என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பதி தற்கொலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர்.
    • நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா நகர் 7-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் பாலமுருகன் (வயது 53) குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது மனைவி சுமதி (வயது 47) சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார் (வயது 18), லிங்கேஷ் குமார் (வயது 16) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். 2-வது மகன் லிங்கேஷ் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    டாக்டர் பாலமுருகன் அண்ணாநகர் 13-வது மெயின் ரோட்டில் ஸ்கேன் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். மருத்துவ தொழிலில் முதலீடு செய்வதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கி இருந்தார்.

    அவருக்கு ரூ.5 கோடி வரை கடன் இருந்ததாக தெரிகிறது.

    கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் டாக்டர் பாலமுருகனால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த இயலவில்லை. வட்டி தொகையையும் அவர் கட்ட இயலாமல் திணறியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த குடும்பப் பிரச்சனையால் டாக்டர் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.

    இந்த நிலையில் கடன் தொகையை பலரும் டாக்டர் பாலமுருகனிடம் திருப்பி கேட்டனர். இதனால் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளான டாக்டர் பாலமுருகன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார்.

    இதுபற்றி அவர் தனது மனைவி சுமதியிடம் கூறியதாக தெரிகிறது. அவரும் உயிரை மாய்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. மகன்களுடன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தம்பதிகள் திட்டமிட்டனர்.

    அதன்படி டாக்டர் பாலமுருகன் தனது மனைவி சுமதி மற்றும் 2 மகன்களுடன் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டனர்.

    வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு 4 பேரும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். டாக்டர் பாலமுருகன் ஒரு மின் விசிறியிலும், அவரது மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் மற்றொரு மின்விசிறியிலும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து இருந்தனர்.

    வழக்கறிஞர் சுமதி தனது 2-வது மகன் லிங்கேஷ் குமாருடன் ஒரே மின் விசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அருகில் உள்ள வீடுகளில் யாருக்கும் கேட்கவில்லை.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு டாக்டர் பாலமுருகனின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் பக்கத்து வீடுகளில் இதுபற்றி தகவல் தெரி வித்தார். அவர்கள் வந்து அழைத்தும் டாக்டர் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருமங்கலம் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் டாக்டர் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது பற்றி தகவல் பரவியதும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருமங்கலம் போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் அருகே உள்ள வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). அவரது மனைவி சுமதி. இவர்களது மகள் புஷ்பரோகிணி (19).

    இவர் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கும் பெரியாண்டிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் வருகிற 20-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

    இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் புஷ்ப ரோகிணி கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சுந்தர மூர்த்தி தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் புஷ்பரோகிணி கிடைக்கவில்லை.

    இதுதொடர்பாக அக்கம் பக்கம் விசாரிக்கையில் புஷ்பரோகிணிக்கு வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (20) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் காதலனுடன் சென்றுள்ளார்.

    இந்த தகவலை அறிந்த சுந்தரமூர்த்தி, சுமதி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபற்றி வெளியே தெரிந்தால் ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்களே என்று வேதனையடைந்தனர். எனவே தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் அமர்ந்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கினர்.

    அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் 2 பேர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசாரும் அங்கு விரைந்தனர். அப்போது மயங்கி கிடந்த கணவன்-மனைவியை பார்த்தபோது 2 பேரும் இறந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதுபற்றி அறிந்த சுந்தர மூர்த்தியின் மகன் சந்திரசேகரன் அங்கு விரைந்தார். தனது தாயும், தந்தையும் இறந்துகிடப்பதை பார்த்து கதறிதுடித்தார். உடனே 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
    • குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி (வயது45). இவருடைய மனைவி ஷானுமா (40). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவரும் பை செய்யும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலையில் ஹைதர் அலியும், ஷானுமாவும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்தனர்.

    மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பிள்ளைகள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அறையில் ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுதனர். உடனே ஷானுமாவை தேடினார்கள். மற்றொரு அறையில் அவரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஹைதர் அலி, ஷானுமா இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா?என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • காதல் திருமணம் செய்த 10 நாளில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் மாரியப்பன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகள் சீதாலட்சுமி (16). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்கள் அண்ணன்-தங்கை உறவு முறை என கூறப்படுகிறது.

    இதனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிந்துபட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    இதனிடையே வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்றனர். திருப்பூரில் செரங்காடு கடுகுகாரர் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக அக்கம்பக்கத்தினர் சீதாலட்சுமியை தேடினர். ஆனால் அவரது வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி அழைத்தும் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்துள்ளனர். அப்போது மாரியப்பன்-சீதாலட்சுமி இருவரும் கயிற்றில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், திருப்பூரில் இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து விட்டதால், இனி நம்மை பிரித்துவிடுவார்கள் என்று நினைத்து இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் அவர்களது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், எங்கள் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்தோம். ஆனால் எங்களை வாழ விடவில்லை. எங்களது இந்த முடிவுக்கு சிலர் காரணம், 100 வருடம் சந்தோஷமாக வாழ விருப்பப்பட்டோம், வேறு வழியின்றி இந்த முடிவு எடுத்துள்ளோம்." கூறியிருந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா என்ற நேகா (7), அக்‌ஷரா (5) என 2 மகள்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் நிதிஷாக்கு இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 2-வது மகள் அக்‌ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அக்‌ஷராவை தந்தை யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அதில் அவருக்கும் சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    தனது 2 மகள்களுக்கும் தீராத சர்க்கரை நோய் வந்துவிட்டதே என்று எண்ணி வருந்திய யுவராஜ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இதையடுத்து வீட்டுக்கு சென்று மனைவி மான்விழியிடம் 2-வது மகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மான்விழி மனம் நொந்து போனார். பின்னர் கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்தனர்.

    இதையடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ், தனது மனைவி மான்விழி மற்றும் 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றனர்.

    தொடர்ந்து கனத்த மனதுடன் 2 மகள்களையும் காவிரி ஆற்றில் வீசினர். இதில் 2 மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் யுவராஜ், மான்விழி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    • தங்கமுனியசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்கமுனியசாமி (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (22). இவர் அனந்தமாடன்பச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார்.

    அப்போது தங்கமுனியசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு அனந்தமாடன்பச்சேரியில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் தங்கமுனியசாமியின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க முயன்றனர். ஆனால் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து உடனடியாக தருவைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது, அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய செய்தது. வீட்டில் கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • வருமானம் இல்லாததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தவித்து வந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாப்பா (60). இந்த தம்பதிக்கு சுமதி (32) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    முருகேசன், பாப்பா தனியாக வசித்து வந்த நிலையில், முருகேசனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது. மேலும் கணவன், மனைவி இருவரும் வயதான நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர். மேலும் உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் இருவரும் மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு, முருகேசன் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோர் வீட்டில் விஷம் கு டித்து மயங்கி கிடந்தனர். அப்போது முருகேசனின் தம்பி மகன், அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர்களை, உறவினர்கள் உதவியுடன் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசனும், பாப்பாவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானம் இல்லாததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தவித்து வந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி(வயது60). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி(55). இவர்களுக்கு பாரதி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதியும் மாசி, பூங்கொடி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மாசி, நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா, நானும் குடிப்பேன் என்று கூறி மனைவியின் கையில் மீதம் இருந்த விஷத்தை அவரும் பிடுங்கி குடித்தார்.

    இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாசியும் உயிரிழந்தார்.

    குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னத்துரையின் மகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் மகள் சென்றதும் தெரியவந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு, செட்டி மல்லன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது45). இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    இந்நிலையில் சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த சின்னதுரை அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் சாயர்புரம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் டி.எஸ்.பி. சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சின்னத்துரையின் மகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் மகள் சென்றதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 65). இவர் மணக்காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி விஜயா (58).

