என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர் மரணம்"
- நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆதித்யா சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார்.
இரணியல்:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆத்திவிளையை அடுத்த ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஶ்ரீ குமார். இவரது மகன் ஆதித்யா (வயது 16). இவர் மாங்குழி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆதித்யா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசில் ஶ்ரீகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி மரணங்கள் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்லூரி மாணவர் தினேஷ் குமார் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
- மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரையில் இன்று குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போட்டிைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளை சேர்ந்த 4500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 160 மாணவ-மாணவிகளும் இதில் அடங்குவர்.
அந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரின் மகன் தினேஷ்குமார் என்பவர் 4 ஆண்டு படித்து வந்தார். இவரும் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
போட்டியில் பங்கேற்று விட்டு கல்லூரி விடுதிக்கு வந்த தினேஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சுய நினைவு இழந்து காணப்பட்ட தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
- மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன்.
மூத்த மகன் ஜீவந்த் (வயது25) கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தார்.
இளநிலை படிப்பு முடித்தவுடன், எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விரும்பினார். அந்த படிப்பினை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என ஜீவந்த் நினைத்தார்.
அவரது விருப்பத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் புகழ் பெற்ற ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அங்கு இடமும் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் தனது ஒரு வருட படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்றார்.
அங்கு பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி அவர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு படிக்க சென்றார்.
அங்கு புத்தகங்களை எடுத்து படித்து கொண்டு, பாடத்திற்கு தேவையான குறிப்புகளையும் எடுத்துள்ளார். இரவு 9.30 மணியளவில் அவரது நண்பர்கள் ஜீவந்த்துக்கு போன் செய்து, நாங்கள் சாப்பிட போகிறோம். நீயும் சாப்பிட வா என அழைத்தனர்.
அதற்கு அவர், நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவர்களும் சென்று விட்டனர்.
இரவு 11 மணியை கடந்தும் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பயந்து போன நண்பர்கள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
அவர்களும் மாணவர் காணாமல் போனது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தினர். போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினர்.
இந்த நிலையில் 21-ந் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசாருக்கு பர்மிங்காம் கால்வாயில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டதாகவும், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் யார் என விசாரித்தனர்.
அப்போது அவர் காணாமல் போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவையில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மகன் இறந்த செய்தி கேட்டு கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்ததும் ஜீவந்த்தின் உறவினர்கள் அவரது வீட்டில் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அந்த வீடே சோகமயமாக காட்சி அளிக்கிறது.
இது தொடர்பாக இங்கிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறியதாக தெரிவித்தனர்.
மேலும் இரவு 11 மணிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் போலீசிடம் தெரிவித்தனர்.
நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறிய ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் கிடந்தார் என்பது போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.
எப்படி அவர் அங்கு வந்தார், தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரும் அவருடன் வந்தனரா? என்றும் விசாரிக்கின்றனர்.
மேலும் அவரிடம் யாராவது தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கால்வாயில் தூக்கி வீசினரா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
இருந்த போதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே கோவை என்ஜீனியரிங் மாணவர் லண்டனில் உயிரிழந்தது பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் ஜீவந்த் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து இறந்த ஜீவந்த்தின் சகோதரர் ரோகன் கூறியதாவது:-
எனது சகோதரர் நன்றாக படிக்கக்கூடியவர். தினமும் பெற்றோரிடமும் என்னிடமும் போனில் பேசிவிடுவார். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் கூட அவர் எங்களிடம் போனில் பேசினார்.
ஆனால் அடுத்த நாளே அவர் பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டதும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது. இது எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். தனது வேலையை மட்டும் பார்ப்பார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் பர்மிங்காம் கால்வாய் பகுதிக்கு எதற்காக சென்றார். எப்படி அடிபட்டு கிடந்தார் என்பது தெரியவில்லை.
அவரை யாரும் தாக்கினரா என்பதும் தெரியவில்லை. எனது சகோதரர் சாவில் மர்மம் இருக்கிறது. அது என்ன என்பதை போலீசார் கண்டுபிடித்து உண்மையை வெளியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது இந்திய தூதரகம் மூலம் இறந்த எங்கள் சகோதரரின் உடலை மீட்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்பில் இருந்து தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.
- முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ ரமணாகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவரது மகன் முகமது சர்ப்ராஸ் (வயது 18). கொரோனா ஊரடங்கு காலத்தில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.
உள்ளூர் மதரஸா ஒன்றில் இஸ்லாமிய கல்வி படித்து வந்தார். நேற்று காலை தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 2 பேருடன் சனாத் நகர் ரெயில் நிலையம் அருகே உள்ள பாப்புகுடா பகுதிக்கு சென்றனர். சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்வதுபோல வீடியோ எடுக்க நண்பர்களுக்கு கூறினார்.
அதன்படி முகமது சர்ப்ராஸ் நடனம் ஆடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார்.
இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.
இதில் முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சனாத் நகர் ரெயில்வே போலீசார் முகமது சர்ப்ராஸ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் மீது ரெயில் மோதிய காட்சி அவரது நண்பர்கள் செல்போனில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை அரசு பேருந்து நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மகன் சஞ்சய் (15). இவர் கஸ்பாபேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறையால் சஞ்சய் வீட்டில் இருந்து உள்ளார். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் தனது நண்பர்களுடன் சஞ்சய் அதே பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரின் கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது விளையாட்டு மிகுதியால் சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாது எனவும் கூறப்படுகிறது.
அப்போது திடீரென சஞ்சய் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார்.
இது குறிப்பு ஈரோடு தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றினர். பின்னர் சஞ்சய் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சாரதி (வயது 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு விடுமுறை நாளாகும்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சாரதியின் அண்ணன் சுபாஸ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் சாரதி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் மண்ணச்சநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சாரதி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அவரது அண்ணன் சுபாஸ் வாகனத்தை ஓட்டினார். திருவெள்ளறை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது.
இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அடுத்த விநாடி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்து பலியான சாரதியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தீபக்கிற்கு பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- பின்னர் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்று விட்டனர்.
கொளத்தூர்:
கொளத்தூர், பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி ஜெயப்பிரதா. இவர்களது மகன் தீபக் (வயது13).
இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளியில் இருந்து திரும்பிய தீபக்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தீபக்கிற்கு பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்று விட்டனர்.
இன்று அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் தீபக் எழும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவன் தீபக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் அலறி துடித்தனர்.
தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் சாவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவரது பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே இதுகுறித்த விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே திரும்பியது.
- பஸ் பள்ளத்தி்ல் இறங்கி சென்றதால் நிலைகுலைந்த பிரபாகரன், அரசு பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
மதுரை:
மதுரை விளாங்குடி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பிரபாகரன் இன்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாததால் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்.
அந்த பஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே திரும்பியது. அப்போது பஸ் பள்ளத்தி்ல் இறங்கி சென்றதால் நிலைகுலைந்த பிரபாகரன், அரசு பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை கல்லில் மோதி படுகாயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மாணவரின் பெற்றோர் காலையில் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்ற மாணவர் பஸ்சில் இடம் கிடைக்காமல் தொங்கி கொண்டு சென்றதில் பலியாகி விட்டானே என்று கதறி அழுதனர்.
மேலும் மாணவர்கள் பாதுகாப்பில் போக்குவரத்துறை மற்றும் போலீசார் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் என்று பலியான மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விளாங்குடி 9-ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் பஸ்சில் தொங்கி சென்றபோது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்