search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி ராஜ்பவன் மாளிகை"

    • கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார்.
    • ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

    ஊட்டி:

    தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவி, சில விளக்கங்கள் கேட்டு நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

    தமிழக அரசு சார்பில் 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னரை சந்தித்து உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

    கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கவர்னர், அந்த மசோதாவை நேற்று முன்தினம் அரசுக்கே திருப்பி அனுப்பினார். மேலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் அவர் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

    இதனால் கவர்னரை கண்டித்து ஊட்டி ராஜ்பவன் மாளிகையை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பிய கவனர்னரின் நடவடிக்கையை கண்டித்து நடக்கும் இந்த போராட்டத்தில் அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அரசியல் கட்சியினர் போராட்ட அறிவிப்பால் இன்று ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஊட்டி ராஜ்பவன் மாளிகையை யாரும் நெருங்க முடியாதபடி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    250-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜ்பவன் மாளிகை பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணித்தபடி இருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் ராஜ்பவன் மாளிகை அருகே வர முடியாதபடி ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை நீலகிரியை ஒட்டிய கேரள மாநில பகுதியான வயநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி அவர் காலை 7.30 மணிக்கே காரில் வயநாடு புறப்பட்டுச் சென்றார். அவர் செல்லும் வழியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க கவர்னரின் காரை பின் தொடர்ந்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் வாகனங்களில் சென்றனர்.

    இதற்கிடையே கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சிலர் காலை 8 மணிக்கு ராஜ்பவன் அருகே உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜ்பவன் மாளிகை நோக்கிச் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சிலர் கைதாக மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி வேனில் ஏற்றினர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    ×