என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில்வே போலீசார்"
- ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
- தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.
அம்பத்தூர்:
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.
பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.
மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைகளை காக்கும் நன்ஹே பரிஸ்தே நடவடிக்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 322 சிறுமிகள் உள்பட 895 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.
- ஆட்கடத்தலில் ஈடுபட்ட 14 பேர் பிடிபட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
ரெயில் நிலையங்களில் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகள், குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதில் ரெயில்வே போலீசார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். இதில் குழந்தைகளை காக்கும் நன்ஹே பரிஸ்தே நடவடிக்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 322 சிறுமிகள் உள்பட 895 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். இதைப்போல ஆட்கடத்தலில் ஈடுபட்ட 14 பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களது பிடியில் இருந்து 29 பேர் மீட்கப்பட்டனர்.
ஜீவன் ரக்சா என்கிற உயிர்காப்பு நடவடிக்கையில் கடந்த மாதம் 265 பயணிகளின் உயிரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர். ரெயில்கள் மோதவிருந்த கடைசி நேரத்தில் அவர்கள் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர்.
செங்கல்பட்டு:
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்வது வழக்கம். நேற்று காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கழிவறை பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர். அவர்கள் கையில் ஒரு கைப்பை இருந்தது. அதை போலீசார் வாங்கி சோதனை செய்தனர்.
அந்த பையில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த நபர்களிடம் கேட்டபோது அவற்றை தாங்கள் கடைகளுக்கு வியாபாரம் செய்ய எடுத்து செல்வதாக கூறினர். அவர்களிடம் தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அந்த நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 44) மற்றும் ராம்லால் (44) எனதெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ரெயில்வே போலீசார் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஆகஸ்டு வரையிலான ஓராண்டு காலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் , கரூர் உள்பட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையங்களில் விதி மீறிய குற்ற செயல்களுக்காக 5,317 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து விதி மீறலுக்காக ரூ. 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே பொருட்களை திருடியதாக 70 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 4.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.
சேலம் கோட்டம் வழியாக சென்ற ரெயில்களில் கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் முறைகேடு டிக்கெட் புக்கிங் தொடர்பாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதில் 68 போலி டிக்கெட் ஏஜெண்டுகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26.51 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
போலியாக பல ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகளை வைத்து கொண்டு பல்வேறு பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்றதாக ஓராண்டில் இந்த 68 பேரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.
- ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது.
- கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
கும்பகோணம்:
கும்பகோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது. இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில் பாதை அருகில் கால்நடைகளை மேய்க்ககூடாது.
அவ்வாறு மேய்க்கும் போது கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நின்று கொண்டிருக்கும் ரெயில் மற்றும் சென்று கொண்டிருக்கும் ரெயில்கள் முன்பு செல்பி எடுக்க கூடாது.
ரெயில் பாதைக்கு அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு கொளு த்துபவர்களை கண்ட றிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள்.
- தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர்.
கோவா- கர்நாடகா எல்லையில் உள்ள துத்சாகர் பகுதியில் மழைக்காலங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாவது வழக்கம். இதை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதோடு மலை ஏற்றத்திலும் ஈடுபடுவார்கள். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும் என்பதால் கோவா அரசு மலை ஏற்றத்திற்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள். துத்சாகர் ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்கள் நிற்காது என்பதால் சுற்றுலா பயணிகள் தெற்கு கோவாவில் உள்ள காலேல் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்தே துத்சாகருக்கு செல்வது வழக்கம். தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் அதனை மீறி தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.
இதை பார்த்த ரெயில்வே போலீசாரும், வனத்துறையினரும், தடையை மீறிய சுற்றுலா பயணிகளுக்கு நூதன தண்டனை கொடுத்த காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.
- ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.
- வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அமையாகரம் அருகே உள்ள ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சேலம் ெரயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயபால், தலைமை காவலர்கள் பால கிருஷ்ணன், விக்னேஷ், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் மோதி இறந்த வாலிபர் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபர் சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் ெரயிலில் அடிபட்டு இருக்கலாம் எனரெயில்வே போலீசார் தெரிவித்தனர். ரெயில் மோதி இறந்த வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார் எனவும், இடது மற்றும் வலது மார்பு அடியில் இரு பக்கமும் மச்சம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர்.
- இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் கடலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் (வயது 42). கூலித் தொழிலாளி என்பது தெரிவந்தது.
தொடர்ந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது. எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்து எங்களால் விசாரிக்க முடியாது. நெல்லிக்குப்பம் போலீசார்தான் விசாரிக்க வேண்டுமென கூறினர். அதன்படி, இறந்து கிடந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன வடிவேலு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவரை யாரேனும் கொலை செய்து ரெயில்வே பாதை அருகில் வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.
- அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
சென்னை-மைசூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, பெங்களூரு ரெயில் நிலையத்தில் நிற்கும். பின்னர் கடைசியாக மைசூர் சென்றடையும்.
இந்த ரெயில் நேற்று மாலை அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது மோதியது.
இதில் அந்த கன்றுக்குட்டி இறந்துபோனது. விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதியை என்ஜின் டிரைவர் சோதனை செய்தார். இதில் ரெயிலின் முன் பகுதி லேசாக சேதம் அடைந்து இருந்தது.
பின்னர் 2 நிமிடம் தாமதமாக வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஆனால் இறந்து போன கன்று குட்டியின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே கோட்ட அதிகாரி கூறும்போது, 'அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மோதியதில் கன்றுக்குட்டி இறந்து போனது. அந்த கன்று குட்டியின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.
தண்டவாளத்தில் கால்நடைகளை சுற்ற விட்டால். உரிமையாளர்கள் மீது ரெயில்வே சட்ட 1989-ன்படி 154-வது பிரிவின் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.
- திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.
- தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.
திருப்பூர் :
மாநிலங்களிலிருந்து திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவல்களின் அடிப்படையில் திருப்பூர் ரயில்வே சாப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, போலீஸ்கா ரர்கள் ராஜலிங்கம், சையது முகமது, கோபால் ஆகியோர் தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது பாத்ரூம் அருகில் ஒரு மூட்டை ஒன்று கிடந்தது அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் 12 கிலோ இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அதை யார் கடத்தி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
- ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை போலீசார் லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
கோவை,
கோவை மாநகரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நிலையத்திற்கு சென்னை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமின்றி கேரளா, பெங்களூர், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி ரெயில்கள் வந்து செல்கின்றன.ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல ரெயில்வே நிலைய குற்றப்பிரிவு ஏட்டு ரமேஷ், மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 3-ம் எண் நடை மேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த ரெயிலில் வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரெயில் மெதுவாக செல்வதை பார்த்ததும், ரெயில் மெதுவாக தானே செல்கிறது. இறங்கி விடுவோம் என நினைத்து இறங்குவதற்கு முற்பட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே இறங்கும் போது அந்த நபர் கால்தடுமாறி, நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்து விட்டார்.இதை அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களான ரமேஷ், மாரித்து, அருண்ஜித், மினி ஆகியோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சக பயணிகள் உதவியோடு ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சிவகுமார் என்பதும் , இவர் வேலை விஷயமாக கேரளாவுக்கு சென்று விட்டு, கோவைக்கு ரெயிலில் வந்ததும் தெரியவந்தது.ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது, தண்டவாளத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கிய நபரை தங்களது உயிரையும் துச்சமென மதித்து மீட்ட மீட்டு ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்