search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 276412"

    • 5-ந்தேதி தைப்பூசம் நடைபெறுகிறது.
    • காவடி சுமந்து ‘அரோகரா’ கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி தைப்பூசம் நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் வழியாக, பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, காரைக்குடி, கண்டமனூர், நெற்குப்பை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த நகரத்தார் குழுவினர் மயில்காவடி எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 26-ந்தேதி பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    தேவகோட்டை நகரத்தார் பள்ளிக்கூடத்தில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து பாதயாத்திரையை தொடங்கிய 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர். நத்தம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்த இந்த குழுவினர் அங்கு பூஜை நடத்தினர். அதன்பிறகு பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக மயில்காவடியுடன் மேளதாளம் முழங்க பழனி நோக்கி புறப்பட்டு சென்றனர்.

    அப்போது, முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைரவேல் கொண்டு செல்லப்பட்டது. அந்த வேலை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சை பழம், வண்ணமலர்களை படைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து முருகப்பெருமானின் புகழை போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் மயில்காவடியை சுமந்து சென்றனர்.

    இதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, கொட்டாம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியாக பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சென்றனர்.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஜெயங்கொண்டான் நாட்டார்கள் மயில் காவடி சுமந்து 'அரோகரா' கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறுவர்-சிறுமியரும் ஆர்வமுடன் நடந்து சென்றனர்.

    நடந்து செல்ல முடியாத சிறுவர்-சிறுமிகளை பெற்றோர்கள் சுமந்தபடியும், கோவிலில் நேர்த்திகடனாக செலுத்துவற்காக வேல் மற்றும் சேவல்களை கையில் ஏந்தியபடியும் நடந்து சென்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் டீ, பால், இளநீர், பழங்கள் மற்றும் இரவு உணவும் வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படாதால், பெண் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே வழிநெடுகிலும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 291 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இந்த காவடிகள் கடந்த 29-ந்தேதி குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு சிங்கம்புணரி வந்தடைந்தது.

    நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாதயாத்திரையாக சென்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறார்கள். அதன்பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.

    பிப்ரவரி 4-ந் தேதி தைப்பூச தினத்தன்று பழனி சென்றடைந்து அதன் பின் 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்

    சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவிலில் நேற்று காலை மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. சிங்கம்புணரியில் வணிகர்கள் சார்பில் நகரத்தார்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    • இன்று முதல் 3-ந்தேதி வரை திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 7-ந்தேதி திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.

    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.

    அதன் முன் 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, நீலம், சிவப்பு என 7 வண்ணங்களிலான திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம்.

    சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தை மாசம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 152-ம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுடன் தொடங்கியது. விழாவில் வருகிற இன்று முதல் 3-ந்தேதி வரை ஞானசபையில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 4-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரிவித்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து 10 மணி அளவில் சத்திய ஞானசபையில் பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் தருமச்சாலை மேடையில் திருஅருட்பாஇசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள்(திங்கட்கிழமை) காலை 5 மணி ஆகிய 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் 7-ந்தேதி மதியம் 12 மணிக்கு திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.

    தரிசன விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய ஆணையர், கூடுதல் ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி சத்திய ஞான சபை திடலை சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • இந்த ஆண்டுக்கான தைப்பூசவிழா 4-ந்தேதி நடக்கிறது.
    • 4-ந்தேதி 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

    முருகனின் 7-ம் படை வீடாக போற்றப்படும் திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    இதையொட்டி பக்தர்கள் முருகனுக்கு பால்குடம், தீர்த்தகுடம், காவடி மற்றும் அலகு குதி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 மணி அளவில் முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் உய்யகொண்டான் ஆற்றுக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதன் பிறகு அங்குள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    அன்று 8.30 மணியளவில் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக சோமரசம்பேட்டை அருகே உள்ள வரகந்திடலுக்கு 10 மணிக்கு சென்றடைகிறார். அங்கு மண்டகபடியை ஏற்றுகொண்டு இரவு 11 மணியளவில் கீழவயலூர் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிகிறார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடகாபுத்தூர் வந்தடையும் முருகன் அங்கு இரவு தங்குகிறார்.

    பின்னர் 5-ந்தேதி காலை 8.30 மணி அளவில் வடக்காபுத்தூரில் இருந்து புறப்படுகிறார். வழிநெடுக்கிலும் பக்தர்களுக்கு அருள்பலிக்கின்றார், காலை 10.30 மணியளவில் சோமரசம்பேட்டை வந்தடையும் முருகன் அங்கு சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உய்யகொண்டான் திருமலை உஜ்ஜிவநாதர், அல்லித்துறை பார்வதி ஈஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் ஆகிய தெய்வங்களை சந்திக்கிறார்.

    அதன்பிறகு முருகன் சோமரசம்பேட்டை நான்கு வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதேபோல் அனைத்து சாமிகளும் இரவு 7 மணி வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன் பின்னர் அனைத்து சாமிகளும் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சோமரசம்பேட்டையில் இருந்து புறப்படும் முருகன் அல்லித்துறை மற்றும் அதவத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து அன்று இரவு அதவத்தூரில் தங்குகிறார்.

    மறுநாள் 6-ந் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வந்தடைகிறார். விழாவையொட்டி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் மேற்பார்வையில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று தைகிருத்திகையையொட்டி வயலூர் முருகன் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.

