search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாண ராஜ்ய பிரகதி"

    • பா.ஜனதாவில் ஜனார்த்தன ரெட்டியை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
    • கங்காவதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் முறையாக தென்னிந்தியாவில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அப்போது சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. அதாவது ஆட்சி அமைக்க 114 இடங்கள் தேவையாக இருந்தது. ஆனால் பா.ஜனதா 110 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருந்தது. பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

    சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதில் முக்கியமாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் பல்லாரியில் நடந்த கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவும் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து, ஜனார்த்தன ரெட்டி பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார்.

    சிறையில் இருந்து வெளியே வந்தாலும் பல்லாரிக்கு செல்வதற்கு ஜனார்த்தன ரெட்டிக்கு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் தான் பல்லாரிக்கு அவர் சென்று வருகிறார். அரசியலில் ஈடுபடாமலும் அவர் ஒதுங்கி இருந்து வருகிறார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட ஜனார்த்தன ரெட்டி முடிவு செய்தார்.

    இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொப்பல் மாவட்டம் கங்காவதியில் புதிய வீட்டை வாங்கி அவர் குடியேறினார். பா.ஜனதாவில் ஜனார்த்தன ரெட்டியை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீதான ஈர்ப்பால் பா.ஜனதாவில் சேர்ந்தேன். தற்போது பா.ஜனதாவுக்கும், எனக்கும் இருந்த உறவு முறிந்து விட்டது. மாநிலத்தில் அடுத்த சட்டசபைக்கு தயாராகும் விதமாக 'கல்யாண ராஜ்ய பிரகதி' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளேன். நான் எந்த ஒரு புதிய வேலையை தொடங்கினாலும், அதில் வெற்றி பெற்றிருக்கிறேன். வரும் காலங்களில் சாதி, மதம், பிரிவினை வாதத்தால் யாரும் வெற்றி பெற முடியாது.

    பசவண்ணர் கூறிய தத்துவங்களின்படி அனைவரும் சமமானவர்கள். சாதி, மதத்தால் அரசியல் செய்ய முடியாது என்பதாலும், கர்நாடகத்தின் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் வைத்து கொண்டு 'கல்யாண ராஜ்ய பிரகதி' கட்சியை தொடங்கி உள்ளேன். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு எதிராகவே சிலர் சதி செய்தார்கள். கனிம, சுரங்க முறைகேட்டில் நான் ஈடுபடவில்லை. என்னை சிக்க வைத்தனர்.

    அழுத்தம் கொடுக்க மாட்டேன்

    நான் கஷ்ட காலத்தில் இருந்த போது முன்னாள் முதல்-மந்திரிகளான எடியூரப்பாவும், ஜெகதீஷ் ஷெட்டரும் மட்டும் ஆதரவாக இருந்தனர். வேறு யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை. புதிய கட்சிக்கு இன்னும் 15 நாட்களில் கொடி, சின்னம் கிடைத்து விடும். கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியிலேயே நான் போட்டியிட உள்ளேன். வாக்காளர் பட்டியலில் எனது பெயரை சேர்ப்பேன். மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    மந்திரி ஸ்ரீராமுலு எனது கட்சியில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். ஸ்ரீராமுலுக்கு பா.ஜனதா கட்சி மந்திரி பதவி உள்ளிட்ட உயர் பதவிகளை வழங்கி உள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்தாலும், பா.ஜனதாவில் இருந்து விலகி எனது கட்சியில் சேரும்படி ஸ்ரீராமுலுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டேன். பா.ஜனதாவில் இருக்கும் எனது சகோதரர்கள் 2 பேரையும் பலவந்தமாக என்னுடைய கட்சிக்கு வரும்படி அழைக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×