search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம்"

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • சென்னை-கொல்லம் அனந்தபுரி ரெயில் கடந்த 20-ந் தேதி முதல் நாகர்கோவில் டவுண் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில், எர்ணாகுளத்தில் உள்ளது போன்று நாகர் கோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுண் என 2 ரெயில் நிலையம் இருப்பதே குமரி மாவட்ட பயணிகளுக்கு தெரியாமல் இருந்து வந்தது.

    இதில் 2-வது நிலைய மான நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் தற்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறது. இதற்கு காரணம் சென்னை-கொல்லம் அனந்தபுரி ரெயில் கடந்த 20-ந் தேதி முதல் நாகர் கோவில் சந்திப்பு, அதாவது கோட்டார் ரெயில் நிலையம் செல்லாமல் நாகர்கோவில் டவுண் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருவதே ஆகும்.

    நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயங்கும் ரெயில்கள், தற்போது புதிய பிரச்சினை யாக இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தற்போது நாகர்கோவில் டவுண் நிலையத்துக்கு அருகில் கிராசிங் நிலையமாக 19 கி.மீ தாண்டி இரணியல் ரெயில் நிலையம், மறுமார்க்கமாக கிராசிங் நிலையமாக 16 கி.மீ தொலைவில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் உள்ளது.

    இந்த 2 ரெயில் நிலையங்களுக்கு இடையே அதிக கி.மீ தூரம் உள்ளது. சுமார் 30 கி.மீ கிராசிங் வசதி இல்லாமல் உள்ள ஒரு வழி பாதை இது ஆகும்.

    இதனால் ஆரல்வாய்மொழியில் இருந்து அனந்தபுரி ரெயில் புறப்பட்டு விட்டால் நாகர்கோவில் டவுண் வந்து இரணியல் செல்லும் வரை வேறு எந்த ரெயிலையும், சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த மார்க்கத்தில் இயக்க முடியாது.

    இந்த காரணத்தினால் நாகர்கோவில் சந்திப்பு,இரணியல், குழித்துறை, பாற சாலை ரெயில் நிலையங்களில் ரெயில்கள் அதிக நேரம் கிராசிங்கிற்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் சென்னைக்கு போகும் போது நாகர்கோவில் டவுண் வழியாக வரும் போது இந்த பிரச்சினைக்காக கிராசிங் ஆக வேண்டி நாகர்கோவில் சந்திப்பு வழியாகவும் இயக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற கன்னியாகுமரி -திருவனந்தபுரம் மின்மய மாக்கும் திட்டத்தின் கீழ் உட்படுத்தி செயல் படுத்துவது என்று திட்டம் தீட்டப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு திட்ட ஒப்பு தல் பெறப்பட்டது.

    ஆனால் 2012-ம் ஆண்டு கன்னியாகுமரி-– திருவனந்தபுரம் வழித்தடம் மின் மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சி யும் எடுக்கவில்லை.

    நடைமேடை உயரத்தை அதிகரித்தல், நடைமேடை மேற்கூரை அமைத்தல் என ஒரு சில பணிகளை செய்து முடித்தது. பின்னர் பழைய இருப்பு பாதை தொழில்நுட்ப குறைபாடு இருக்கின்ற காரணத்தால் புதிய பாதையை அமைத்து விட்டு அதில் ரெயில்களை இயக்கி விட்டு பழைய இருப்பு பாதையை அகற்றி யது.

    ஆனால் இன்றுவரை பழைய பாதையில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டை சரி செய்து அமைக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்காததால் கிராசிங் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு கிராசிங் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கப்படும் ெரயில்கள் 30 கி.மீ தூரத்துக்கு கிராசிங் இல்லாத காரணத்தால் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் நிலை உள்ளது.

    ஆகவே நாகர்கோவில் டவுண் கிராசிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் அமைக்கப்பட இருக்கிறது. ஆனால் குமரி மாவட்ட பயணிகள் சங்கத்தின் சார்பாக கூடுதலாக 2 நடை மேடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் டவுண் ரெயில் நிலைய கிராசிங் பணிகள் நிறைவு பெற்று விட்டால் இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு கால அட்டவணையில் பெரிய மாற்றங்கள் எதிர் பார்க்கலாம்.

    இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியும் வெகுவாக குறையும். இவ்வாறு குறையும் போது நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரம் மூன்று நாள் செல்லும் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடியும்.

    குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு பல்வேறு அலுவல் பணி கள் நிமித்தம் செல்ல தற்போது போதிய ரெயில் சேவை உள்ளது. ஆனால் திருநெல்வேலிக்கு தினசரி அலுவல் நிமித்தம் செல்ல போதிய பயணிகள் ரயில் சேவை இல்லை.

    இதற்காக திருவனந்த புரத்திலிருந்து காலை 6.50 மணிக்கு நாகர்கோவில் நோக்கி புறப்படும் பயணிகள் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயிலை நீட்டிப்பு செய்ய வேண்டுமானால் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றம் செய்தால் மட்டுமே முடியும். ஆகவே நாகர்கோவில் டவுண் ரெயில் நிலைய கிராசிங் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×