search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா ஜவுளிப்பூங்கா"

    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
    • மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் இந்த பூங்கா அமைய இருக்கிறது.

     திருப்பூர்:

    பி.எம். மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா தமிழ்நாட்டில் விருதுநகரில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு ஏற்றுமதியாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பி.எம்.மித்ரா மெகா ஜவுளி பூங்கா தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜவுளித்தொழிலை மேம்படுத்துவதற்கு பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டுகள். மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல், ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பை செலுத்தி வருகிறார். மெகா ஜவுளிப்பூங்கா அமையும்போது ஜவுளித்துறையில் ஆடைகள் உற்பத்தியில் உலக அளவில் தமிழகத்தின் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.

    தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் 1,100 ஏக்கர் பரப்பளவில் இந்த மெகா ஜவுளிப்பூங்கா அமைய இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் இந்த பூங்கா அமைய இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பூங்கா அமைந்தால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுவதுடன் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெருகும்.

    திருப்பூரில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் பனியன் தொழில் நடத்துவதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மெகா ஜவுளிப்பூங்காவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சோலார் மின்திட்டம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் (பியோ) ஏ.சக்திவேல், பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எம். மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமைய இருப்பதாக அறிவித்ததற்கு பாராட்டுகள். ஜவுளித்துறையில் உற்பத்தி அதிகரித்து வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை எட்ட முடியும். மெகா ஜவுளிப்பூங்கா அமைப்பதன் மூலமாக வெளிநாட்டினர் ஆயத்த ஆடை உற்பத்திக்கு இந்தியாவை தேடி வரும் நிலை ஏற்படும்.

    இந்தியாவில் 7 மெகா ஜவுளிப்பூங்கா அமையும்போது, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும். உலக தரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்போது அடுத்த 3 ஆண்டுகளில் ஏற்றுமதி வர்த்தகம் சிறந்தநிலையை எட்டும். செயற்கை இழை ஆடை தயாரிப்புக்கு பி.எல்.ஐ. திட்டத்தின் சாதகமான அறிவிப்புவரும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மேலும் வளர்ச்சி பெற்று இந்தியாவின் பொருளாதாரம் ஏற்றம் பெறும் என்று கூறியுள்ளார்.

    ×