என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழை தேடி பிரசார பயணம்"
- வருகிற 23-ந்தேதி அன்று புதுச்சேரியில் ராமதாசின் பிரசார பயணம் நடைபெறுகிறது.
- புதுவையில் இருந்து கடலூர் வரையில் 3-ம் நாள் பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் மேற்கொள்கிறார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'தமிழை தேடி' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பள்ளிகள், பெயர் பலகைகள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.
எனவே அழிவின் விளிம்பில் இருந்து அன்னை தமிழை மீட்டெடுக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை முதல் மதுரை வரை தமிழை தேடி பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதன்படி டாக்டர் ராமதாசின் தமிழை தேடி பிரசார பயணம் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான பா.ம.க.வினர் திரண்டனர்.
பொங்குதமிழ் அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வரவேற்று பேசினார். முன்னாள் அம்பத்தூர் நகர்மன்ற தலைவர் கே.என்.சேகர், மு.ஜெயராமன், ஈகைதயாளன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் அறிஞர்கள் அரு கோயிலன், தமிழண்ணல் கோ.பெரியண்ணன், புலவர் சுந்தரராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் எழுதிய 'எங்கே தமிழ்' என்ற நூலை சீர்காழி சிவ சிதம்பரம் வெளியிட்டார். முதல் பிரதியை புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தமிழை தேடி பிரசார பயணத்தை தொடங்கினார்.
முதல்நாளான இன்று நுங்கம்பாக்கத்தில் தொடங்கி மறைமலைநகர் வரையில் ராமதாசின் பிரசார பயணம் நடைபெற்றது. வாகனத்தில் அமர்ந்திருந்தபடியே ராமதாஸ் பிரசார பயணத்தை மேற்கொண்டார்.
2-வது நாளான நாளை (22-ந்தேதி) மதுராந்தகத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கும் ராமதாஸ் திண்டிவனத்தில் முடிக்கிறார்.
வருகிற 23-ந்தேதி அன்று புதுச்சேரியில் ராமதாசின் பிரசார பயணம் நடைபெறுகிறது. புதுவையில் இருந்து கடலூர் வரையில் 3-ம் நாள் பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் மேற்கொள்கிறார்.
24-ந்தேதி அன்று சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வரையிலும், 25-ந்தேதி தஞ்சை குத்தாலத்தில் இருந்து கும்பகோணம் வரையிலும் ராமதாசின் பிரசார பயணம் நடைபெறுகிறது.
25-ந்தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் ராமதாஸ் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விரிவாக பேசுகிறார்.
வருகிற 27-ந்தேதி வல்லத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கும் ராமதாஸ் திருச்சியில் முடிக்கிறார். கடைசி நாளான 28-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ராமதாசின் பிரசார பயணம் தொடங்குகிறது. அன்று மாலையில் மதுரையில் தமிழை தேடி பிரசார பயணத்தை ராமதாஸ் நிறைவு செய்கிறார்.
இதில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிறைவு நாள் அன்று டாக்டர் ராமதாஸ் தமிழ் வளர்ச்சி தொடர்பாக முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.
இன்று முதல் 8 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பிரசார பயணத்தையொட்டி அந்தந்த பகுதிகளில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்று பேசுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்