
அன்று முதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள்.
இதனால்தான், பழனி மலை மீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.
திருவாவினன்குடி சிறப்பு :
திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.
திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசிக மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.
குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக்காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்த கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.
நலம் தரும் கிரிவலம் :
பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.
வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. இப்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம் :
இங்கு முருகப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.
எப்போதும் அபிஷேகம் :
முருகப்பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.
தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.
ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித்திப்பெற்ற பஞ்சாமிர்தம் - பாதயாத்திரை :
பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தப்படியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.
திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய விவாதம் :
பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவதுபடை வீடு என்று கூறுவோரும் உண்டு.
கொடைக்கானல் மலையில் இருந்து
பழனி மலையின் தோற்றம்...
- எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு.
- முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக திருச்செந்தூரில் அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.
திருச்செந்தூருக்கு செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
தல வரலாறு :
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
முன்னதாக, மாமரமாக உருமாறிகாட்சியளித்த சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் ஒரு பொருள் உண்டு.
திருச்செந்தூர் புகழ்பாடும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம். "சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி.
2 மூலவர் :
எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு. முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக இங்கு அருள்பாலிக்கிறார்.
பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் பாலிக்கின்றனர். பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும், சண்முகர் வள்ளி-தெய்வானையுடனும் எழுந்தருளியுள்ளனர்.
சிறப்புமிக்க நாழிக் கிணறு :
சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப்பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள்.
ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.
வீரவாகு தேவருக்கே முதல் மரியாதை :
திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. வீரவாகு தேவரின் வலது பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.
கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப்பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு. இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.
இதுதான் விபூதிப் பிரசாதம் :
திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான். பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.
ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.
இதேபோல், 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.
வள்ளிக்குகை :
திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை. முருகப்பெருமானிடம் வள்ளி கோபித்துக்கொண்டு வந்து தங்கிய இடம் இது என்கிறார்கள்.
இங்கு குகையை குடைந்து வள்ளிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும். வள்ளி குகைக்கு முன்புள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.
நடுக்கடலில் நடந்த அதிசயம்! :
இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்தவரை சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்க-வில்லை.
திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக்கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியில் கடும் புயல் வீசியது. பேய் மழை-யும் கொட்டித் தீர்த்தது. இதைக்கண்டு பயந்துபோன அவர்கள், கடத்திக்கொண்டு சென்ற சாமி சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கடத்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறு புதிய சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலை கிடைக்கும்" என்று அடையாளம் காட்டினார்.
அதன்படி, வடமலையப்ப பிள்ளை உள்ளிட்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். ஓரிடத்தில் எலுமிச்சைபழம் மிதக்க, அங்கு மூழ்கித் தேடினர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட முருகனின் திருமேனி கிடைத்தது. அந்த சிலை மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதேநேரம், புதிதாக வடிக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை" என்று அழைக்கப்படுகிறது. குறுக்கு வழியில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க இங்கு சென்று வழிபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
தாமரையுடன் கந்தன் :
சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
தெரியுமா மாப்பிள்ளை சுவாமி? :
பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்) சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
முதன் முதலானது முருகனுக்கே... :
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறி ஆகியவற்றை அறுவடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்தி விடுகின்றனர்.
இப்படிச் செய்தால் மகசூல் அதிக அளவில் இருக்கும் என்றும், இயற்கையால் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் நம்புகிறார்கள். இதேபோல், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சுப்பிரமணிய காயத்ரி :
"ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"
- முருகப்பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
திருவிழாக்கள் விவரம் :
முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகம், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் கடற்கரையோரம் நடைபெறும். அப்போது, அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் வெள்ளத்தால் கடலே காணாமல்போன உணர்வு நமக்குள் ஏற்படுவது வியப்பு.
மற்றும், முருகனுக்கு உகந்த எல்லா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும்.
- மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.
லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.
இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.
அமைவிடம் :
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங்குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்றுவாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.
இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும்.
இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.
அன்னையை நோக்கி தவம் :
கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.
புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆனால், முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே என்றாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இந்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.
அதன்தொடர்ச்சியாக, சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தெய்வானையை திருமணம் செய்தது ஏன்? :
முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.
திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.
பாவங்கள் போக்கும் சரவணப் பொய்கை :
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.
இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.
கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.
கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.
கோவில் சிறப்புகள் :
* முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.
* இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விழாக்கள் விவரம் :
தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.
மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மதுரை மாநகர் மக்களும் இந்த கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்யலாம்.
- மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.
- ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.
தமிழ்க் கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதாக புராண வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிகிறோம்.
ஆறுமுகன் அவதரித்தல் :
உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும். கருணையே வடிவான ஆறு திருமுகங்களையும், பன்னிரெண்டு கரங்களையும் தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர்.
முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். "முருகு" என்னும் திருப்பெயரோடு "அன்" விகுதி சேர்த்து முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.
அப்பேற்பட்ட முருகப்பெருமானின் அவதாரப் பெருமையையும், ஆறுபடை வீடுகளின் தலச் சிறப்பையும் வெப்உலகம் இணைய தளத்தின் ஆன்மீகம் - ஆலயம் பகுதியில் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
சூரபத்மன் என்னும் அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் நூற்றியெட்டு யுகங்கள் வாழும் ஆயுளும், ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத மாபெரும் வரங்களைப் பெற்றான்.
தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும் - முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன்.
நான்முகன், திருமால், இந்திரன், தேவர்கள் யாவரும் கயிலைவாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகின்றான் என்று முறையிட்டனர். சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர்.
"தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம். அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான். அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன்.
அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் விட்டது, அவை ஆறு குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன. அக்கினிப் பொறியாய் இருந்து அவதரித்தமையால் "அக்கினி கர்ப்பன்" என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் "காங்கேயன்" என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் "சரவணன், சரவண பவன்" என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.
இந்த ஆறு குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால், கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார்.
திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் மயில் வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய காரணத்தால் சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.
ஆறு உருவங்களும் ஓர் உருவாதல் :
கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வரும்படி பார்வதியிடம் சிவபெருமான் அருளினார். பார்வதி தேவியும் அதன்படியே ஆறு குமாரர்களையும் ஒரே சமயத்தில் தன்னுடைய இரண்டு திருக்கரத்தினால் வாரி அணைத்து எடுத்தாள். ஆறு உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், ஆறு தலைகள், பன்னிரு கரங்கள், இரு பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது. அழகே வடிவமெடுத்து "கந்தன்" என்னும் நாமத்துடன் ஆறுமுகன் விளங்கினான்.
ஆற்றுப்படையே ஆறுபடை வீடு :
படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.
ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர். ஆயினும் ஏனையத் தலங்களும் படைவீடு என்றே அழைக்கப்படுகின்றன.
நக்கீரர் "திருமுருகாற்றுப் படை" என்னும் தம்முடைய நூலில் ஆறுமுகப் பெருமான் தங்கியிருந்த தலங்களையும் ஆறுமுகப் பெருமானை வழிபடுவோர் எல்லா கஷ்டங்களையும் நீக்கப் பெற்று அருளைப் பெறுகின்றனர் என்றும் அவரது பெருமைகளை கூறி ஆற்றுப் படுத்துகிறார்.
அதனையட்டி ஆறுமுகனுக்கு ஆற்றுப் படைவீடு என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே ஆறுபடை வீடாயிற்று. கச்சியப்ப சிவாச்சாரியார், அகத்திய மாமுனிவர், ஒளவையார், வள்ளலார் போன்ற எண்ணற்ற புலவர்களும் முருகன் புகழை பாடிப் பேறு பெற்றுள்ளனர்.
ஆறுபடை வீடுகள் :
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை
5. திருத்தணி
6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும்.
ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் :
அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.
1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்
4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி
6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை
மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர். ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்