search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே சாலை"

    • கனரக வாகனங்களால் பள்ளி குழந்தைகள் சாலையில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர்.
    • டாரஸ் வாகனத்தை குமரேசபுரம் காலனி பொதுமக்கள் சிறைபிடித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கடையம்:

    அம்பை மற்றும் தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே பீடர் ரோடு செல்கிறது. அது ரெயில்வே துறைக்கு சொந்தமான சாலையாகும்.

    இந்த சாலையில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சுமார் 80 டன் வரை கனிம வளங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை மீறி அதிகனரக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

    இதனால் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் அவ்வழியாக கேளையாப்பிள்ளையூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைகின்றன.

    சாலையின் அருகே உள்ள குமரேசபுரம் காலனி பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் கனரக வாகனங்களால் சாலையில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர்.

    தற்போது கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக நமக்கு நாமே திட்டத்தில் அச்சாலையை சீர் செய்ய கீழக்கடையம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் இயற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பூமிநாத் ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அச்சாலையை மேற்படி திட்டத்தில் சீரமைத்தாலும், மீண்டும் அளவுக்கு அதிகமாக எடை ஏற்றி வரும் டாரஸ் கனரக வாகனங்களை அச்சாலையில் அனுமதித்தால் மீண்டும் ஒரு மாத காலத்தில் சாலை பழுதாகி விடும்.

    கடந்த 7-ந் தேதி அன்று அந்த ரெயில்வே சாலையில் சுமார் 80 டன் பாரம் ஏற்றி வந்த கனிம வள டாரஸ் வாகனத்தை குமரேசபுரம் காலனி பொதுமக்கள் சிறைபிடித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தனர்.

    ஊராட்சி மன்றதலைவர் காவல்துறைக்கு தெரிவித்தார். உடனே கடையம் போலீசார், அந்த இடத்திற்கு வந்து ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை, ரெயில்வே துறைக்கு தெரிவிக்காமலேயே அந்த வாகனத்தை மீட்டு ஒவர்லோடுக்கு எடை போடாமல் வாகனத்தை திரும்ப சாலையில் பயணிக்க அனுப்பி வைத்துள்ளனர்.

    எனவே இனி வரும் காலங்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறி பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துகின்ற வகையில் ரெயில்வே பீடர் சாலையில் பயணிக்கின்ற வாகனங்களை ரெயில்வே காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வாகனத்தை எடைபோட்டு ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×