search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி திருவிழா"

    • ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
    • பக்தர்கள் கொடிக் கயிறு, சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது. இதனையொட்டி ஆற்றூர் அருகே பள்ளிக்குழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலில் இருந்து பக்தர்கள் கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    மேலும் முத்துக் குடை, தாலப்பொலியுடன், நாராயணா நாராயணா என்ற மந்திரம் முழங்க கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக சென்று ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு சென்றனர். கொடி கயிறை அர்ச்சகர் கருவறையில் பூஜையில் வைத்தார்.

    திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் வலம் வருதல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவில் சுவாமி ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து மாலை தீபாராதனைக்கு முன்னதாக கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    பின்னர் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் பவனி வருதலும், விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் இறுதி நாளான 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்காக கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
    • வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.

    முன்னதாக தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. கப்பரையானது சுமார் 5 கி.மீ. தூரம் கொண்டு வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.

    சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பின்னர், இரவு சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேற்று காலை முதலே கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாய்மேடு போலீசார் செய்திருந்தனர்.

    • மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை முதலே மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர்.

    மேலும் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்டு எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திகடன் செலுத்தினார். இதில் வீரப்பன் கொட்டாய், புதுக்காடு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர், கோவில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
    • கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த தேங்காய் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளி, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருமண வேள்வி கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.3 ஆயிரத்தில் தொடங்கப்பட்ட இந்த ஏலம் படிப்படியாக உயர்த்தி பக்தர்களால் ஏலம் கேட்கப்பட்டது. இறுதியில் ரூ.30ஆயிரத்திற்கு பக்தர் ஒருவர் அந்த தேங்காயை ஏலம் எடுத்தார்.

    கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த தேங்காய் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தேங்காயை வீட்டில் வைத்து பூஜித்தால் திருமணத்தடை, தொழில் விருத்தி, சகலஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த தேங்காய் ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டது.

    கடந்த கந்தசஷ்டி விழாவில் இதேபோல் ஏலம் விடப்பட்ட தேங்காய் ரூ.65 ஆயிரத்திற்கு பக்தர் ஒருவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கந்தசஷ்டி விழாவில் முருகன், தெய்வாணை திருமணம் பகலிலும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன், வள்ளி திருமணம் இரவிலும் நடைபெறக்கூடியது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருமணத்திற்கு வந்ததுபோல் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.

    • பங்குனி உத்திர திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
    • உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன்.

    தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். தென் மாவட்டங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்குச் செல்வர். சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.

    இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள்.

    கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர்.

    ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.

    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினழும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.

    • பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • 13-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடை பெற்றது.

    பின்னர் சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி, பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேச சென்ன கேசவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், பொறியாளர் அணி ரமேஷ், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் அனைத்து மண்டக படிதாரார்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழா இன்று தொடங்கி வருகிற 15 -ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாகள் நடைபெறும்.

    1- ம் திருநாளான இன்று பிராமணர் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. 2 ம் திருநாளான 6-ந் தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்ச்சாமித் தேவர் சார்பில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந் தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமுகம் சார்பில் பூதவாகனம் - காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 4- ம் திருநாளான 8- ந் தேதி மேடைத்தளவாய் கட்டளைதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5-ம் திருநாளான 9-ந் தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெறுவுள்ளது. 6-ம் திருநாளான 10-ந் தேதி அழகர் ஜூவல்லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும். 7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8 -ம் திருநாள் 12-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார்கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 8 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது.

    9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    10-ம் திருநாள் மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையரும், தக்காருமான சங்கர், செயல்அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

    • பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
    • பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள்.

    1. மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது பங்குனி நாளில்தான். ஆண்டுதோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

    2. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

    3. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

    4. மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

    5. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

    6. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

    7. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

    8. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    9. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

    10. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    11. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக் கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.

    12. காரைக்கால் அம்மையார் முக்தி யடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

    13. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாசேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல் வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திரு மழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    14. பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

    15. பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இன்று ( 5-ந்தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங் குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக் கல்யாணம் நடக்க உள்ளன.

    16. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலை பங்குனி உத்திரம் நடைபெற உள்ளது.

    17. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

    18. பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும். பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்ளன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

    19. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.

    20. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

    • இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்துக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களில் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இன்று ஒருநாளாவது தங்கள் குல தெய்வங்களான சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    குலதெய்வம் எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் உள்ளவர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமியை குலதெய்வமாக நினைத்து அங்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    குலதெய்வம் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்ச்சை கடனாக குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, ஆடு, கோழி, வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    பங்குனி உத்திரம் பெரும்பாலான கோவில்களில் நேற்று பகல் 11 மணிக்கு மேல் இன்று காலை 11 மணி வரை உத்திர நட்சத்திரம் உள்ளதால் ஏராளமானவர்கள் நேற்று தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள குன்று மலை சாஸ்தா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவெகு விமர்சையாக நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் அதிகாலை முதலே திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு மேல் தவசு காட்சிக்குச் சென்ற வள்ளியம்மனை அழைத்து வர சுவாமி புறப்படுதல், அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளி திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது.

    • பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குலதெய்வ வழிபாடு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காலை பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாஸ்தாவுக்கு மாலைசாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதற்காக வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக முந்தைய நாளே பக்தர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.

    அதன்படி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று காலை முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    இந்நிலையில் பக்தர்கள் இன்று அங்குள்ள ஆற்றில் புனித நீராடி, பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    மேலும் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன், பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ஆரியங்காவு சாஸ்தா கோவில், சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் அனைத்தலையூர் தென்னூர் அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.

    இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    பங்குனி உத்திர நட்சத்திரம் நேற்று தொடங்கி இன்று வரை நடக்கிறது. நேற்று பல கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி-கல்லூரிகளும் இன்று செயல்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் இன்று கார்-வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.

    • சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் அமையப் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும். இந்த விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் காலையில் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள்நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு, சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

    இதில் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி மயில் வாகனத்தில் பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடாகி பின்னர் அதே பரிவாரங்களுடன் வந்து இருப்பிடம் சேர்ந்தது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    மேலும் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி ஊராட்சியில் ஊருணி கரையில் உள்ள ஸ்ரீஊர்க்காவலன் சேவுகப்பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக 5 கரைதாரர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தின் கீழ் 2 நாட்கள் நாடகம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .திருவிழாவின் முத்தாய்ப்பாக 9 நாட்கள் தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடன், நாடகம் விடிய, விடிய நடந்தது.

    • பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு.
    • பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (5-ந் தேதி) பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்!

    முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.

    தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகுமிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்!

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். .

    அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத் தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலை யாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெரு மாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால், திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.*

    ×