search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • வீண் சண்டை, சச்சரவுகள் நேராமல்,பஞ்சமும், நோயும் அண்டாமல் ஊரைக் காப்பவர் இவர்
    • கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.

    வாஸ்து பிரச்சினைகளை தீர்க்கும் வெள்ளித் திருப்பூர் பளிங்கீஸ்வரர்

    வெள்ளித் திருப்பூர் ஸ்ரீபளிங்கீஸ்வரரர் கோவில் சுமார் ஆயிரத்து இரு நூறு ஆண்டுபழமை மிக்கது.

    பளிங்கீஸ்வரரின் கோவிலுக்கு செல்லும் வழியில் முனியப்பன் சன்னதி மிகக் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றது.

    வீண் சண்டை, சச்சரவுகள் நேராமல்,பஞ்சமும், நோயும் அண்டாமல் ஊரைக் காப்பவர் இவர் என்கிறார்கள்.

    பளிங்கீஸ்வரர் கோவிலுக்கோ, செல்லியாண்டியம்மன் ஆலயத்திற்கோ செல்வதற்கு முன், முத்து முனியப்பரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பது தொன்று தொட்டு வழக்கமாக உள்ளது.

    பளிங்கீஸ்வரரின் சுற்றுப்பிரகாரம் மிகப் பெரியது பிராகார வெளிச்சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    கி.பி. 1265 ல் "கூனப்ப பாண்டியன்" என்ற மன்னன் இந்த கோவிலை மேம்படுத்தியதை விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர், லட்சுமி, குபேரர் மூலம் அறிய முடிகிறது.

    அலங்காரம் பளிங்கீஸ்வரர் கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.

    பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து வந்து இறைவன் இறைவியை வணங்கிவிட்டு இந்தத் திருக்கோவிலிலேயே நிச்சயத்தை நடத்துகின்றனர்.

    வாஸ்து தோஷம் காரணமாக இல்லத்தில் ஏற்படும் பிரச்சினைகள், திருமணத் தடைகள் விலகவும் பளிங்கீஸ்வரரின் சன்னதியில் அர்ச்சனை செய்து பிரார்த்திக்கிறார்கள்.

    • மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இங்கு வந்தனர்.
    • இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மனைவியை விரட்டினால் தண்டனை தரும் லால்குடி சப்தரிஷிஸ்வரர்

    திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி.

    இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள்.

    மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர்பக்கம் வந்தார்கள்.

    அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

    அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில்," அது என்ன லால் (சிகப்பு) குடி (கோபுரம்)?.." என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.

    இந்த கோவிலில் மிகப்பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி.

    சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.

    இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய்.

    எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.

    இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப்படுகின்றன.

    தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.

    சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.

    அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார்.

    அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.

    அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.

    ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர்.

    பால குமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.

    குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.

    ரிஷிபத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள்.

    வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.

    சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே.

    அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.

    முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார்.

    தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.

    அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார்.

    நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர்., பலன் கிடைக்கவில்லை.

    பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.

    கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர்.

    இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.

    • விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.
    • இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அருகம்புல்லும் விநாயகரும்!

    விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.

    நோய் தீர்க்கும் மூலிகைகளின் முன்னோடியாக விளங்குவது அறுகம்புல் திகழ்கிறது.

    மன ஒருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உடலைப் பேணவும் நடமாடும் தெய்வமாகத் திகழ்வது தெய்வீக மூலிகைகளேயாகும்.

    அவ்வகையில் அறுகம்புல் மகிமை மிக உன்னதமானது.

    விநாயகருக்கு உண்டான அதீதப் பசிநோய்க்கும் அறுகம்புல்லே உணவாக தரப்பட்டு நிவர்த்திக்கப்பட்டதாக விநாயகப் புராணம் கூறுகிறது.

    விநாயகப் பெருமான் ஒரு தடவை தேவர்களை காக்கும் பொருட்டு கொடியவனாகிய அனலாசுரனை விழுங்கி விட்டார்.

    இதன் காரணமாக அனலாசுரனின் கடும் வெப்பம் விநாயகரை தாக்கியது.

    இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது.

    அனலைத் தணிக்க தேவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்.

    ஆனால் என்ன செய்தும் பலனில்லை.

    அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புற்களை விநாயகருக்கு சாத்தினர்.

    உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது.

    அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது.

    அன்று முதல் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் விநாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது.

    ஆரோக்கியம் பெற, உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் ஜூஸ் பருகலாம்.

    • வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள்.
    • வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும்.

    வெற்றி தரும் வன்னி மரம்

    வாகை மரமும், வன்னிமரமும் துர்கையுடன் தொடர்புடைய மரங்கள்.

    இவற்றுள் வன்னிமரம் மிகவும் விசேஷமான ஒரு மரம்.

    இந்த மரம் உள்ள இடத்தின் அருகில் இன்னொரு மரம் இயற்கையாய் தோன்றுவதும் இல்லை.

    பயிரிடுவதும் மிகவும் கடினம்.

    வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள்.

    ஜெயதுர்கா கோயில் கொண்டிருக்கும் இடம் அது.

    மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது தமது ஆயுதங்களை, வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    உமாதேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும், புராணங்கள் உண்டு.

    விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில், வன்னிமரம் அக்னி சொரூபம் ஆகும்.

    வன்னிமர இலை விநாயகருக்கும் சனி பகவானுக்கும் விருப்பத்துக்குரிய இலையாகும்.

    விஜயதசமியின்போது, துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னிமரத்தடியில் நடக்கும்.

    வன்னி, வெற்றியைத் தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விசேஷம்.

    வன்னிமரம் புகழ்பெற்ற சில சிவாலயங்களில் தலவிருட்சமாக இருக்கிறது.

    இந்த மரத்தை வணங்கி வழிபட்டால், பரீட்சையில், வழக்குகளில் வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம் என்பது நிச்சயம்.

    • ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
    • இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    திருப்பதி பிரசாதம்!

    திருமலை வாசனுக்கு படைக்கும் பிரசாதங்கள் தாய் வகுளாதேவி முன்னிலையில் தயாரிக்கப்படுகிறது.

    இதற்காக மடப்பள்ளி முன்பு தாய் வகுளாதேவி சிலை உள்ளது.

    இங்கு ஏழுமலையானுக்கு பிடித்த லட்டு பிரசாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்தரன்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரி பருப்பு கேசரி ஆகியவை பெருமளவு தயார் செய்யப்படுகிறது.

    ஆனால் ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் மண்சட்டியில் வைத்து படைக்கப்படுகிறது.

    இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைத்தால் அது அவன் செய்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

    • மூலவர் “சிலா தோரணம்” என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.
    • ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை அதிசயம்

    ஆஜானுபாகுவாய் சுமார் 9 அடிக்கு மேல் உயர்ந்து கமலபீடத்தின் மீது எழுந்து நிற்கும் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

    மற்ற நாட்களில் எல்லாம் பச்சை கற்பூரம், புனுகுதைலம், வாசனை திரவியங்கள் சாத்தப்பட்டு தங்க, வைர, வைடூரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

    மூலவர் "சிலா தோரணம்" என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.

    மூலவருக்கு தினமும் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. இது அரிப்பை ஏற்படுத்தும் ஒருவகை அமிலம்.

    இதனை சாதாரண கருங்கல்லில் தடவினால் அது வெடித்துவிடும்.

    ஆனால் 365 நாளும் பச்சை கற்பூரம் சாத்தப்படும் ஏழுமலையான் மூலவர் சிலை வெடிப்பேதும் இல்லாமல் உள்ளது அதிசயமாக கருதப்படுகிறது.

    ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

    அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு வியர்க்கும்.

    இதனால் பீதாம்பரத்தால் வியர்வையை வேதபண்டிதர்கள் ஒற்றி எடுக்கிறார்கள்.

    • ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.
    • அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்கும் முறை!

    ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.

    அதற்கு ஒரு மரபு உண்டு.

    முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை சேவிக்க வேண்டும்.

    ஏன் முதலில் கோவிந்தராஜனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இவர் வேங்கடவனின் அண்ணன்.

    சிதம்பரம் கோவிலில் திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளி உள்ள கோவிந்தராஜனே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது.

    தில்லை கோவிந்தராஜன் இந்த பகுதிக்கு வந்ததாகவும், திருப்பதியின் எழிலில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கி விட்டதாகவும், அவருக்காக இங்கு கோவில் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வேங்கடவன் கோவில் கொள்வதற்கு முன்பே இவர் இங்கே எழுந்தருளியதால் இவரை ஏழுமலையானின் அண்ணன் என்கிறார்கள்.

    முதலில் இவரை தரிசித்து விட்டு பின்னர் அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    இவரை தரிசித்து திருமலை ஏற அனுமதி பெற வேண்டும்.

    திருமலையில் வராக தீர்த்தகரையில் உள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னரே திருவேங்கடனை தரிசிக்க செல்ல வேண்டும்.

