search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை பணியாளர்கள்"

    • வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்.
    • பி.ஏ.பி.யில் திறக்கப்படும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை.

    உடுமலை:

    உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.ஆர்டிஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன்,உடுமலை தாசில்தார் கண்ணாமணி,மடத்துக்குளம் தாசில்தார் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

    பாலதண்டபாணி:கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சுண்டக்காம்பாளையம் விவசாயிகளின் வழித்தட பிரச்சினையை தீர்த்து வைத்ததற்கு நன்றி.பிஏபி வாய்க்காலில் அரசு கலைக்கல்லூரி முதல் சுந்தர் நகர் வரை குப்பைகள் கொட்டப்படுகிறது.அதனை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    ஆர்டிஓ:குப்பை கொட்டுபவர்களை படம் எடுத்துக் கொடுங்கள்.வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்.

    மதுசூதனன்:பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து தேங்காய் விலையை குறைத்து வருகின்றனர்.அவர்களுக்கு விலை நிலவரம் வெளியிடும் நிறுவனங்களும் உடந்தையாக செயல்பட்டு குறைந்த விலையை பதிவிடுகின்றனர்.தேங்காய் விலை பாதிக்கும் குறைந்ததால் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.தென்னை நார் மற்றும் மஞ்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் மட்டை மில்கள் திணறி வருகின்றன.திருமூர்த்திநகரிலுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் தமிழை சேர்க்க வேண்டும்.

    வாளவாடி வரதராஜப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலம் பயன்பாடில்லாமல் கிடப்பதால் புதர் மண்டி விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.அதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது.அப்போதைய கால்நடைத்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் என்பதற்காக உடுமலை தாலுகாவில் பல தகுதியற்ற நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.ஜம்புக்கல் கரடு மலை அழிப்புக்கு முடிவு காண வேண்டும்.

    ஸ்ரீதர்: குடிமங்கலம் ஒன்றியத்தில் கடந்த 2019 ல் 500 மூட்டை அரசு சிமெண்ட் பெறுவதற்காக பணம் செலுத்திய ஏழை விவசாயிகளுக்கு இதுவரை சிமெண்ட் கிடைக்கவில்லை.இதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சௌந்திரராஜன்:தற்போது பி.ஏ.பி.யில் திறக்கப்படும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை.மடைக்கு 20 நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படவுள்ளது.20 நாளில் எந்த பயிரும் சாகுபடி செய்ய முடியாது.சின்ன வெங்காயம்,தக்காளி போன்ற விளை பொருட்கள் விலை சரிவால் கடனாளியாகியுள்ள விவசாயிகள் மேலும் கடன் வாங்கி நஷ்டமடையும் நிலையே ஏற்படும்.

    ராமலிங்கம்:தற்போது திறக்கப்படும் தண்ணீர் முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படும்.ஏற்கனவே 2578 முறைகேடுகள் உள்ளதாக தலைமைப்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.7 நாள் திறப்பு 7 நாள் நிறுத்தம் என்ற வகையிலேயே தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    நீரா பெரியசாமி:நீரா பானத்தை விவசாயிகள் கூட்டாக சேர்ந்து இறக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.தனிப்பட்ட விவசாயி இறக்கி விற்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.வடுகபாளையம் அருகில் தனியார் நிறுவனத்தினரின் பணிகளின் போது உடைக்கப்பட்ட குடிநீர்க்குழாயிலிருந்து 5 நாட்களாக குடிநீர் வெளியேறி வருகிறது.இதனால் 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடிமங்கலம் குளத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் அருகிலுள்ள கிணற்று நீர் துர்நாற்றமடிக்கும் நிலை உள்ளது.குடிமங்கலம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.அவை ஆடு மாடுகளைக் கடித்த நிலை மாறி தற்போது மனிதர்களையும் கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பரமசிவம்:வாளவாடி பெரிய குட்டை,நடுக்குட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.கடந்த காலங்களில் விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு ஒருசில நாட்கள் கடந்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.தற்போது கூட்டம் முடிந்ததும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்களை ஆர்டிஓ. நேரடியாக வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்த செயல் விவசாயிகளைக் கவர்ந்தது.

    ×