என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டணி கட்சிகள்"
- பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
- வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணிகளை நோக்கி நகர தொடங்கி விட்டன.
தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகள் மாறுவது வழக்கமானது தான். இந்த மாற்றங்களுக்கு திரை மறைவு ரகசியங்கள், வெளிப்படையான பிரச்சினைகள் காரணமாக அமையும்.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதாவும், தி.மு.க.வுடன் காங்கிரசும் சேர்ந்தன. இந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தன.
இதில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் இடம்பெற்றன.
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரசுக்கு 'சீட்'களை கேட்டு பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான தேர்தல் என்பதால் கூடுதல் தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தி.மு.க. முன்வராது.
அதற்கு காரணம் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் தடம் பதிக்க விரும்புவதால் கூடுதலான எம்.பி.களுடன் பாராளுமன்றத்தில் வலுவான கட்சியாக இருப்பதையே விரும்பும்.
இந்த நெருக்கடியில் தான் கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் 'சீட்' கிடைக்காவிட்டால் கூட்டணி மாறுவது பற்றி யோசிக்கலாம் என்ற மனநிலையில் காங்கிரசார் உள்ளனர்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் பலன் இல்லை என்றே நினைக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க பா.ஜனதா மேலிடம் வற்புறுத்துவதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.
டி.டி.வியும் வேண்டாம், ஓ.பி.எஸ்.சும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி தலைவர்களை சந்தித்து வலியுறுத்துவதால் பா.ஜனதா தலைவர்களும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.
முக்கியமாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர்செல்வம் தான் நமக்கு ஆதரவாக இருப்பார் என்ற கருத்தும் பா.ஜனதா தலைவர்களிடம் உள்ளது.
பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.
காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம், முன்னேறியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவற்றில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உள்ளது.
எனவே தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? என்ற தயக்கத்தில் இருக்கும் காங்கிரசையும், பா.ஜனதா கூட்டணியில் தொடர தயங்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து விடுவதற்கான வேலை டெல்லி அளவில் ஜரூராக நடப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் பட்சத்தில் பா.ம.க., தி.மு.க. அணிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். அந்த கட்சி காங்கிரஸ் அணியில் இடம் பிடிக்கும்.
இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் 2014 தேர்தலை போல் வருகிற தேர்தலிலும் பா.ஜனதா தனித்து விடப்படும். அது மும்முனை போட்டிக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டணி மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் எந்த அணியில் இடம் கிடைக்கும் என்று சில சிறிய கட்சிகள் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
- 2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும்.
- தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது, "அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க..., ஓ.பன்னீர்செல்வம் வாழ்க..." என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை. அவசியமும் இல்லை. அவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி வைப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றது. அதே போன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அ.தி.மு.க.வை இணைக்க பா.ஜனதா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காத நிலையில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனித்து போட்டி என்ற அண்ணாமலையின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு நாங்கள் தலைமை வகிக்கிறோம்.
2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும். தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.
அவர்கள் கட்சி நிலைப்பாட்டை பேச அவர்களுக்கு முழு உரிமை உண்டு. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்காரர்களை குஷிப்படுத்தவும் பேசி இருக்கலாம்.
எந்த கட்சி எங்களோடு இணைந்தாலும் சரி. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி விட்டார்.
எத்தனை கட்சிகளாக இருந்தாலும் சரி. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. எங்களோடு கூட்டணிக்கு வரும் போதுதான் அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
- இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.
இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நந்தனம் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.
- தேர்தல் பிரசாரத்துக்காக இந்த மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் அதற்கான பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது அரசியல் களத்தை கலகலக்க வைத்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த இரண்டு மாதத்தில் 3 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
கடந்த மாதம் மீண்டும் திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றார். மீண்டும் கடந்த மாதம் இறுதியில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்.
அப்போது பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி மற்றும் மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அரசியல் ரீதியாக அவர் ஆற்றிய உரை அரசியல் களத்தை அதிர வைத்தது.
இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். முன்னதாக காலையில் தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதற்காக நந்தனம் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.
பிரதமர் வருகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் திடலில் ஆலோசனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்திய விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் இறங்கும் இடம், அதை சுற்றிலும் உள்ள மரங்கள், கட்டிடங்களை பார்வையிட்டார்கள். மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் தரை இறங்கும். அதை நாளை தரையிறக்கி ஒத்திகை பார்க்க திட்டமிட்டு உள்ளார்கள்.