    • “வேங்”என்றால் பாவம்., “கடா” என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள்.
    • அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    திருப்பதி திருமலை!

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 ஆலயங்களையும் "திருப்பதி" என்றுதான் அழைக்கின்றனர்.

    ஆனால் ஊரை சொல்லாமல் திருப்பதி என்று சொன்ன மாத்திரத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய தலம் வேங்கடவன் கோவில் கொண்டுள்ள திருப்பதிதான்.

    "வேங்"என்றால் பாவம்., "கடா" என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள். அதனால்தான் வேங்கடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    கலியுக கடவுளாக பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் இஷ்ட தெய்வமாக திகழும் வேங்கடேஸ்வரரை பக்தர்கள் திருமலைவாசா, ஸ்ரீனிவாசா, ஏழுமலையான், ஏழுகொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா, மலையப்பான் என்று பலவாறு உள்ளம் உருகி அழைத்து வழிபடுகிறார்கள்.

    அவரது பெயரை போல திருமலைக்கும் ஏழு பெயர்கள் உண்டு.

    ஆதிசேஷன் உருவத்தை ஒத்திருப்பதால் சேஷாசலம்.

    வேதங்கள் நிலை கொண்டு இருப்பதால் வேதாசலம்.

    கருடனால் பூலோகத்தை அடைந்த காரணத்தினால் கருடாசலம்.

    விருஷன் எனும் அரக்கன் மரணம் அடைந்து மோட்சம் பெற்றதால் விருஷபாத்திரி.

    அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் உண்டான சண்டையால் ஆனந்தகிரி.

    பாவங்கள் தீர்க்கும் காரணத்தினால் வேங்கடாசலம் என அழைக்கப்படுகிறது.

    • சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
    • மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்

    சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.

    அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

    மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

    ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

    சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.

    கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

    இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

    இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!

    இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

    இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

    • வெற்றி தரும் வெற்றிலை மாலை
    • ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    வெற்றி தரும் வெற்றிலை மாலை

    வெற்றியை யார்தான் விரும்பமாட்டார்கள், ஆனால் வெற்றி தேவதையின் அருள்பார்வை நம்மீது பட வேண்டுமானால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், உரிய வழிபாடு மிக, மிக அவசியமாகும்.

    அந்த வகையில் ஆஞ்சநேயருக்கும், வீரபத்திரருக்கும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பாக அனுமானுக்கு வெற்றிலை மாலை விசேஷமானது.

    அதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களை சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    தனது துன்பத்தைப் போக்கிய ஆஞ்சநேயருக்கு, விக்ராந்தன் (பராக்ரமம் உடையவன்), சமர்த்தன் (திறமையாகச் செய்து முடிப்பவர்), ப்ராக்ஞன் (அறிவாளி), வானரோத்தமன் (வானரர்களில் சிறந்தவன்) என்று நான்கு விருதுகளை வழங்கி கவுரவித்தாள்.

    அத்துடன்,பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகக் கட்டி அனுமனுக்கு போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது..

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒருபாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்றுபாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    இதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் நாம் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாகும்.

    அது போல வீரபத்திரரின் அருளைப் பெறவும் வெற்றிலை மாலை வழிபாடே சிறந்தது.

    சென்னைக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் வீரபத்திரர் ஆலயத்தில் வெற்றிலை மாலை வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    • வீரபத்திரர் துடிப்பான தெய்வம்.
    • இப்பூஜை முறை பல தலைமுறைகளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.

    வீரபத்திரருக்கான வாய்க்கட்டு பூஜை

    வீரபத்திரரை வழிபடுவோர் அனைவரும் வழிபாட்டு நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளைப்பின்பற்றுகின்றனர்.

    அதில் ஒன்று வாய்க்கட்டுப் பூஜையாகும்.

    முகம், தலைமுடி, மூக்கு வாய்ப்பகுதி என அனைத்தையும் இறுக்கமாக மூடிக்கொண்டு கண்கள் மட்டுமே தெரியும் வகையில் முகமூடி அணிவது போல் வெள்ளை நிறத்துணி கொண்டு கட்டி பூஜை செய்வதே வாய்க்கட்டுப் பூஜை ஆகும்.

    வீரபத்திரருக்கு பூஜை செய்யும்போது மூச்சுக்காற்றோ, எச்சிலோ பட்டுவிடக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

    வீரபத்திரர் துடிப்பான தெய்வம். சுத்தமான தெய்வம் வீரமுடைய தெய்வம் என்பதால் எவ்வகையிலும் எச்சில் படகூடாது இதை கருத்தில் கொண்டு இத்தகு வாய்க்கட்டு பூஜை செய்கின்றனர்.

