என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேல்படிப்புக்காக சென்ற கோவை என்ஜினீயர் இங்கிலாந்தில் மர்ம மரணம்- கால்வாயில் பிணமாக மீட்பு
- இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
- மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன்.
மூத்த மகன் ஜீவந்த் (வயது25) கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தார்.
இளநிலை படிப்பு முடித்தவுடன், எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விரும்பினார். அந்த படிப்பினை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என ஜீவந்த் நினைத்தார்.
அவரது விருப்பத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் புகழ் பெற்ற ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அங்கு இடமும் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் தனது ஒரு வருட படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்றார்.
அங்கு பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி அவர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு படிக்க சென்றார்.
அங்கு புத்தகங்களை எடுத்து படித்து கொண்டு, பாடத்திற்கு தேவையான குறிப்புகளையும் எடுத்துள்ளார். இரவு 9.30 மணியளவில் அவரது நண்பர்கள் ஜீவந்த்துக்கு போன் செய்து, நாங்கள் சாப்பிட போகிறோம். நீயும் சாப்பிட வா என அழைத்தனர்.
அதற்கு அவர், நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவர்களும் சென்று விட்டனர்.
இரவு 11 மணியை கடந்தும் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பயந்து போன நண்பர்கள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
அவர்களும் மாணவர் காணாமல் போனது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தினர். போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினர்.
இந்த நிலையில் 21-ந் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசாருக்கு பர்மிங்காம் கால்வாயில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டதாகவும், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் யார் என விசாரித்தனர்.
அப்போது அவர் காணாமல் போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவையில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மகன் இறந்த செய்தி கேட்டு கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்ததும் ஜீவந்த்தின் உறவினர்கள் அவரது வீட்டில் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அந்த வீடே சோகமயமாக காட்சி அளிக்கிறது.
இது தொடர்பாக இங்கிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறியதாக தெரிவித்தனர்.
மேலும் இரவு 11 மணிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் போலீசிடம் தெரிவித்தனர்.
நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறிய ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் கிடந்தார் என்பது போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.
எப்படி அவர் அங்கு வந்தார், தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரும் அவருடன் வந்தனரா? என்றும் விசாரிக்கின்றனர்.
மேலும் அவரிடம் யாராவது தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கால்வாயில் தூக்கி வீசினரா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
இருந்த போதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே கோவை என்ஜீனியரிங் மாணவர் லண்டனில் உயிரிழந்தது பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் ஜீவந்த் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து இறந்த ஜீவந்த்தின் சகோதரர் ரோகன் கூறியதாவது:-
எனது சகோதரர் நன்றாக படிக்கக்கூடியவர். தினமும் பெற்றோரிடமும் என்னிடமும் போனில் பேசிவிடுவார். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் கூட அவர் எங்களிடம் போனில் பேசினார்.
ஆனால் அடுத்த நாளே அவர் பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டதும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது. இது எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். தனது வேலையை மட்டும் பார்ப்பார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் பர்மிங்காம் கால்வாய் பகுதிக்கு எதற்காக சென்றார். எப்படி அடிபட்டு கிடந்தார் என்பது தெரியவில்லை.
அவரை யாரும் தாக்கினரா என்பதும் தெரியவில்லை. எனது சகோதரர் சாவில் மர்மம் இருக்கிறது. அது என்ன என்பதை போலீசார் கண்டுபிடித்து உண்மையை வெளியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது இந்திய தூதரகம் மூலம் இறந்த எங்கள் சகோதரரின் உடலை மீட்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்பில் இருந்து தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்