    தங்கராஜ், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் 2 லட்சம் பணம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கராஜ், கொஞ்சம் கொஞ்சமாக வட்டி பணம் மட்டும் கொடுத்து வந்தார். இந்த நிலையில் நாளடைவில் லேத் பட்டறையில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் தங்கராஜினால் வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா அடிக்கடி அவரிடம் அசல் மற்றும் வட்டி பணத்தை சேர்த்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ், தன்னிடம் இப்போது பணம் இல்லை, சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். அதற்குள் பணம் கட்டி விடுகிறேன் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் வருமானம் இல்லாததால் பணம் கொடுக்க முடியாமல் தங்கராஜ் தவித்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, வட்டி மற்றும் அசல் பணம் கேட்டு அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் விஷம் குடித்து மாமாங்கம் பகுதியில் மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு சேலம் காந்தி விளையாட்டு மைதானம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தங்கராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அவரது மனைவி விஜயா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. கணவரின் இந்த சாவுக்கு கந்து வட்டி கொடுமையே என எண்ணி கதறி துடித்த விஜயா, இனிமேல் இங்கு வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். தொடர்ந்து அழுதபடியே கணவர் இறந்த துக்கத்தில் விஜயா ஆஸ்பத்திரியில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கராஜ்-விஜயா ஆகியோர் உடல்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா என்பவர், காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    பணம் கொடுக்காதவர்களை மிரட்டியும் வந்துள்ளார். அந்த வகையில் கந்து வட்டி கேட்டு தங்கராஜை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார், ராஜாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த வெள்ளிக்கிழமை அசோக்கின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
    • நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியா ஆலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவர்லா மண்டலம் தேவாரம் பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 25).

    இவர் தனது சகோதரர் ராகவேந்தருடன் இணைந்து ஆட்டோவில் காய்கறியை கொண்டு சென்று ஊர் ஊராக விற்பனை செய்து வந்தார். ஆளூர் பகுதியை சேர்ந்த நாகம்மா மகள் சந்தியா (22). இவர் ஆலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அசோக், சந்தியா வேலை செய்யும் துணி கடைக்கு அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    பின்னர் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அம்முலு என்று பெயரிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அசோக்கின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியா ஆலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் காய்கறி வியாபாரத்திற்கு சென்ற அசோக் நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தியாவின் தாய் வீட்டிற்கு வந்தார்.

    அதுவரை தனது தாயுடன் படுத்திருந்த சந்தியா குழந்தையை தூக்கிக் கொண்டு கணவருடன் வேறு ஒரு அறைக்கு சென்றார். பொழுது விடிந்து நீண்ட நேரம் ஆகியும் சந்தியா அறையில் இருந்து வெளியே வராததால் அவரது தாய் சந்தியாவின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டார்.

    ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது அசோக், சந்தியா அவர்களது குழந்தை அமுலு ஆகியோர் அறையில் இருந்த இரும்பு கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பார்த்தபோது அவர்கள் இறந்து போனது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் பார்த்து சந்தியாவின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். கணவன் மனைவி 2 பேரும் சேர்ந்து முதலில் குழந்தையை தூக்கில் தொங்க விட்டு கொன்று பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.
    • ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரமனப்பள்ளியைச் சேர்ந்தவர் சாய்குமார் ரெட்டி (வயது 29), குடிநீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஹேமமாலினி (28). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    ஹேமமாலினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் கடப்பா நகர் விஜய துர்கா காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    ஹேமமாலினி மரியாபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதைவிட சாவது மேல் என நினைத்து தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    இருவரும் நேற்று இரவு கடப்பா புறநகர் பகுதியான கனுமலோபள்ளி ரெயில் நிலையம் அருகே சென்றனர். அப்போது வந்த ரெயில் முன்பு கணவன் மனைவி இருவரும் கட்டிப்பிடித்தபடி பாய்ந்தனர்.

    இதில் உடல் சிதறி இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி ரெயிலில் சிக்கி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×