    வாய்க்கட்டிச் செய்யாத பூஜையை வீரபத்திரர் ஏற்றுக் கொள்வதில்லை என்று பலரும் நம்புகின்றனர்.

    மம்சாவரம் ஆகாச கருப்பண்ணசுவாமி கோவிலில் வீரபத்திரருக்கு வாய்க்கட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.

    இப்பூஜை முறை பல தலைமுறைகளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.

    திருக்குளம்பூர் கருப்பண்ணசுவாமி கோவிலில் உள்ள வீரப்பத்திரருக்கு நாள்தோறும் வாய்க்கட்டுப்பூஜை செய்கின்ற னர்.

    திருக்குளம்பூர் ரணவீரபத்திரர் கோவில் உள்ள வீரபத்திரருக்கு மகாசிவராத்திரியன்று மட்டும் வாய்க் கட்டுப்பூஜை செய்கின்றனர்.

    • இதுவே “வீரபத்திரர் உபாசகர்” என்ற தனித் தகுதியைக் காட்டும் அடையாளமாகும்.
    • வீரபத்திரர் சுத்தத்தை விரும்பும் தெய்வம் ஆவார்.

    வீரபத்திரருக்கு சந்தனம் அரைக்கும் முறை

    வீரபத்திரர் சுத்தத்தை விரும்பும் தெய்வம் ஆவார். எனவே அவருக்கு மூச்சுக்காற்று கூடப் படாத அளவிற்கு மிகத் தூய்மையுடன் சந்தனம் அரைக்க வேண்டும்.

    மிகக்கெட்டியாக அரைத்த சந்தனக் குழம்பினை வலது கையின் நடுவிரலால் எடுத்து வெள்ளிக் கிண்ணத்தில் சேமிக்க வேண்டும்.

    அதனை 108, 1008 என்ற எண்ணிக்கையில் சிறுசிறு உருண்டைகளாக உருவாக்க வேண்டும்.

    சந்தனத்தை அரைக்கும்போதும், உருண்டைகள் ஆக்கும்போதும் மூச்சினை இழுத்துப் பிடித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அரைத்த சந்தன உருண்டைகளால் உடல் சுத்தி, கர சுத்தி, தியானம், மூலம் பூரண மந்திரங்களை கூறி அர்ச்சிக்க வேண்டும்.

    வீரபத்திரருக்குரிய யந்திரத்தின் முன்பாக சந்தன மரப்பெட்டி வைத்து, மந்திரம் கூறி, 108 சந்தன உருண்டைகளை அர்ச்சித்து முடிந்தவுடன் அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

    இங்ஙனம் 1008 கிண்ணங்களில், பூசித்த சந்தன உருண்டைகளைச் சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வகையில் மூன்று லட்சம் சந்தன உருண்டைகளை மந்திர உருவேற்றி, ஓதி முடித்தவுடன் அவற்றை சந்தன மரப்பெட்டியில் மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

    ஸ்ரீவீரபத்திரரை உபாசிப்போர் எக்காரணம் கொண்டும் தங்களது தனிப்பட்ட பணிகளுக்காகவோ வேண்டுதல்களுக்காகவோ மேற்படி சந்தன உருண்டைகளைப் பயன்படுத்துதல் கூடாது.

    சந்தன உருண்டைகளை அரைக்கும் பொழுதோ பூஜிக்கும் பொழுதோ எத்தகைய தனிப்பட்ட வேண்டுதல்களோ, சுயநல எண்ணங்களோ, விருப்பு வெறுப்புகளோ இல்லாமல் தூய்மையான மனதுடன் பக்தியுடன் செயல்படுதல் வேண்டும்.

    இப்படி மூன்று லட்சம் சந்தன உருண்டைகளால் பூஜை செய்தவர் தன் வலக்கர மணிக்கட்டில் கறுப்புக் கயிற்றினை அணிய வேண்டும்.

    இதுவே "வீரபத்திரர் உபாசகர்" என்ற தனித் தகுதியைக் காட்டும் அடையாளமாகும்.

    இப்படி பூஜை செய்தோர் மட்டுமே வீரபத்திரருக்குத் திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, ஆரத்தி எடுக்கத் தகுதியானவர்கள்.

    பிறர் இவற்றைச் செய்தல் கூடாது.

    இந்த தகவல்களை வீரபத்திரர் மகிமை என்ற நூலில் அருணாசல சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகள் குறிப் பிட்டுள்ளார்.

    ×