search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்புக் கோவில்"

    மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவில் ஆகும்.
    மலேசியாவில் அமைந்திருக்கும் முருகர் கோவில், முருகர் சிலையால் மட்டுமல்ல அதன் புகழ்- பெருமைகளாலும் உயர்ந்து நிற்கிறது. மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பழமையான கோவில் மட்டுமல்ல... பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவிலும் கூட.

    பினாங்கு தீவில், சன்கை குளாங் பகுதியில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில், 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சூர் சோ காங் என்ற மன்னரின் நினைவாக இந்தக் கோவிலை கட்டியிருக்கிறார்கள். காங் மன்னர் பாம்புகளுக்கும், பூச்சிகளுக்கும் கரிசனம் காட்டியவர். அரண்மனைகளில் அவருடன் சேர்ந்து பாம்புகளும், பூச்சிகளும் வாழ்ந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    இப்படி பாம்புகளுடன் அதிகமாக பொழுதைக் கழித்த காங் மன்னர், 65 வயதில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த பாம்புக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதை புத்த துறவி ஒருவர் கட்டி முடித்திருக்கிறார். மன்னரின் நினைவாக கட்டப்பட்டதால், நன்கொடை பலவழிகளில் இருந்தும் வந்திருக்கிறது. முதலில் காங் கோட்டையாக கட்டப்பட்ட இந்த இடம், பாம்புகளின் படையெடுப்பால் பாம்புக் கோவிலாக மாறிவிட்டது. அதனால் காங் மன்னர் சிலையுடன், பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏற்ற வசதிகளையும் செய்திருக்கிறார்கள். இதனால் கோவில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.



    பாம்பு நீச்சல் குளம் :

    கோவிலுக்குள் நுழைந்ததுமே ஒரு பிரமாண்ட மண்டபம் இருக்கிறது. அதில் அமர்ந்தபடி தான் வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வழிபடுகையில் அவர்களை நோக்கி பாம்புகள் ஊர்ந்து வருகிறது. அப்படி நிகழ்ந்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த நிகழ்வு எல்லா சமயங்களிலும் நிகழ்வதில்லை.

    ஒருசில பக்தர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டவுடன் கோவிலுக்கு பின்புறத்தில் இருக்கும் பாம்பு குளத்திற்கு பக்தர்கள் செல்கிறார்கள். அதில் கொடிய விஷமுள்ள பாம்புகள் வாலை சுருட்டியபடி படுத்திருக்கின்றன. உலகில் இருக்கும் அதிபயங்கரமான விஷப்பாம்புகளை, இந்த நீச்சல் குளத்தில் பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் விஷம் நீக்கப்பட்ட பாம்புகள்.

    ஆம்! 1950-ம் ஆண்டு வரை இந்தக் கோவிலில் விஷப்பாம்புகள் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது விஷம் நீக்கப்பட்ட பாம்புகளே இருக்கின்றன. இருப்பினும் பாம்பு கடித்து பக்தர்கள் இறந்த செய்தி பழைய வரலாற்றிலும் இல்லை. ஏன்.. இப்போதும் கூட பாம்புகள், பக்தர்களைப் பார்த்து கோபத்துடன் சீறியதாகவும் செய்தி இல்லை. அந்தளவிற்கு பாம்புகளை காங் மன்னர் வளர்த்திருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.



    புகை சூழ்ந்த கோவில் :

    நீச்சல் குளம், மரக்கிளை என கோவில் முழுக்க பாம்புகள் படர்ந்திருந்தாலும், அவை தூங்குவதற்காக பிரத்யேக ஸ்டாண்ட் அமைப்புகளை கோவில் நிர்வாகம் அமைத்திருக்கிறது. இரும்பு கம்பிகளை சுருள் வடிவில் வளைத்து, பாம்பு தூங்கும் இடமாக மாற்றி இருக்கிறார்கள். காலை முதல் மாலை வரை அங்கும் இங்குமாக சுற்றித்திரியும் பாம்புகளின் எண்ணிக்கை, இரவில் குறைந்து விடுகிறதாம். அதற்கான மர்மம் என்ன என்பது இதுவரை விளங்காமல் இருக்க, பினாங்கு கோவிலை மேலும் மர்மமாக்குகிறது.. ஊதுபத்தி புகை மண்டபங்கள்.

    கோவிலை பாம்புகள் நிறைத்திருப்பது போல, புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. புத்தமத வழிபாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி கலா சாரம், பினாங்கு கோவிலிலும் பின்பற்றப்படுகிறது. அதனால் பாம்புகளுக்கு இணையாக புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. எந்நேரமும் கோவில் புகைமூட்டமாக இருப்பதால், பினாங்கு கோவிலை... 'பினாங்கு வானம்' என்றும் அழைக்கிறார்கள். இதுதவிர 'அசூர் மேகம் நிரம்பிய கோவில்' என்றும் சிறப்பிக்கிறார்கள்.

    பாம்புகள் பக்தர்களை கடிக்காமல் இருக்க, கோவில் நிர்வாகத்தினர், ஊதுபத்தி புகைகளை பயன்படுத்துவதாகவும், புகையினால் பாம்புகள் மயங்கி கிடப்பதாகவும் ஒருசிலர் புகார் தெரிவித்தாலும், பாம்பு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமே இருக்கிறது. காங் மன்னரின் பிறந்த நாள் தான், இந்த ஆலயத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக திருவிழா சமயங்களில் விஷப் பாம்புகளும் குவிவதுதான் ஆச்சரியம்.

    என்ன தான் பாம்புக் கோவிலாக இருந்தாலும், பாம்புகளை கையில் தூக்கவோ, தொடவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏனெனில் பாம்புகளை பாதுகாக்கவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏராளமான சட்டத்திட்டங்களை கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.
    ×