search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்தி"

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர்.
    • பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக இயற்கை விவ சாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டாக பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்ற பொருட்கள் கடுமையான விலை ஏற்றம் அடைந்து உள்ளது. ஆட்கள் கூலியும் அதிகரித்து உள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத் தியாளர்கள், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    ஆனால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர். 

    ×