search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் நிறுவனம்"

    • ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
    • புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.

    இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.

    புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.

    அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த மாதம் 17-ந் தேதி தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவின் பேரில் தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. அப்போது ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் அடைத்து பயன்படுத்திய பிளாஸ்டிக் பெட்டிகள், வெண்ணெய்டப்பாக்கள், பால் பாக்கெட்டுகள், சேத மடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஐஸ்கிரீம் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சுமார் 150 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பால் பண்ணை வளாகத்துக்குள் 4 இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.

    பால்பண்ணையில் 4 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் மூடிய கழிவு சேகரிப்பு கிடங்கு கிடப்பதாகவும் 5 ஆயிரம் சதுர அடி திறந்தவெளி பரப்பளவில் கழிவுகள் சேமிக்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தரப்பில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை நவீன முறையில் தினமும் கையாள்வதற்கு பேலிங் போன்ற முறைகளை கடைபிடிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால் அட்டைதாரர்கள் தாங்களாகவே மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.
    • ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கம்ப்யூட்டரில் இருந்து போலி மாதாந்திர அட்டைகளை அகற்ற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதை தொடர்ந்து ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வாடிக்கையாளர்கள் ரேஷன் கார்டு அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பின்னரே தங்களுடைய மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும்.

    மேலும் பால் அட்டைதாரர்கள் தாங்களாகவே மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.

    மேலும் ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆவின் நிறுவனம் தற்போது தினமும் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது.

    இதில் 4 லட்சம் லிட்டர் நீல நிற பால் பாக்கெட்டுகளும், 2 லட்சம் லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகளும், 7 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

    மாதாந்திர அட்டைகள் மூலம் பால் பாக்கெட் பெறுபவர்கள் அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.
    • வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இருவர் மீதும் அவதூறாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் இயங்கி வருகிறது.

    விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். இது தவிர பல ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

    ஆவின் அலுவலகத்தில் பால் திருட்டு அடிக்கடி அரங்கேறி வந்தது. இதனை தடுக்க பொது மேலாளர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

    இதில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு அருகே உள்ள திமிரி வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படும் பால் வண்டியில் பால் திருடிச்செல்வது தெரியவந்தது.

    இதனை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

    இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்ததில், ஆவினில் பால் திருட்டு தொடர் கதையாகி வருவது அம்பலமாகி உள்ளது.

    பால் திருட்டை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபோது வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    நேற்று அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது டி.என்.23 ஏ.சி. 1352 என்ற ஒரே எண்ணில் 2 வேன்களில் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றி கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 2 வேன் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் உடனடியாக வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவின் அலுவலகத்தில் இருந்த 2 வேன்களுக்கும் சீல் வைத்தனர்.

    தொடர்ந்து இன்று ஆவின் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வேன்களை ஆய்வு செய்தனர். இதில் பொய்யான பதிவெண் கொண்ட வேன் எது என்பது கண்டுபிடிக்கப்படும். இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்கள் என தெரிவித்தனர்.

    வேலூர் ஆவினில் பால் அளவு குறைந்தபடியே இருந்தது. இதனால் அனைத்து பால் வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். இந்நிலையில் நேற்று வேலூர் ஆவினில் இருந்து திமிரிக்கு இயக்கப்படும் வாகனங்களில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் இயக்குவது தெரியவந்தது.

    இதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வரையில் பால் திருடியிருப்பதும். இப்படி பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது வட்டார போக்குவரத்து துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒரே பதிவெண்ணில் இயங்கிய வாகனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணி அமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆவின் பால்பண்ணையில் பல மாதங்களாக வேலை வாங்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆவின் பால்பண்ணை முன் நேற்று போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆவின் நிறுவனமும் மறுக்கவில்லை.

    ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட குத்தகைத் தொழிலாளர் முறை தான். ஒரு நிறுவனத்திற்கோ, ஓர் அலுவலகத்திற்கோ குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்பட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் நேரடியாக நியமிக்காமல், மனிதவள நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட மனிதவள நிறுவனத்திற்கு வழங்குவது தான் குத்தகைத் தொழிலாளர் முறை. ஆவின் நிறுவனத்திலும் அப்படித்தான் பால்பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழிலாளர்களை மனிதவள நிறுவனத்திடமிருந்து ஆவின் அம்பத்தூர் பால்பண்ணை பெற்றுள்ளது.

    மனிதவள நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பிய போதும், அதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர்களிடமிருந்து ஆவின் நிறுவனம் வேலைவாங்கி உள்ளது.

    குழந்தை தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்கிய மனிதவள நிறுவனம், அதை உழைத்த குழந்தைகளுக்கு வழங்கவும் இல்லை; அதையும் ஆவின் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.

    ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டும்.

    குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன. தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் சட்ட விரோதமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    நாட்டின் நலனையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெளிமாநிலங்களில் இருந்து 2 லட்சம் கலப்பின ஜெர்சி கறவை மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது.
    • ஒவ்வொரு மாடுகளின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்தது.

    இந்த நிலையில் ஆவின் நிறுவனம் 1 லிட்டர் பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ.35-ம் எருமைப் பாலுக்கு ரூ.42 வீதம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்தது.

    அதே சமயம் தனியார் பால் கொள்முதல் மையங்களின் கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்யப்படுவதால் ஆவினுக்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    இதனால் பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் அரசு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில உடன்பாடு எட்டப்பட்டது. சில கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன் காரணமாக ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் இன்னும் தனியாரிடம் தான் பால் ஊற்றி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் தட்டுப்பாடு இன்னும் நிலவி வருகிறது.

    தற்போது உள்ள 9,673 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 3.99 லட்சம் பால் பண்ணையாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்கிறது. இந்த பால் போதுமானதாக இல்லாததால் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை பெருக்க விரிவான திட்டம் வகுத்து வருகிறது.

    அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து 2 லட்சம் கலப்பின ஜெர்சி கறவை மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாடுகளின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு பால் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வங்கி கடன் மூலம் ஜெர்சி மாடுகளை வாங்கி கொடுத்து பால் உற்பத்தியை பெருக்குவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. வங்கி கடனை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கறவை மாடுகளை வாங்குவதற்கு உதவி செய்யும்.

    இதற்காக பால் உற்பத்தியாளர்களின் மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கான வங்கி உத்தரவாதத்தை ஆவின் வழங்குவதுடன் பணத்தை திருப்பி செலுத்தும் தொகை உற்பத்தியாளர்களின் பால் பில்லில் சேர்க்கப்பட்டு பால் ஊற்ற, ஊற்ற அந்த பணம் மாதாமாதம் கழிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆவினுக்கு சங்கம் மூலம் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை.

    மதுரை

    மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் இருந்து வழக்கமாக பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். கடந்த 10 நாட்களாக, காலை 8 மணிக்கு செல்வதாக தெரிகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆவின் பால் கிடைக்கவில்லை. முகவர்கள் கால தாமதமாக வந்த ஆவின் பால் வாகனங்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாவட்டத்தில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால் 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால்களை அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் நிரந்தர ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள பால் தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குளறுபடிகள் மாநில அளவில் பிரதிபலித்தது.

    இந்த நிலையில் அமைச்சர் நாசர் இன்று மதுரை வந்தார். அண்ணாநகர் ஆவின் நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அமைச்சருடன் கலெக்டர் அனீஷ்சேகர், மேலாண் இயக்குநர் சுப்பையன் ஆகியோரும் உடனிருந்தனர்.

    ×