search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலு"

    • ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும்.
    • நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும்.

    நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகு படுத்தலாம்.

    கடந்த வருடம் வாங்கிய பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும். ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள்.

    கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள். விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல் வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள். கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை இன்றே செய்ய வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண்டும்.

    நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். கொலு அமைக்க நாளை 27-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7.45 மணி முதல் 8.45 வரையும் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையும் நல்ல நேரம் ஆகும். அப்போது கொலு அமைக்கலாம். அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம். கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

    நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது.

    கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர் கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும்.

    விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தை களை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம்.

    வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தி னால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.

    • கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
    • எங்களது வாசகர்களுக்கு எங்களால் முடிந்த குறிப்புகளை இங்கே தருகிறோம்.

    கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். மற்றவர்களில் இருந்து தங்களது கொலு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அவ்வாறு எண்ணும் எங்களது வாசகர்களுக்கு எங்களால் முடிந்த ஒருசில குறிப்புகளை இங்கே தருகிறோம்.

    குறிப்புகள்: கொலுவில் முக்கியமானது கலசம், தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும், நிஜத்தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை. ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளாஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும். ப்ளாஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத் தில் வாங்கிக் கொள்ளுங்கள்.

    தங்கநிற சம்கிகள் சிறு இலை வடிவில் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள். குடத்தின் வாய்ப் பகுதிக்கு வெள்ளி நிறலேஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள். தங்கக் கலசம் தயார்.

    கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ தொட்டியிலோ கேழ்வரகு, கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய் மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அல்லது சதுர அல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புதுப்பொலிவினைத்தரும்.

    பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பாரம் போல தெரியும். உலர்த்திய காபிப்பொடியால் தார்சாலை நடுவில் அமைக்கலாம். சிறு ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டி செடிகள் செய்யலாம். அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.

    புத்தகங்களின் அட்டைப் பக்கத்தில் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் ஒட்டி கொலு முகப்பில் வைக்கலாம். கொலுவிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

    • புதுக்கோட்டையில் ெகாலு பொம்மை விற்பனை அமோகமாக நடக்கிறது
    • நவராத்திரி விழாவையொட்டி

    புதுக்கோட்டை:

    நவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டையில் கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக  நடக்கிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் புதுக்கோட்டையில் களைகட்ட தொடங்கி உள்ளது. விழாவையொட்டி புதுக்கோட்டை சாந்தநாத அம்மன்  சன்னதி அருகிலுள்ள பூஜை பொருட்கள் கடைகளில்    பல வண்ண வடிவில் சிறியது முதல் பெரியது வரை கொழு  பொம்மைகள் விற்பனை க்கு  வந்துள்ளன. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து வியாபாரி சேகர் கூறுகையில்,  கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட நவராத்திரி கொலு பொம்மை விற்பனை இந்த ஆண்டு அமோகமாக நடைபெறுகிறது. விற்பனைக்காக கடைக்காரர்கள் மதுரை சென்னை, பெங்களூர் கல்கத்தா   உள்ளிட்ட ஊர்களிலிருந்து விதவிதமான கொலு பொம்மைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    மக்களும் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். இதில் மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக உள்ளன.

    இதேபோன்று திருவள்ளுவர், அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி விவேகானந்தர் போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது என்று சேகர் கூறினார்.

    ×