search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
    • ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,

    அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு

    பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.

    ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,

    மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.

    முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,

    வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,

    ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

    • இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
    • அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.

    சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ ெதாலைவில் இருக்கிறது கொள்ளிடம்.

    இத்தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள்.

    இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.

    இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.

    திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள்.

    அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்.

    பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.

    அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து பேசுகின்றன.

    தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.

    • ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
    • இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது

    வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது.

    தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது

    மேலும் முருகப் பெருமானின் இச்சா சக்தியான வள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தபுராணம் பேசுகிறது.

    திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.

    பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம்.

    குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து

    ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.

    • ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
    • இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்தது.

    தெய்வ முகூர்த்த நாளாகக் கருதப்படும் இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    மேலும் ஸ்ரீ ரங்கநாதனையே மணாளனாக தன் மனத்தில் வரித்துக்கொண்ட

    ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.

    இறைச் சித்தப்படி திருமாலைப் பிரிந்து பூலோகம் வந்த திருமகள் வஞ்சுளவல்லி நாச்சியாராய்

    அவதரித்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே என்று நாச்சியார் கோயில் தலப்புராணம் பேசுகிறது.

    எனவே சிறப்பு மிக்க இந்நாளில் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    • இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
    • இதன்மூலம் சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருநாள் பண்டைய காலந் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

    சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திரு நாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.

    எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு.

    இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.

    இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம்.

    இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.

    சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில்,

    தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவையாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.

    இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    • சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.
    • இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

    சிருஷ்டித் தொழிலுக்கு ஆக்கப்பூர்வ மாக உதவுபவன் காமன் ஆகிய மன்மதன்.

    இவனது மனைவி ரதி. ஒரு சமயம் மன்மதன் தேவர்கள் வேண்டுகோளின்படி தன் மனைவியைப் பிரிந்து வந்து தியானத்தில் இருந்த

    சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தம் நெற்றிக் கண் அக்னியால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

    இதையே காமதகனம் என்பர்.

    தன் கணவனின் மரணத்தை அறிந்து வருந்திய ரதி ஓடோடி வந்து சிவபெருமானை வேண்டி, மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.

    அவள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் படியாக காமனை உயிர்ப் பெற்று எழச்செய்தார்.

    இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

    அன்று மன்மதன் ரதியை வழிபடுவோருக்கு சிவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.
    • தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.

    தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.

    இத்திருநாளை தெய்வீகத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றி கொண்டாடுகிறது.

    பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான

    பங்குனி உத்திர திருநாளில் தான் அநேக தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன.

    இந்த புராண அடிப்படையிலேயே பங்குனி மாதத்தில் சைவத் திருத்தலங்களோடு, வைணவ ஆலயங்களிலும்

    திருக்கல்யாண உற்சவ மாத பங்குனி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

    இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.

    • பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது.
    • பிரம்மாவிற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.

    பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.

    ஆனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திர நாளில் சிவனும், அம்பிகையும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது.

    பங்குனி உத்திர நாளன்று காவிரி ஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும்,

    அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

    விழாநாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள்.

    வேறு சிலர் தீ மிதிக்கிறார்கள்.

    இந்த ஊரில் பல ஜாதி, மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதால்

    இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் வருகிறார்கள்.

    முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக்களுக்கு வருவது உண்டு!

    முன்னொரு காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இந்த தலத்திற்கு வந்து அக்னி கடவுளையும், சவுந்தர நாயகியையும் வணங்கினார்கள்.

    அப்பொழுது அக்னி தேவன் தொட்ட பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டு நாசமானது அந்தப் பழியிலிருந்து விடுபட வழி இல்லையா என்று அக்னிதேவன் வேண்டினான்.

    உடனே சிவபெருமான், அக்னி தேவன் முன் தோன்றி இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு!

    அந்தக் குளத்து நீரைக்கொண்டு வந்து எனக்கு அபிஷேகம் செய்து என்னை வழிபட்டால் உனக்கு அந்த பழிதீரும்.

    அதில் நீராடும் மக்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்று அருளினார்.

    அப்படிப்பட்ட அக்னி தேவனால் உண்டாக்கப்பட்ட மகிமை பெற்ற குளம் கொண்ட தலம் திருக்காட்டுப்பள்ளி.

    இங்கு திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்து சன்னதியின் முன் அமர்ந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.

    அவர்களின் பக்திப் பாடல்கள் பிரகாரச் சுவர்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.

    இந்தத் திருத்தலத்தில் இறைவனுக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது.

    அவர் இங்கு வந்து தனக்கும் மும்மூர்த்திகளில் ஒருவர் என்னும் அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே அப்படியே சிவன் கூற அவருக்கு தனி இடம் தந்து தங்க அனுமதித்தார்.

    பிரம்மாவிற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.

    • தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
    • அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    இத்தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.

    அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    ஒரு சமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.

    அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.

    சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

    அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

    திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காணதான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.

    ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளா விட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள்.

    ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

    தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டார்.

    தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அது பெரியமலையாக உருவெடுத்தது.

    அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.

    இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

    நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.

    ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.

    இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

    சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக்கோவில் இருக்கிறது.

    18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.

    பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.

    அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று ஒரு நாள் மட்டுமே இங்கு சுவாமி தாயார் இவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

    • நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.
    • இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

    நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

    தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும்.

    இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை இன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல்

    நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

    கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் நாம் அமைகின்றோம்.

    லாபம் பெருகும், நிம்மதி தொடரும். உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன்

    சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா?
    • வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர்.

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது,

    தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது,

    வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.

    அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது.

    ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

    அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா? இல்லை.

    இதற்கு அருமையான விளக்கத்தை பகவான் கீதையில் சொல்கிறார்.

    யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன்.

    செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள்.

    அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

    உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார்.

    வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர்.

    இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள்.

    எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

    • வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம் மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
    • தேவியின் திருக்கரம் பற்றி அழைத்து வர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார்.

    தேவியின் திருக்கரம் பற்றி அழைத்து வர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார்.

    தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன.

    சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார்.

    இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார்.

    திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார்.

    அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் "தானம் கொடுக்காதே" என்று கூறுகிறார்.

    வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, "நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்" என்று கூறி கெண்டியிலிருந்து

    நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.

    வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார்.

    அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.

    தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது.

    பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு திருமால் "இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள்.

    அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

    நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்" என்று கூறினார்.

    பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார்.

    இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

    வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான்,

    முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார்.

    "உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது" எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க

    அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

    ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

    இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள்.

    சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு.

    எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி 'வெள்ளீசுவரர்' என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம்.

    அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு.

    அதையொட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் 'பார்கவேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் "மீண்டும் தவம் செய்வாய்.

    காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்" என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார்.

    சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார்.

    மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார்.

    இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து,

    வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள்.

    வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம் மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

    ×