என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யானை தாக்கி பலி"
- யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 26 வயது தெய்வானை யானை உள்ளது. இந்த கோவில் யானையை பராமரிக்க பாகன்களாக அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 46), ராதாகிருஷ்ணன் (57), செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை யானை பராமரிப்பு பணியில் பாகன் உதயகுமார் மட்டும் இருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பலுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன் (59) வந்துள்ளார்.
நேற்று மாலை யானை அருகே சென்றபோது சிசு பாலனை யானை தாக்கியது. அப்போது அதனை பார்த்த பாகன் உதயகுமார் அதனை தடுக்க சென்றபோது அவரையும் யானை தாக்கியதில் 2 பேரும் பலியாகினர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். இதற்கிடையே சக பாகன்கள் யானையை சாந்தப்படுத்தி கூடுதல் சங்கிலிகள் கொண்டு அதனை கட்டி போட்டனர். சிசுபாலன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் வங்கியில் பணி யாற்றி வருகிறார்.
இவரது தந்தை திருச்செந்தூரில் யானை பாகனாக இருந்ததால் சிறு வயது முதலே சிசுபாலன் யானைகளை பார்க்க வருவது வழக்கமாகும்.தெய்வானை யானை தங்குவதற்கு ராஜகோபுரம் பகுதியில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த குடிலின் பின் வாசல் வழியாக சிசுபாலன் சென்றுள்ளார். அப்போது அவர் யானையின் துதிக்கையில் முத்தம் கொடுத்தும், யானையின் முன்னால் நின்று தனது செல்போனில் 'செல்பி'யும் எடுத்துள்ளார்.
இதற்கிடையே ஏற்கனவே அந்த யானையிடம் சிசுபாலன் விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் மீது யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் நீண்ட நேரம் 'செல்பி' எடுத்ததால் ஆத்திரம் அடைந்த யானை அவரை துதிக்கை யால் சுற்றி வளைத்து தாக்கி யது. இதனை யானையின் பின்னால் நின்ற உதயகுமார் பார்த்து அதிர்ச்சியடைந்து சிசுபாலனை மீட்க சென்றுள்ளார்.
அப்போது பின்னால் இருந்து வேறு யாரோ வருகிறார்கள் என நினைத்து துதிக்கையால் அவரையும் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாகனும், சிசுபாலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னால் வந்த நபர் பாகன் உதயகுமார் என்பது தெரிந்ததும் பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.
சி.சி.டி.வி.காட்சிகள்
எப்போதும் யானை பாகன் மீது மிகுந்த பாசத்தில் இருந்து வருமாம். இந்நிலையில் கோபம் தணிந்ததும் பாகனை தாக்கியதை அறிந்த யானை குழந்தைபோல் கண்ணீர் விட்டு தன்னை கட்டிப்போட்ட இடத்தில் இருந்து மண்டியிட்டு உதயக்குமாரை துதிக்கையால் தூக்கியவாறு அவரை எழுப்ப முயன்றது.
பலமுறை இவ்வாறாக செய்தும் பாகன் எழுந்திருக்காததால் யானை கண்ணீர் விட்டபடி சோகத்தில் மூழ்கியது. அப்போது யானையை சாந்த படுத்திய சக பாகன்களை பார்த்து தெய்வானை யானை கண் கலங்கி நின்றது. இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
பாகன் உதயகுமார் தெய்வானை யானையுடன் மிகவும் அன்பாக பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே யானை அவருடன் வளர்ந்ததால் எப்போதும் அது அன்யோன்யமாக நடந்து கொள்ளும். தினமும் நடைபயிற்சியின் போதும், பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போதும் உதயக்குமாருடன் யானை விளையாடி கொண்டி ருக்கும்.
தொட்டியில் குளிக்கும்போதும், முகாம்களுக்கு சென்றி ருக்கும்போதும் யானை உதயக்குமாருடன் நெருங்கி பழகி விளையாடுமாம்.
பாகனை தாக்கிய வருத்தத்தில் யானை சோகமாக இருந்ததுடன் இரவு வரை சாப்பிடாமல் இருந்தது. சம்பவம் நேற்று மாலை 3 மணி அளவில் நடந்த நிலையில் இரவு 10 மணி வரை யானை உணவருந்தவில்லை. அதற்கு பின்னர் பாகன்கள் முயற்சியால் சிறிதளவு பச்சை ஓலையை சாப்பிட்டது.
இதுகுறித்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் கூறும்போது,சிசுபாலன் யானையின் முன்பு நின்று 'செல்பி' எடுத்தவாறு துதிக்கையில் முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது ஆத்திரத்தில் இருந்த யானை அவரை தாக்கி உள்ளது என்றார்.