4-ந்தேதிக்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் இடம்பெற வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. மற்ற கட்சிகளிடமும் பேசி வருகிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை திரட்டும் வேலையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளார்கள்.
தேர்தல் பிரசாரத்துக்காக இந்த மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் அதற்கான பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
- இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக் மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக தேனீ, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரம்பத்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது
- பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
- தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.
மதுரை:
மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைக்க வேண்டும். அப்போதுதான் மீன்வளம் அதிகரிக்கும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி, தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.
எனவே எல்லா காலக்கட்டத்திலும் அதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மற்றும் கச்சத்தீவு என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.
அதன்படி பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கைகளை விடுக்க உள்ளேன்.
பா.ஜனதா கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். காமராஜர் தோல்வியுற்றபோது, நாம் தோற்று விட்டோமே என கட்சிக்காரர்கள் கூறினார்கள். அதற்கு காமராஜர், இதுதான் ஜனநாயகம் என பதில் அளித்தார்.
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. ஆனால் மோடி, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.
பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறி இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.
பா.ஜனதாவுக்காக நான் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. அ.தி.மு.க. தனது கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. ஆனால், பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
- பா.ஜனதா கட்சியின் ஆதரவை பா.ம.க. கோர முடிவு செய்துள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள பா.ம.க. தனது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவின் ஆதரவை கோரி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வருகிற 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாள். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
கடந்த 2019-ல் அ.தி.மு.க. ஆட்சியின் போதும் விக்கிரவாண்டி தொகுதி யில் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 ஓட்டுகள் பெற்று 44,924 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. 68,842 ஓட்டு வாங்கி தோல்வி அடைந்தது. அடுத்து 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.
இப்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட அ.தி.மு.க. 6,823 ஓட்டுகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது.
தொடர் தோல்வியாலும், பாராளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு கீழே போனதாலும் அக்கட்சிக்கு விக்கிரவாண்டி சோதனை களமாக மாறி உள்ளது.
சோர்ந்திருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், அ.தி.மு.க. களம் இறங்க உள்ளது.
இம்முறையும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்ச் செல்வன் போட்டியிடுவார் என தெரிகிறது.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. அங்கு போட்டியிட முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத நிலையில் 2026 சட்டசபை தேர்தல் வரை பா.ம.க. பா.ஜனதாவுடன் கூட்டணியில் நீடிக்கும் என தெரிகிறது.
அதற்கு ஏற்ப பா.ம.க. அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பா.ஜனதா கட்சியின் ஆதரவை பா.ம.க. கோர முடிவு செய்துள்ளது.
இது குறித்து முடிவு செய்வதற்காக பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என தெரி கிறது.
இதற்கிடையே பா.ம.க. விருப்பத்தை ஏற்று அக் கட்சிக்கு தொகுதியை விட்டுக்கொடுப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைமை இன்று முடிவெடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனால் பா.ஜனதா தலைமை இன்று முடி வெடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பா.ஜனதா வின் ஆதரவை கேட்டு பா.ம.க. பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் 8.14 சதவீத ஓட்டுகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண உள்ளது.
இதன் காரணமாக விக்கிரவாண்டியில் 4 முனை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது.
- மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
- சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.
மும்பை:
மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.
ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.
பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.
இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.
இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-
மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.
இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.
பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.
இவ்வாறு சரத்பவாா் கூறினார்.
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
- 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில் பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம்:
தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவள விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17-ந்தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அத்துடன் தி.மு.க. ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது.
கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.
அதன்படி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,
மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ், ஆதி தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசி ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற தி.மு.க.வினர் விருப்பத்தை நிறைவேற்றும் முக்கிய அறிவிப்பை, இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பொதுக்கூட்டம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
அத்துடன், 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில்பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
- தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
அதிமுக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு இன்னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை. தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
வாய்ப்பு கிடைத்தால் அவர் எப்படி இருப்பார் என்பது சொல்ல முடியாது.
தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இ்வவாறு அவர் கூறினார்.
- மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்.
- கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.