    • 10-ந்தேதி தெப்ப உற்சவம், பரிவேட்டை நடக்கிறது.
    • 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    காங்கயம் அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழா கடந்த 27-ந் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது.

    11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர். பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி மற்றும் திருக்கோவிலில் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி நடைபெற இருக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4-மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது.

    வருகிற 6, 7 தேதிகளில் மலையை வலம் வரும் தேர் 7-ந் தேதி நிலையை வந்தடைகிறது. 10-ந் தேதி தெப்ப உற்சவம், பரிவேட்டை நடைபெறுகிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. 12-ந் தேதி பகல் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 14-ந் தேதி இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது.
    • திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள்.

    பாரம்பரியமிக்க நகரத்தார்கள் ஒன்றிணைந்து வருடம் தோறும் தைப்பூச திருவிழாவிற்கு பழனிக்கு காவடி தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். பாரம்பரியமிக்க நகரத்தார்கள் காவடி கண்டனூர், அரண்மனை பொங்கல், நெற்குப்பை ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்ட காவடிகள் குன்றக்குடி மையப் பகுதியாக வைத்து அங்கிருந்து புறப்பட்டு அரோகரா கோஷத்துடன் பழனி நோக்கி சென்றனா்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்த நகரத்தார்கள் காவடியுடன் பாதை யாத்திரையாக திருப்பத்தூர் சாலை வழியாக சிங்கம்புணரி நோக்கி வந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை சிங்கம்புணரி நகருக்கு வருகை தந்த காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு வந்தடைந்தன.

    நகரத்தார்கள் காவடிகள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 130 காவடிகளை சேர்த்து இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது. திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள். சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் பக்தர்கள் சூழ்ந்து நின்று காவடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து பக்தி பரவசத்துடன் அன்னதானம் வழங்கினா்.

    நகரத்தார்கள் குன்றக்குடி, சிங்கம்புணரி, மனப்பச்சேரி, நத்தம், திண்டுக்கல் பகுதி வழியாக வருகிற தைப்பூச தினத்தன்று பழனி சென்று அடைவார்கள். தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தை மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடும், இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி வடமதுரை, பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதிகளில் ஆடி வந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டுவண்டிகளில் நேற்று பழனிக்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பாதயாத்திரை வருவது போல் நாங்கள் பல தலைமுறைகளாக மாட்டு வண்டிகளில் பழனிக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறோம். அதன்படி பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி நேற்று பழனி சண்முகநதிக்கு வந்தோம். அங்கு புனித நீராடிவிட்டு பழனிக்கு வந்து சேர்ந்தோம். பழனியில் சாமி தரிசனம் முடித்த பிறகு மீண்டும் மாட்டுவண்டியில் செல்வோம் என்றனர்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி பரிவேட்டை நடைபெறும்.

    ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந்தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சாமி திருவிதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.வருகிற 3-ந்தேதி வரை காலை மற்றும் மாலையில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

    நாளை (புதன்கிழமை) மாலை சாமி மயில்வாகன காட்சி உலா நடைபெறும். 4-ந்தேதி காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறும். 5-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6:30 மணிக்கு சாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலையை அடைதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    6-ந்தேதி பரிவேட்டை நடைபெறும்.7-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா காட்சி நடைபெறும். 8-ந்தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.9-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    • 6-ந்தேதி பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
    • 7-ந்தேதி சாமி திருவீதி உலா நடக்கிறது.

    பொங்கலூர் அருகே அலகுமலையில் முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூச தேரோட்டம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி செய்யப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை தினசரி உபயதாரர்கள் சார்பாக சாமிதிருவீதி உலா நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் சாமி திருத்தேர் ஏற்றமும், மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் வினீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன்,ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், அலகுமலை ஊராட்சித் தலைவர் தூயமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து 6-ந் தேதி மாலை பரிவேட்டையும், 7-ந் தேதி சாமி திருவீதி உலாவும், 8-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் கே.பி.சின்னு கவுண்டர் தலைமையில் செய்து வருகிறார்கள்.

    • சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
    • சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 5-ந் தேதி தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசம், பவுர்ணமியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும் பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதுபோல், சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகிற 5-ந் தேதி தைப்பூசம், பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலை, கபிலர்மலை, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள் 4-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளது என்றனர்.

    • 4-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது.
    • 5-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், தெப்பத் திருவிழாவும் நடக்கிறது

    கோவை மருதமலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச தேர்த்திருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி கோ பூஜை செய்யப்பட்டு அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் முன் மண்படத்தில் கற்பக தங்க விருட்சக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து யாகங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    காலை 6.45 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கோவில் முன்புறம் உள்ள கொடி மரத்தில் தைப்பூச தேர்த்திருவிழாவுக்கான சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முகூர்த்தக்காலும் நடப்பட்டது.

    கொடியேற்றத்தை காண்பதற்காக கோவை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்ற நிகழ்வின் போது அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அனந்தசாசனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 6 மணிக்கு யாக சாலை பூஜையும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

    சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    5-ந்தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு7.30 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது., 6-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப் பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது.
    • தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும்.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர்.

    பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    தைப்பூச திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாலில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும், மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    பிப்ரவரி 5ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவு சாமி வீதிஉலாவும் நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதி தெப்பத்தேர் உற்வசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடை படாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்ப்பட்டது. அதன்படி 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விப்படி அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    தைப்பூசத்தையெட்டி பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×