தொடர்ந்து யானைக்கு மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், வனத்துறை மருத்துவர்கள் மனோகர், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து யானை குடிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தெய்வானை யானையை பராமரிப்பதற்காக நெல்லையப்பர் கோவில் யானை பாகன் ராமதாஸ் என்பவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் யானை இதுவரை பாகன்களையோ, பக்தர்களையோ தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. நேற்றும் அங்கு சென்ற பிற பாகன்களையோ மற்றவர்களையோ தாக்காத யானை சிசுபாலனை மட்டும் தாக்கியதன் காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடைசியாக பாகன் உதயகுமார் தெய்வானை யானை மீது தண்ணீர் காட்டும் காட்சி களும், தன்னை அறியாமல் பாகனை தாக்கியதை அறிந்த தெய்வானை யானை குழந்தை போல் கண் கலங்கிய காட்சிகளும் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அது பார்ப்பவர்கள் கண்களை கலங்க செய்யும் வகையில் உள்ளது.
- மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் ஊரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பிள்ளையார் பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
அதில் தென்னை, மாமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த தோட்டத்தின் காவலாளியாக சொக்கம்பட்டி அருகே உள்ள வளையல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூக்கையா என்பவர் வேலை பார்த்து வருகிறார். அங்கு அவர் சுமார் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
சமீப காலமாக தோப்பு அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரவில் தொடர்ந்து யானை வந்து கொண்டி ருந்தது. இதனால் இரவிலும் தோட்டத்தை காவல் காக்க வேண்டும் என்பதற்காக தோட்டத்தின் உரிமையாளர் பிள்ளையார் பாண்டி நேற்று இரவு மூக்கையாவை அழைத்துக்கொண்டு தோப்பிற்கு சென்றார்.
அங்கு மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. உடனே அதனை அவர் விரட்டினார்.
அப்போது யானை, மூக்கையாவை துரத்தியது. உடனே அவர் பதறியபடி ஓடியபோது தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் அவரை துரத்தி வந்த யானை மூக்கையாவை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூக்கையா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட பிள்ளையார் பாண்டி அங்கு இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் மூக்கையாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மூக்கையாவின் மனைவி மற்றும் அவரது 3 மகள்களுடன் சேர்ந்து ஊர் மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவரது இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி மறியலுக்கு முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அங்கு சென்று மறியலுக்கு திரண்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
- ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அன்னியாலம், தாசரிப்பள்ளி பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தல்.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.
கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தம்மா தோட்டம் வழியாக நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி பலியானார்.
தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வதம்மாவும் யனை தாக்கியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்னியாலம், தாவரக்கரை, தாசரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகராஜாகடை கிராமத்தை சாம்பசிவம் (வயது 55). விவசாயியான இவர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கொள்ளு பயிரை அறுவடை செய்வதற்கு இன்று அதிகாலை 4மணி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை திடீரென்று வந்து சாம்பசிவத்தை தாக்கி கொன்றுள்ளது. பின்னர் காலையில் தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு சாமபசிவத்தின் உடல் சிதைந்து உயிரிழந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மகாராஜா கடை போலீசாருக்கும் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது யானை தாக்கி உயிரிழந்த சாம்பசிவத்தின் உடலை உறவினர்கள் மீட்டு சாலையில் வைத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக ஒற்றை யானையை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி காட்டுப் பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வெளியேறி, கடந்த 25-ந் தேதி காவேரிப்பட்டிணம் பகுதிக்கு வந்தன. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த யானைகளை, வனத்துறையினர் காரியமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப்பகுதிக்கு விரட்டினர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணை அருகேயுள்ள போலுகுட்டை பகுதியில் முகாமிட்டிருந்த இரு யானைகளையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதனிடையே நெக்குந்தி வழியாக நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி நகரின் அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எதிரே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு இரு யானைகள் வந்தது.
இந்த யானைகள் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்ற உற்சாக குளியல்போட்டு விளையாடின. மேலும், ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும், வனத்துறையினர் ஏரியில் இருந்து யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்குள் வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்றிரவு அந்த 2 காட்டுயானைகள் ஏரியில் இருந்து வெளியேறி கிருஷ்ணகிரி நகரில் லைன்கொள்ளை பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார்.
- வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
தெப்பக்காடு, அபயராண்யம் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த யானைகளை அங்கு வசித்து வரக்கூடிய பாகன்கள் பராமரித்து வருகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவினை உருண்டையாக உருட்டி கொடுத்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்வது, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது என பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (வயது54). என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை பராமரித்தார்.
இவர் தினமும் காலையில் அந்த யானைக்கு, ராகி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பார். பின்னர் அந்த யானையை அங்குள்ள பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார். பின்னர் மீண்டும் முகாமுக்கு அழைத்து வருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார். பின்னர் அந்த உணவினை எடுத்து கொண்டு மசினி யானையின் அருகே சென்றார்.
பின்னர் அந்த யானைக்கு உணவை கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மசினி யானை பாகனை தாக்கி விட்டது. இதில் பாகன் பாலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த சக பாகன்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த பாலனை தூக்கி கொண்டு வனத்துறை வாகனத்தில் கூடலூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
- முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி ஒன்றியம் செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி புகம்பட்டியில் ராம்குமார் என்பவர் நேற்று யானை தாக்கி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ.நேற்று நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிதியுதவியில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்